July 2017


பருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியாபாரிகள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பருத்தி நூலுக்கு 5 சதவீதமும், பாலிஸ்டர் நூலுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உற்பத்தி செய்த ஜவுளிப் பொருட்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜவுளித்துறை பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் கடைகளை அடைத்து 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 90 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பருத்தி நூலுக்கும், விசைத்தறி ஜவளித் தொழிலுக்கும் ஜி.எஸ்.டி.வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, கரூரில் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினர் 3வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்15 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.


ஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஏசியானில், புரூனை (Brunei), கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த 10 நாடுகளின் அரசுத் தலைவர்களையும் வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்படி அழைக்கப்பட்டால், வரும் குடியரசு தின விழா, 10 நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்துகொள்ளும் முதல் குடியரசு தின விழாவாக அமையும்.
ஆசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தென்சீனக் கடல் எல்லை தொடர்பாக வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனை ஆகிய நாடுகளுடன் சீனா சர்ச்சையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆசியான் கூட்டமைப்பு நாடுகளை குடியரசு தின விழாவுக்கு அழைக்கும் இந்தியாவின் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.


ஜி 20 உச்சி மாநாடு, முதலாளித்துவம், உலக மயமாக்கலுக்கான நடவடிக்கை என்று கூறி ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடும் எதிர்ப்புக்கு இடையே ஜி20 மாநாடு நேற்று ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் தொடங்கியது. மாநாட்டை எதிர்க்கும் மக்கள், “தலைவர்களை நரகத்திற்கு வரவேற்கிறோம்” என்ற பெயரில் போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தி வருகின்றனர். ஹேம்பர்க் நகர் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏராளமானவர்கள் போராடி வரும் நிலையில் நேற்று போராட்டக்காரர்கள் கார்களுக்கு தீ வைத்தனர். இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், கடைகள், மற்றும் சாலையில் இருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர்.
போராட்டம் தீவிரம் அடைந்ததால் சிறப்பு படையினர் அதிகளவில் வரவழைக்கப்பட்டனர். கண்ணீர் புகை குண்டு துப்பாக்கிகளுடன் வந்த அவர்கள் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை அவர்கள் கலைக்க முயன்றனர்.
போராட்டத்தின் போது காவல்துறையினர் 159 பேர் காயம் அடைந்திருப்பதாகவும், போராட்டக்காரர்களில் 45 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போராட்டம் தொடர்வதால் ஹேம்பர்க் நகர் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


ஈராக்கில் மொசூல் நகரை ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றும் போர் முடிவடைந்துள்ளது.
ஈராக் படைகள் ஒருபுறம் போரிட்டுக் கொண்டிருக்க, மறுபுறம், ஐ.எஸ் படையினர் மீது அமெரிக்க இராணுவ விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மொசூல் நகரத்தை ஈராக் அரசு கைப்பற்றியுள்ளது. இனி மொசூல் நகரை மறுகட்டமைப்பது என்பது பிரதமர் ((Haider al-Abadi)) ஹைதர் அல்-அபாதிக்கு ஒரு பெரும் சவால் என கருதப்படுகிறது. அத்துடன் ஐ.எஸ் அமைப்பினர் மீண்டும் பலம் பெற்று விடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் பிரதமருக்கு உள்ளது.


ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு இந்த ஆண்டுக்கான விளையாட்டு நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் பி.வி.சிந்து இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். அவருடைய பயிற்சியாளர் கோபிசந்துக்கு சிறந்த பயிற்சியாளர் விருது அளிக்கப்பட்டது. தடகள வீரர் மில்கா சிங்குக்கு “வாழும் வரலாறு” விருது அளிக்கப்பட்டது. ஆயினும் அவரால் அந்த விழாவுக்கு வர இயலவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முத்திரை பதித்த கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு கேம் சேஞ்சர் விருதும், துப்பாக்கிச்சுடும் வீரர் அபிநவ் பிந்த்ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மாரியப்பன் தங்கவேலு, வருண் பாரதி, தீபாமாலிக் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.


காஷ்மீரில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், விடுப்பு எடுத்து வீட்டில் இருந்த ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவி குண்டடி பட்டு உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை முதல் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். சக்கா டா பாஃக், (chakka da bagh) கார்ரி கர்மாரா (kharri karmara) ஆகிய பகுதிகளில் இந்திய நிலைகளை குறிவைத்து அவர்கள் சிறிய ரக பீரங்கிகளால் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலில் பூஞ்ச் பகுதியில் வசித்து வந்த கணவன் – மனைவிக்கு குண்டடி பட்டு இருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர் ராணுவ வீரர் முகமது சவ்காத் என்றும், அவர் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்த போது தாக்குதலில் உயிரிழந்து விட்டதாகவும் ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும், காலை ஆறரை மணி முதல் எல்லையில் சண்டை நீடித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள செயிண்ட் ஜான் காப் ஃபெர்ரா என்ற இடத்தில், நீஸ், நதிக்கருகில் அமைந்திருக்கிறது ‘வில்லா லே செத்ர’(Villa Les Cedres). இந்த மாளிகை Cedres என்பது பிரெஞ்சில் தேவதாரு மரங்களைக் குறிக்கும். வில்லா லே செத்ர என்றால் ‘தேவதாரு மரங்களடர்ந்த வில்லா’எனப் பொருள். இது 187 ஆண்டுப் பழமை கொண்டது. ஒரு காலத்தில் பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்ட்டின் ஓய்வு மாளிகையாக இருந்திருக்கிறது. ஆனால் இதெல்லாம் அல்ல இதன் சிறப்பு. இன்றைய தேதியில் உலகின் மிக விலை உயர்ந்த வீடு இதுதான். இதுதான் இதன் பெருமை. இதன் மதிப்பு 100 கோடி யுரோ.


பத்து படுக்கையறைகள், வரவேற்பு அறை, ஒரு பிரம்மாண்ட நடன அறை, ஒரு தேவாலயம், 50 மீட்டர் நீளம்கொண்ட நீச்சல் குளம், குளிர்காலத் தோட்டம், முப்பது குதிரைகளைக் கட்டுவதற்கான லாயம் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது இந்த வில்லா. அத்துடன், 35 ஏக்கரில் அமைந்திருக்கும் இந்த வில்லாவின் தோட்டங்கள் ஐரோப்பாவிலேயே மிக அழகானவை என்று வர்ணிக்கப்படுகின்றன. இருபது பசுமைக் குடில்கள், பதினைந்தாயிரம் அரிய தாவரங்கள் இந்த வில்லாவில் பராமரிக்கப்படுகின்றன.


வெறும் இரண்டாயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்ட இந்தப் பகுதி, எப்போதும் பிரபலங்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் பிடித்த இடமாக இருந்திருக்கிறது. இந்த வில்லாவில் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சார்லி சாப்ளின், எலிசபெத் டெய்லர் போன்ற சினிமா பிரபலங்கள், சோமர்செட் மாம், டேவிட் நிவென் போன்ற எழுத்தாளர்கள் தங்கியிருக்கிறார்கள்.


இந்தப் பத்து படுக்கையறை வில்லாவை விற்பதற்குக் கடந்த ஆண்டு முடிவுசெய்திருக்கிறார்கள். ‘கிராண்ட் மார்னியர்’ என்ற பிரபல மதுபானம் தயாரிக்கும் வம்சத்தினரின் கைவசம் இருந்த இந்த வில்லா, தற்போது கம்பாரி குழுமத்திடம் இருக்கிறது. அவர்கள் இந்த வில்லாவை விற்பதற்கு முடிவுசெய்திருக்கிறார்கள். இந்த வில்லா விற்பதால் கிடைக்கும் லாபத்தைப் பங்குதாரர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவுசெய்திருக்கிறது கம்பாரி நிறுவனம். இந்த வில்லா அமைந்திருக்கும் ‘செயிண்ட்-ஜான் -காப்- ஃபெர்ரா’வில் ஒரு சதுர அடி 2,00,000 யுரோக்களாக இருக்கிறது. இது உலகத்திலேயே மிக அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வில்லாவை வாங்குவதற்கு உலகளவில் கடும்போட்டி நிலவுகிறது.


புதுச்சேரியில் காங்கிரஸ் அரசின் பரிந்துரையின்றி பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்களை எம்.எல்.ஏ-க்களாக நியமிக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துகின்றன. இதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து இருக்கின்றது.

இதையடுத்து இன்று புதுச்சேரியில் முக்கிய வர்த்தக வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, குபேர் பஜார் மற்றும் மார்க்கெட் உள்ளிட்டப் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. பெட்ரோல் பங்க்குகள், திரையரங்குகள் போன்றவைகளும் செயல்படவில்லை. அதேபோல கிராமப்புறங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. ஆளுங்கட்சி ஆதரவு தெரிவித்து இருக்கிறது என்ற போதிலும் பந்த் போராட்டம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக என்பதால் நகர் முழுவதும் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.


தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் ஒன்றிரண்டு அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்தன. ஆனால் வெங்கடசுப்பா சிலையருகில் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி யாரோ சில மர்மநபர்களால் உடைக்கப்பட்டதால் அவைகளும் நிறுத்தப்பட்டது. அதேபோல நெல்லித்தோப்பு சந்திப்பு அருகில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றின் கண்ணாடியையும் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. பேருந்து நிலையத்தினுள் தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து ஒன்று சென்னை செல்லத் தயாராக இருந்தது. அப்போது அங்கு சென்ற தி.மு.க-வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தப் பேருந்தும் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நகரம் முழுவதும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நின்று மத்திய அரசுக்கு எதிராகவும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி வருகின்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது கிரண்பேடி மற்றும் பிரதமர் மோடியின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.


பெரிய பெரிய நகரங்களில் கோடிக்கணக்கில்,
பள பள பங்களாக்கள்…
8 லட்சம் டாக்டர்கள்…
8 லட்சம் சார்ட்டர்டு அக்கவுண்டெண்டுகள்…
2 லட்சம் எஞ்ஜினீயர்கள் மற்றும் எம்.பி.ஏ.க்கள்…
2.18 கோடி பேர் – கடந்த வருடம் “வெளிநாடு”களுக்கு
“ஹாலிடே டூர்” சென்ற இந்தியர்கள்…

( இதில் முக்கியமான இன்னொரு ரகமான,
வக்கீல்களை சொல்லாமல் விட்டு விட்டார்கள்…! )

– இத்தனை பேரில், வெறும் 32 லட்சம் பேர் மட்டுமே
வருடத்திற்கு 10 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பதாக கூறி,
வருமான வரி கட்டி இருக்கிறார்கள்….

-யாராவது இந்த எண்ணிக்கை உண்மையானது
என்று நம்புகிறீர்களா…?

—————————-
– இப்படி கேட்பது யாராவது எதிர்க்கட்சியினர் என்று
நினைத்து விட வேண்டாம்… ஆட்சி, அதிகாரத்தில்
இருப்பவர் தான் இத்தனை தகவல்களையும் தந்து,
கேள்வியையும் எழுப்புகிறார்…!!!

——————————————
“these people ( those who are cheating…) are
mostly salaried class people in government
or private companies….”

-இதுவும் அவரே சொல்வது….!!!
——————————————-

இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் எவரும்
வருமான வரி கட்டாமல் ஏய்க்க முடியாது….
சட்டம் அப்படி…?

Tax Deduction at Source – மாத சம்பளம்
வாங்குபவர்களின் வரியை பிடித்தம் செய்து அரசாங்க
கஜானாவில் செலுத்தும் பொறுப்பு சட்டப்படி
அவர்களுக்கு சம்பளம் கொடுப்பவர்களுடையது.

எனவே, இதைச்செய்ய தவறினால், அவர்கள் தான்
சிறை செல்ல வேண்டும் என்பதால் –
மாதச் சம்பளம் வாங்குபவர்கள் வரி கொடுக்காமல்
ஏமாற்றுகிறார்கள் என்று சொல்பவர் அரசுப் பதவியில்
இருக்கவோ, இதைப்பற்றி பேசவோ கூட
-தகுதியற்றவராகிறார்…!

நிஜத்தில், மாத சம்பளம் வாங்குபவர்களிடம் மட்டும் தான்
ஒழுங்காக வருமான வரி வசூலிக்கப்படுகிறது….

அப்படியானால் – ஏய்ப்பவர் யார்…?
அது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும்…

– பங்களா ஓனர்களின் லிஸ்ட் அரசிடம் இருக்கிறது….
– டாக்டர்களின் லிஸ்ட் அரசிடம் இருக்கிறது…
– எஞ்ஜினீயர்களின் லிஸ்ட் அரசிடம் இருக்கிறது…
– வக்கீல்களின் லிஸ்ட் அரசிடம் இருக்கிறது…
– வெளிநாட்டுகளுக்கு ஹாலிடே டூர் போனவர்களின்
லிஸ்ட்டும் அரசிடம் இருக்கிறது.

அவர்களின் பான் நம்பர் இருக்கிறது…
போன் நம்பர் இருக்கிறது….
ஆதார் நம்பர் இருக்கிறது…
வங்கி கணக்குகளின் விவரம் இருக்கிறது….
வருமான வரி கட்டுபவர்களின் லிஸ்ட்டும் –
அரசிடம் இருக்கிறது….ஆக மொத்தம் அவர்களைப்பற்றிய
அத்தனை விவரங்களும், அரசிடமே இருக்கிறது…!

இவற்றை கூட்டி, கழித்து, பட்டியல்களை வடிகட்டி –
இறுதியில் வரி கட்டாமல் ஏய்ப்பது யார் என்று
கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது….?

இதைச் செய்ய வேண்டியது மத்திய அரசா அல்லது
பொதுமக்களாகிய நீங்களும் நானுமா… ?

அரசாங்கத்தால் இதைச் செய்ய முடியவில்லை என்றால்
கையாலாகாத்தனத்தை ஒப்புக்கொண்டு,

ஏற்கெனவே அரசிடம் தயாராக இருக்கும்,
வருமான வரி கட்டுபவர்களின் பட்டியலை மட்டுமாவது
( அவர்கள் கட்டும் தொகையுடன் ), அரசின்
வலைத்தளத்திலேயே பொதுமக்கள் பார்க்க வெளியிடட்டும்.

யார் வரி கட்டி இருக்கிறார்கள்,
எவ்வளவு வரி கட்டி இருக்கிறார்கள்
என்கிற பட்டியலை பார்த்தால் –

அரசின் அங்கங்கள் வேண்டுமானால்,
தங்களுக்கு தெரியாதது மாதிரி நடிக்கலாம்.

கட்டாமல் ஏய்ப்பது யார் என்பதை பொதுமக்கள்
வெகு சுலபத்தில் கண்டு பிடிப்பார்கள்……சமூகத்தில்
கோடிக்கணக்கில் சம்பாதிப்பது யார் என்பதை அவர்கள்
பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

கண்டு பிடித்து அவர்களே அரசுக்கு லிஸ்ட் கொடுப்பார்கள்…
ரெடியா…?

வருமான வரி கட்டாமல் ஏய்ப்பவர்களின்
பட்டியலைத்தான் அரசால் கொடுக்க முடியாது…

வருமான வரி கட்டுபவர்களின் பட்டியலையாவது
கொடுக்கலாம் அல்லவா…?

அதை வைத்துக்கொண்டு, ஏய்ப்பவர்களின் பெயர்களை
மக்கள் அரசுக்கு தெரிவிப்பார்கள்….

அப்போதாவது அரசு, வரி கட்டாமல் ஏய்க்கிறார்கள் என்று
போலியாக புலம்பாமல், ஏய்ப்பர்களிடமிருந்து வரியை
வசூலிக்க நடவடிக்கை எடுக்குமா…?

—————————————————
சொந்தமாக தொழில் செய்பவர்கள்,
பெரிய பெரிய வர்த்தகர்கள்,
பெரிய பெரிய தொழிலதிபர்கள்,
சினிமா நட்சத்திரங்கள்,
வக்கீல்கள், டாக்டர்கள், எஞ்ஜினியர்கள்,
சார்ட்டர்டு அக்கவுண்டெண்டுகள்,
பரம்பரை பண முதலைகள்….


இவர்களை பிடிக்க மனமில்லாமல், வக்கில்லாமல் –
பொதுக்கூட்டங்களில் வாய்ச்சவடால் ஏன்…?
:காவிரிமைந்தன்


உள்நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனம் என்ற நிலையை வலுப்படுத்திக் கொள்ளவும் சர்வதேச விமானப்போக்குவரத்து சேவையில் நீண்ட கால அடிப்படையில் கால்பதிக்கவும் ஏர்-இந்தியாவை தாங்கள் வாங்குவது அவசியம் என்று இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
ஏர்-இந்தியாவை தனியார்மயமாக்க மத்திய அரசு கொள்கை அளவில் முடிவு செய்துள்ளது. 5
2 ஆயிரம் கோடி ரூபாய் கடனுடன் கூடிய ஏர்இந்தியாவை வாங்க, இண்டிகோ நிறுவனம் மட்டுமே முன்வந்துள்ளது. இந்நிலையில், ஏர்-இந்தியாவை வாங்கும் முயற்சி தொடர்பாக, தனது முதலீட்டாளர்களுக்கு இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சர்வதேச விமானப்போக்குவரத்து சந்தையில் நீண்ட கால அடிப்படையில் கால்பதிக்க ஏர்இந்தியாவின் சர்வதேச விமானப்போக்குவரத்து செயல்பாடுகள் கைகொடுக்கும் என்று இண்டிகோ உரிமையாளர்கள் ராகுல் பாட்டியாவும் ((Rahul Bhatia)) ராகேஷ் கங்வாலும் ((Rakesh Gangwal)) தெரிவித்துள்ளனர்.


புதுச்சேரியில் இணையதளம் மூலமாக மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைதுசெய்தனர்.
லாஸ்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் ஓ.எல்.எக்ஸ். இணையதளம் மூலம் மொபைல்போன் ஒன்றை வாங்குவதற்காக அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது சதீஷ்குமாரிடம் பேசியவர் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது பே.டி.எம். கணக்கில் செலுத்தும்படி கூறியுள்ளார்.
பணம் செலுத்தப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆகியும் மொபைல்போன் வராததால் இதுகுறித்து லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் சதீஷ்குமார் புகார் அளித்தார்.
விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார், உருவையாறு பகுதியை சேர்ந்த அர்ஜுனன் என்பவரை கைதுசெய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ஓ.எல்.எக்ஸ். இணையதளம் மூலம் மடிக்கணினி, மொபைல்போன் உள்ளிட்ட பொருட்களை விற்பனைசெய்வதாக விளம்பரப்படுத்தி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 4 மொபைல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரிட்ட தீ விபத்தில், முக்கிய ஆவணங்களும், கம்ப்யூட்டர்களும் எரிந்து நாசமாகின. நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்த அலுவலகத்தின் 4-ம் தளத்தில், வெள்ளியன்று மாலை திடீரென தீப்பற்றியது.
இதில் அங்கிருந்த ஆவணங்கள், கம்ப்யூட்டர்களில் தீப்பற்றி மளமளவென பரவியது. தகவலின்பேரில், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
உடனடியாக தீ கட்டுப்படுத்தப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும், 4-ம் தளத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களும், கம்ப்யூட்டர்களும் தீயில் எரிந்து நாசமாகின. விசாரணையில், மின்கசிவின் காரணமாக, தீப்பற்றியது தெரியவந்தது.


மனிதனுக்குப் பெயர் இருப்பதைப் போலதான், மொபைல் போனுக்கு IMEI (International Mobile Equipment Identity) எனச் சொல்லப்படும் 15 இலக்க எண் இருக்கிறது. இந்த எண் மூலம் மொபைல் போன் உற்பத்தியான நாடு, மொபைல் மாடல், தற்போது மொபைலில் எந்த நெட்வொர்க்கைச் சேர்ந்த சிம் பயன்படுத்தப்படுகிறது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். மேலும், இந்த எண்ணை வைத்து மொபைல் போன் தற்போது எங்கு உள்ளது, அந்த மொபைல் போனிலிருந்து எந்தெந்த எண்களுக்கு அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன போன்ற தகவல்களையும் அறிந்துகொள்ளவும், கண்காணிக்கவும் முடியும். இதனால்தான் மொபைல் போன் தொலைந்தால், அதனை ட்ராக் செய்வதற்காக IMEI நம்பர் குறித்த விவரத்தை காவல்துறையினர் கேட்பார்கள். பொதுவாக மொபைல் போனின் பேட்டரிக்குக் கீழ்ப்பகுதியில் இந்த IMEI எண் எழுதப்பட்டிருக்கும். மொபைல் டயல் பேடில் *#06# என டைப் செய்தும் IMEI எண் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளிடமிருந்து சில மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன. அந்த மொபைல்கள் அனைத்தும் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள கடையில் வாங்கப்பட்டவை என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ளவர்களிடம் பேசியது அந்த மொபைல் போன்களின் IMEI நம்பரை வைத்துதான் ட்ராக் செய்ய முடிந்தது. மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில், மொபைல் போன்களும் முக்கியமான சாட்சியங்களாகச் சேர்க்கப்பட்டன.

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப்பிறகு தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் IMEI மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது. IMEI எண் இல்லாத தரம்குறைந்த மற்றும் போலியான மொபைல்களுக்கு, நெட்வொர்க் சேவைகள் துண்டிக்கப்பட்டன. ஆனால் சில சமூகவிரோதிகள் போலியான IMEI எண் மூலம் தொடர்ந்து நெட்வொர்க் சேவையைப் பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. மொபைல் போனில் உள்ள ஒரிஜினல் IMEI எண்ணை அழித்துவிட்டு, போலியான எண்ணை சட்டவிரோதிகள் பயன்படுத்துகின்றனர். தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலியான ஐ.எம்.இ.ஐ எண்கள் பயன்பாட்டில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைக்கட்டுப்படுத்தும் விதமாக, மொபைலில் இருக்கும் IMEI எண்ணை அழித்தாலோ, போலியான எண்ணைப் பயன்படுத்தினாலோ, அதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க சட்டத்தில் மாறுதலைக் கொண்டுவர தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் உத்தேசித்து வருகிறது. மேலும், இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க இந்தச் சட்டமாறுதல் வழிவகுக்கும்.


பொதுவாக நெட்வொர்க் சேவையை வழங்கும் நிறுவனங்களின் உதவியுடன், IMEI எண் மூலமாக ஒரு மொபைலை ட்ராக் செய்ய முடியும். போலி IMEI எண்ணாக இருந்தால் அனைத்தையும் ட்ராக் செய்வது கடினமானது. ஒருவரின் தொலைந்துபோன மொபைல் சமூகவிரோதிகளிடம் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த மொபைலில் இருக்கும் சிம் கார்டை தூக்கி எறிந்துவிட்டு, புதிதாக ஒரு சிம் வாங்கி மொபைல் போனைப் பயன்படுத்த முடியும். திருடப்பட்ட மொபைல் மூலமாக சமூகவிரோதக் காரியங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது. இது தனிநபருக்கு மட்டுமில்லாமல் தேசத்தின் பாதுகாப்புக்குமே அச்சுறுத்தலாக மாற வாய்ப்பிருக்கிறது. இதைத் தடுப்பதற்காகத்தான் புதிதாகச் சில கட்டுப்பாடுகளைத் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் விதிக்கவுள்ளது.

இதன் ஒருபகுதியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பி.எஸ்.என்.எல் டெலிகாம் சர்க்கிள் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. CEIR (Central Equipment Identity Register) எனப்படும் டேட்டாபேஸில் தொலைந்த மொபைல் போன் மற்றும் IMEI எண் க்ளோனிங் செய்யப்பட்ட மொபைல்கள் குறித்த தகவல்கள் சேமிக்கப்படும். பிரச்னைக்குரிய மொபைல்கள் ப்ளாக்லிஸ்ட் செய்யப்படும். எந்தவொரு நெட்வொர்க் சேவை வழங்கும் நிறுவனமும், இதில் பதிவு செய்த மொபைல்களுக்கு சேவை வழங்காது. இதனால் திருட்டு மொபைல்கள் சிம் பயன்படுத்த முடியாமல் பயனற்றதாகிவிடும். தனிநபரின் தகவல்களும், தேசத்தின் பாதுகாப்பும் இதனால் உறுதி செய்யப்படும் என பி.எஸ்.என்.அல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பரிசோதனை முயற்சியாக இத்திட்டம் ஆறு மாதங்களுக்கு புனே நகரில் மேற்கொள்ளப்படவிருக்கிறது. ஏற்கெனவே இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறையில் இருக்கும் இந்தத்திட்டம் பலனளித்தால், நாடு முழுவதும் இது விரிவாக்கம் செய்யப்படும்.


கத்தார் மீதான தடையை திரும்பப் பெறும் விஷயத்தில் முடிவெடுக்க அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை 48 மணி நேரம் நீட்டிப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. 
தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக கூறி சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகள் கத்தார்நாட்டுடனான தங்கள் உறவுகளை முறித்து கொள்வதாக அறிவித்து, தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக்கொண்டன. இதனால் பெரும்பான்மையான உணவு பொருட்களுக்கு அண்டை நாடுகளையே சார்ந்திருந்த கத்தாருக்கு தற்போது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்னையை சுமூகமாக முடிக்க கத்தார் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கத்தாரை மையமாக கொண்டு செயல்படும் அல் ஜஸீரா செய்தி நிறுவனத்தை மூடுவது, ஈரானுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வது, கத்தாரில் அமைக்கப்பட்டுவரும் துருக்கி நாட்டின் ராணுவத்தளப் பணிகளை நிறுத்துவது, தீவிரவாத அமைப்புக்களுக்கு வழங்கிவரும் ஆதரவை நிறுத்துவது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை 10 நாட்களில் நிறைவேற்றினால், கத்தார் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்படும் என வளைகுடா நாடுகள் அவகாசம் அளித்திருந்தன. இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தநிலையில், கத்தார் - சவுதி இடையிலான விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்படும் குவைத் நாட்டு இளவரசரின் கோரிக்கையை ஏற்று கத்தார் மீதான தடையை திரும்பப் பெறும் விஷயத்தில் முடிவெடுக்க அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை 48 மணி நேரம் நீட்டிப்பதாக சவுதி அரேபியாதெரிவித்துள்ளது.


நாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கோவாவில் 2007ஆம் ஆண்டில் நிலவிய அரசியல் சூழல் தொடர்பாக, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்த அறிக்கை விவரங்களை தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தருமாறு அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மனோகர் பாரிக்கர் கோரியிருந்தார். இதுதொடர்பான வழக்கில், ஆளுநர் அறிக்கை விவரங்களை தெரிவிக்குமாறு மும்பை உயர்நீதிமன்றம் ஆளுநர் மாளிகைக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா ((Arun Mishra)), அமிதவ ராய் (Amitava Roy) அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ((Solicitor general)) ரஞ்சித் குமார் ஆஜராகி வாதிட்டார்.
அரசமைப்புச் சட்ட அதிகாரம் படைத்தவர்கள் என்ற வகையில், தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் நாட்டின் இறையாண்மை தொடர்பான கடமைகளை நிறைவேற்றுபவர்கள் என்பதால், தகவலறியும் உரிமைச் சட்டத்திலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என ரஞ்சித் குமார் வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது என கேள்வி எழுப்பினர். நாட்டின் தலைமை நீதிபதியை பொறுத்தவரை மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், அவரது அலுவலகமும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ஆளுநர்கள் ஏன் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படக் கூடாது என்றும் அவர்கள் வினவினர். நீதிபதிகள் நியமனம் தொடர்பான விவரங்கள், அரசுடனான தகவல் தொடர்புகள் போன்றவற்றை பகிரங்கப்படுத்தும் வகையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டுமா என்ற வழக்கு, அரசமைப்புச் சட்ட அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.


ஜி 20 உச்சி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. ஜி 20 மாநாடு ஹேம்பர்க் நகரில் இன்று தொடங்கி நாளை நிறைவடைகிறது. ஆனால் இது முதலாளித்துவத்துக்கான மாநாடு என்று கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹேம்பர்க்கில் போராட்டக்காரர்கள் நடத்திய ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்ததால் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விரட்டி அடித்தனர். போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீசாரின் வாகனங்கள் உள்பட சில கார்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கார்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் ஏராளமான கார்கள் தீயில் முற்றிலும் எரிந்து கருகி விட்டன. வன்முறை ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.


ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை குறைக்கக் கோரி, கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் 7வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், 300 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கையினால் செய்யப்படும் தீப்பெட்டிக்கு 5 சதவீதமும், பகுதி மற்றும் முழு இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் தீப்பெட்டிக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டுள்ளது. பகுதி மற்றும் முழு இயந்திர தயாரிப்பு தீப்பெட்டிகளுக்கு எவ்வித வேறுபாடு இல்லாமல் ஒரே அளவு வரி விதிக்கப்பட்டுள்ளது ஆலை உரிமையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தீப்பெட்டி மீதான ஜி.எஸ்.டியை 12 சதவீதமாகக் குறைக்க வலியுறுத்தி, கடந்த 1ஆம் தேதி முதல் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தின் காரணமாக 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 300 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் ஐ.எஸ். ஆரவாளர் என்று கூறி கைது செய்யப்பட்ட ஹாரூணின் சகோதரர்களுக்கு ராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஹாரூன் ரஷீத் என்பவரை, ராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 4ஆம் தேதி கைது செய்தனர்.
சென்னை பர்மா பஜாரில் கடை வைத்துள்ள ஹாரூன் ரஷீத், யானைகவுனியில் வைத்து கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக ஜெய்ப்பூர் கொண்டுசெல்லப்பட்டார்.
அவர், ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டி அனுப்பியதாக சந்தேகிக்கும் ராஜஸ்தான் போலீஸார், வங்கிப் பரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஹாரூணின் சகோதரர்களான, மண்ணடியைச் சேர்ந்த ராஜா முகமது, சிக்கந்தர் ஆகியோருக்கு, ராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளார்.
அதில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹாரூணின் பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரிப்பதற்காக அவரது சகோதரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


சென்னையில் வேளச்சேரி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி ,பள்ளிக்கரணை, ஒட்டியம்பாக்கம், சித்தாலபாக்கம், மணலி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், பூந்தோட்டம், நன்னிலம், குடவாசல் ஆகிய பகுதிகளில் நேற்று பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
நாகை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார், கொள்ளிடம் சுற்று வட்டாரப்பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
சிவகங்கை மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தையடுத்து புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட மூவருக்கு எம்.ஏல்.ஏ.க்களாக, ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கும் கண்டனம் தெரிவித்தும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரியும், புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு, சில அமைப்புகள் இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக சமூக வளைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து, புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு, கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


ஏவுகணை சோதனை வெற்றியை அடுத்து வடகொரியாவில் உற்சாகக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அண்மையில் வடகொரியா ஏவிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை அமெரிக்காவின் அலாஸ்கா வரை சென்று தாக்கக் கூடிய திறனுடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏவுகணை வெற்றியைக் கொண்டாடும் வகையில் தலைநகர் பியாங்யாங்கில் மாபெரும் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அரசின் உயர்மட்ட அதிகாரிகள், ராணுவவீரர்கள், ஏவுகணையை வடிவமைத்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக வண்ணமிகு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பங்கேற்ற வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


ரயில்வே உணவக டெண்டர் முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து 12 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது கடந்த 2006 ஆண்டு ராஞ்சி மற்றும் பூரியில் ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் இந்திய ரயில்வேயின் உணவக மற்றும் சுற்றுலா கழகத்துக்கு சொந்தமான உணவகங்களின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பான டெண்டர்களை தனியர் ஓட்டல் நிர்வாகங்களுக்கு கொடுத்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, அவர்களின் மகனும் பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி.யின் அப்போதைய நிர்வாக இயக்குநர் தனியார் ஓட்டல் நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து பாட்னாவில் உள்ள லாலுபிரசாத் குடும்பத்தினரின் வீடுகள் ஐ.ஆர்.சி.டி.சி. முன்னாள் நிர்வாக இயக்குநர் வீடு உட்பட டெல்லி, பாட்னா, ராஞ்சி, குர்கான் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று காலை முதல் சி.பி.ஐ சோதனை நடைபெற்று வருகிறது.


திரையரங்குகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் நாளை முதல் திரையரங்குகள் செயல்படவுள்ளன.
எனினும் கேளிக்கை வரி ரத்து செய்யப்படாத நிலையில் ஏற்கனவே உள்ள கேளிக்கை வரியுடனான கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரியையும் சேர்த்தே கட்டணம் வசூலிக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
100 ரூபாய்க்கு மேல் கட்டணம் உள்ள டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் 100 ரூபாய்க்கு குறைந்த கட்டண டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதம் ஜி.ஏஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது,எனவே தற்போது 120 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட்டுகளின் விலை நாளை முதல் 28 சதவீத ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 150 ரூபாய்க்கு அதிகமாகவும் தற்போது 90 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட்டுகளின் விலை 18 விழுக்காடு ஜி.எஸ்.டியுடன் சேர்த்து நாளை முதல் 105 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


பெங்களூருவில் கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் இந்தி எழுத்துக்களை அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு நகரின் இரண்டு முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இடம்பெற்ற இந்தி எழுத்துக்கள் துணி, பேப்பர் உள்ளிட்டவற்றைக் கொண்டு, அண்மையில் மறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெங்களூரு Eco Tech Park பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த முகப்பு பெயர்பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துக்களை கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் அழித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் கன்னட மொழியில் பெயர் பலகை வைத்தால், பெங்களூருவிலும் இந்தியில் பெயர்பலகை வைக்க தயார் என்று கூறினர்.


தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில், ஒரு கிலோ தக்காளியின் விலை 80 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நிலவிய வறட்சி காரணமாக, அனைத்து வகையான விவசாயமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
தற்போது தக்காளி சீசன் என்றபோதிலும், வறட்சி காரணமாக தக்காளி விவசாயம் பாதிக்கபட்டு ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது.
இவ்வாறு இறக்குமதியாகும் ஆந்திர தக்காளி, கிலோ 70 ரூபாய் முதல் 85 ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் சந்தையிலேயே ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்கப்படுவதால், அவற்றை வாங்கி வெளி மாவட்ட சந்தைகளில் விற்பனை செய்ய வியாபாரிகளே தயக்கம் காட்டி வருகின்றனர்


ராமர் கோவில் கட்டும் பணிகளுக்காக என்று கூறி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு அயோத்தியில் மீண்டும் கற்களை குவித்து வருகிறது.
பாபர் மசூதி-ராமர் கோவில் பிரச்சனையில், சர்சைக்குரிய இடத்தில் உள்ள நிலை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், ராமர் கோவில் கட்டுவதற்காக வெளிமாநிலங்களில் இருந்து அயோத்திக்கு கற்கள் கொண்டுவரப்படுவதை, உத்தரப்பிரதேசத்தில் முன்பு ஆட்சிப் பொறுப்பில் இருந்து சமாஜ்வாதி அரசு அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து அயோத்தி ராம்சேவக்புரத்திற்கு படிகப்பாறைக் கற்கள் வந்திறங்கியுள்ளன. ராம பக்தர்கள் பணத்திற்கு பதிலாக கற்களாகத் தருமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கற்கள் வந்திறங்கியிருப்பதாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததன் பிறகு, வெளிமாநிலங்களில் இருந்து அயோத்திக்கு கற்கள் கொண்டுவர அனுமதிக்கப்படுவதாகவும், ராமர், பசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரசு ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் இது சாத்தியமாவதாகவும் விஸ்வ இந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா தெரிவித்துள்ளார்.


8 மணி நேர வேலை, மற்ற அரசு பணியாளர்களுக்கு நிகரான ஊதியம், காலி பணியிடங்களை நிரப்புதல், உயர் அதிகாரிகளுக்கு சேவகம் செய்யும் ஆர்டர்லி முறையை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று காவலர்கள் பெயரில் அண்மைக்காலமாக வாட்ஸ் அப், பேஸ் புக் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
கோரிக்கைகளுக்காக போராடுவதற்காக, காவலர் சங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன. கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை நடைபெறும்போது, காவலர்களின் குடும்பத்தினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவார்கள் என்று சென்னை திருச்சி உள்ளிட்ட இடங்களில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் காவலர்களின் குடும்பத்தினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடக்கூடும் என்பதால் இன்று முதல் காவல் துறை மானியக் கோரிக்கை நடைபெறும் 3 நாட்களுக்கும் காவலர்கள் யாருக்கும் விடுமுறை அளிக்க கூடாது என டிஜிபி டிகே.ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். மேலும் டிஜிபி உத்தரவை மீறி விடுப்பு எடுப்பவர்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், காவலர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் தலைமைச் செயலகத்தின் முன்பு திரண்டு, முதலமைச்சரிடம் மனு கொடுக்கப் போவதாகக் கூறி உள்ளே நுழைய முயன்றனர். முன்னெச்சரிக்கையாக கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், தலைமைச் செயலகத்தினுள் நுழைய முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தலைமைச் செயலகத்தில் திரண்ட காவலர்களின் குடும்பத்தினர் வண்டிகளில் ஏற்றப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட 3 பெண் போலீசாரை மட்டும், வடக்கு கடற்கரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, காவலர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் மெரினா கடற்கரையில் திரளலாம் என்பதால், அங்கு நுண்ணறிவுப் பிரிவு மற்றும் உளவுப் பிரிவினரின் கண்காணிப்பு உள்ளது. இதையும் மீறி கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகைகளில் போலீஸாரின் கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


மேற்கு வங்கத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 144 தடை தொடர்ந்து அமலில் உள்ளது. ஃபேஸ்புக்கில் ஒரு மதத்தைப் பற்றி மற்றொரு பிரிவினர் இழிவாகப் பதிவிட்டதையடுத்து வடக்கு 24 பர்கானாஸ் ((Parganas)) மாவட்டத்தில் உள்ள பாதுரியா என்ற பகுதியில் இரு தரப்பினரிடையே கலவரம் உருவானது.
இதையடுத்து, ((Baduria)) பாதுரியா, ((Basirhat)) பசிர்ஹட் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் தீ வைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அத்துடன், பாதுரியா காவல்நிலையமும் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு 4 கம்பெனி எல்லை பாதுகாப்புப் படையினரும், மத்திய துணை ராணுவப்படையினர் 400 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கலவரம் நடந்த பகுதிகளில் நேற்று 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்றும் தொடர்ந்து அமலில் உள்ளது.
மேலும், சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்டர்நெட் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.


புதுச்சேரியில் நியமன எம்.ஏல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கண்டனம் தெரிவித்து, புதுச்சேரி வில்லியனூரில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநில தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட மூவரை எம்.ஏல்.ஏ.க்களாக, மத்திய உள்துறை அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. ஆனால் இந்த மூன்று பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்தால், மூன்று பேருக்கு ஆளுநர் கிரண்பேடியே நேற்று முன்தினம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கும் கண்டனம் தெரிவித்தும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரியும், புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.


தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் பைப் லைனில் கசிவு ஏற்பட்டு குடிநீருடன் கச்சா எண்ணெய் கலந்து வந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 30ஆம் தேதி ஓ.என்.ஜி.சி.யின் பைப் லைன்களில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்ததால் போராட்டம் வெடித்தது.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேரை விடுவிக்கக் கோரி கிராம மக்கள் கடந்த 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் இன்று ஓ.என்.ஜி.சி.யின் மேலும் ஒரு பைப் லைனில் கசிவு ஏற்பட்டு குடிநீரில் கச்சா எண்ணெய் கலந்து வருகிறது. குடிநீர் எடுக்கச் சென்ற மக்கள், கச்சா எண்ணெய் கலந்து வருவதால் ஆத்திரமடைந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.


அருணாச்சல பிரதேசத்தில் சட்ட விரோதமாக பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஓப்பியம் போதைச்செடிகள், தமிழக அதிகாரி ஒருவரின் முயற்சியால் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த காடுகளை கொண்ட அருணாசலபிரதேசத்தின் இரு மாவட்டங்களில் தான் சுமார் 1150 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த போதை செடிகள் பயிடப்பட்டிருந்தது..!
அடர்ந்த காடுகளை முற்றிலும் அழித்து அதில் ஹெராயின் போதை பவுடருக்கான மூலப்பொருளான ஓப்பியம் செடி வளர்க்கப்படுவதை ஐதராபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சேட்டிலைட் மூலம் படம் பிடித்தது. இது தொடர்பாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு சில மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவிக்கப்பட்டது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல் படும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் தென்னிந்திய தலைவர் வெங்கடேஷ் பாபு தலைமையிலலான சிறப்பு தனிப்படையினர் சேட்டிலைட் படத்தை அடையாளமாக கொண்டு அருணாச்சலபிரதேசத்தின் நம்சாய் மற்றும் லோகித் ஆகிய இரு மாவட்டங்களின் காட்டுப்பகுதியில் மிக நீண்ட தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் .
சுமார் 5 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காட்டுக்குள் நடந்து சென்ற பின்னர் அங்குள்ள சமூக விரோதிகள் சுமார் 1150 ஏக்கர் காட்டை அழித்து ஓப்பியம் போதைச்செடி பயிரிடப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அருணாச்சல் பிரதேச மாநில காவல்துறை மற்றும் துணை ராணுவப்படை ஒத்துழைப்புடன் தமிழக அதிகாரி வெங்கடேஷ் பாபுவின் படையினர் அதிரடியாக உள்ள நுழைய… சட்டவிரோதமாக போதைச்செடி பயிரிட்டுள்ள சிலர் மரங்களை வெட்டிப்போட்டு பாதையை மறித்துள்ளனர் , ஒருவர் ஆயுதத்துடன் தாக்குதல் நடத்த பாய்ந்ததால் பரபரப்பு தொற்றியது என்கிறார் வெங்கடேஷ் பாபு
அந்த நபரிடம் இருந்து ஆயுதத்தை பறிமுதல் செய்த தனிப்படையினர் அங்கு பயிரிடப்பட்டிருந்த ஓப்பியம் செடிகளை கம்பால் அடித்து அழித்துள்ளனர். பக்கத்து மாவட்டங்களில் இருந்து தன்னார்வ இளைஞர்களை அழைத்து வந்து சுமார் இருபது நாட்கள் அங்கு தங்கி இருந்து போதைச்செடிகளை அழித்துள்ளனர் வெங்கடேஷ் பாபு குழுவினர்
இந்த அதிரடி வேட்டையில் சுமார் 2792 கிலோ ஹெராயின் போதை பொருளை தரகூடிய ஓப்பியம் செடிகளை அழித்தது வெங்கடேஷ் பாபுவின் தனிப்படை. அழிக்கப்பட்ட போதை செடியின் சர்வதேச மதிப்பு 5 ஆயிரத்து 584 கோடி ரூபாய் என்கிறார் வெங்கடேஷ்பாபு
ஒரு பக்கம் சட்ட விரோதமாக பயிரிடப்படும் போதைச்செடிகள் அழிக்கப்பட்டாலும், இந்த செடியில் இருந்து எடுக்கப்படும் பொருட்கள் மூலம் வலி நிவாரணி மருந்துகள் தயாரிக்க பயன்படுவதால் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் சட்டப்பூர்வமாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் அவை பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டும் வருகின்றன.
போதையால் பாதைமாறும் இளைய சமுதாயத்தை ஹேராயின் போன்ற கொடிய போதைவஸ்துகளின் பிடியில் இருந்து காப்பதே தங்களின் லட்சியம் என்கிறார் வெங்கடேஷ் பாபு..!


சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது ரஷ்யா ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் இருந்து ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவில் இருந்து டபோலவ் 95 ரக விமானம் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட கே ஹெச் 101 ஏவுகணை மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் இருப்பிடம் தகர்க்கப்பட்டதாகவும் ரஷ்யா மேலும் தெரிவித்துள்ளது. ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற உள்ள ஜி20 மாநாட்டில் அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் சந்தித்துப் பேச உள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


தேவைப்பட்டால் வடகொரியா மீது படை பலத்தை உபயோகிக்க தயார் என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா கூறியுள்ளது. நீண்ட தூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக வடகொரியா அறிவித்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்துவதற்காக படை பலத்தை உபயோகிக்க தயார் என்று கூறினார். ஆனால் உலகளாவிய தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட நிக்கி ஹாலே, அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளுடன் சேர்ந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


காவலர் சங்கம் வைக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தை காவலர்களின் குடும்பத்தினர் முற்றுகையிட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், சட்டப்பேரவையில் அந்தத் துறை மீதான மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் தொடங்க உள்ளது.
8 மணி நேர வேலை, மற்ற அரசு பணியாளர்களுக்கு நிகரான ஊதியத்தை வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல், உயர் அதிகாரிகளுக்கு சேவகம் செய்யும் ஆர்டர்லி முறையை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று காவலர்கள் பெயரில் அண்மைக்காலமாக வாட்ஸ் அப், பேஸ் புக் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் காவலர்களின் குடும்பத்தினர் காவல்துறை மாநியக் கோரிக்கை நடைபெறும் போது தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவார்கள் என்று சென்னை திருச்சி உள்ளிட்ட இடங்களில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.
தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள மற்ற அரசு ஊழியர்களுக்கு இருப்பது போன்று தங்களுக்கும் சங்கம் வேண்டும் என்கின்றனர் போலீசார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சீர்படுத்த வேண்டிய காவல் துறையினரே சங்கம் அமைத்தால் அது சீரழிவை தான் ஏற்படுத்தும் என்கின்றனர் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள்
அதே சமயம் காவலர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், சமூக வலைதல தகவல்களை பார்த்து சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் காவலர்களின் குடும்பத்தினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடக்கூடும் என்று நம்பப்படுவதால் இன்று முதல் காவல் துறை மானியக் கோரிக்கை நடைபெறும் 3 நாட்களுக்கும் காவலர்கள் யாருக்கும் விடுமுறை அளிக்க கூடாது என டிஜிபி டிகே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் டிஜிபி உத்தரவை மீறி விடுப்பு எடுப்பவர்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக சட்ட சபையில் மானியக் கோரிக்கை நடைபெறும் போது துறை சார்ந்த அலுவலகர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் அவர்களை அப்புறப்படுத்துவது போலீசாரின் பணி. ஆனால் போலீசாரே தங்களது கோரிக்கைக்காக போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், அவர்களை அப்புறப்படுத்துவது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.


நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, மீனவர்களின் ஒரு படகை மூழ்கடித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை 2 விசைப்படகுகளில் இருந்த 8 மீனவர்களை பிடித்துச் சென்றது.
மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் படகு ஒன்றையும் இலங்கை கடற்படையினர் மூழ்கடித்துள்ளனர். மீனவர்கள் கடலில் குதித்து தப்பிய போது ஒருவர் மட்டும் பிடிபட்டதாகவும், 3 பேர் மாயமாகி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.