வறட்சியற்ற தமிழகத்தை உருவாக்க நீர் கல்வி இயக்கத்தை அரசு நடத்த வேண்டும்: 'தண்ணீர் மனிதர்' வலியுறுத்தல்.


தமிழகத்தை வறட்சியற்ற மாநிலமாக மாற்ற வேண்டுமானால் நீர் கல்வி இயக்கத்தை (WATER LITERACY MOVEMENT) உருவாக்கி நடத்த வேண்டும் என்று தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர சிங், அம்மாநிலத்தின் சில பகுதிகளில் வறட்சியை போக்கி நீர்வளம் மிகுந்த இடமாக மாற்றியுள்ளார். இதனால் அவர் ‘இந்தியாவின் தண்ணீர் மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார். தண்ணீர் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ’ராமன் மகசேசே விருது’, தண்ணீருக்கான நோபல் பரிசு என்றழைக்கப்படும் ’ஸ்டாக்ஹோம் நீர்’ பரிசு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் மட்டுமல்லாமல் பல பகுதிகளிலும் தண்ணீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தி வருகிறார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்திருந்தபோது தமிழகத்தில் நிலவும் வறட்சி குறித்து தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு ராஜேந்திர சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது:
தற்போது தென்மாநிலங்கள் வறட்சியை சந்தித்துள்ளன. நாட்டுக்கு மிகப்பெரிய பேரிடராக வறட்சி மாறிவிட்டது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் தற்போதைய வறட்சி இயற்கையானது அல்ல. மனிதனால் உருவாக்கப்பட்டது. அரசாங்கத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களால் உருவாக்கப்பட்டதாகும். இதற்கு முன்னர் கூட வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்டிருப்பது வாழ்க்கைக்கே அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது பிராணவாயு குறைந்து, பிற விஷவாயுக்கள் அதிகமாகிவிட்டன.
தமிழகத்தை காப்பாற்ற…
மக்களுக்கு தேவையான தண்ணீர் இருக்கிறது. அதனை சிக்கனமாகவும், முறையாகவும் பயன்படுத்த அவர்களுக்கு தெரியவில்லை. எந்த வகையான பயிர்கள் தமிழகத்தில் வளரும் என்பதை வரையறுக்க வேண்டும். மழைக்கு ஏற்றார்போல பயிர்செய்ய வேண்டும். இல்லையென்றால் எவ்வளவு மழை பெய்தாலும் பலனில்லை.
ஆனால் தற்போது மழைக்கும் விளைவிக்கும் பயிர்களுக்கு தொடர்பில்லை. மழைக்கும் பயிருக்கும் தொடர்பில்லை என்றால் இழப்பு ஏற்படும். தமிழகத்தை வறட்சியற்ற மாநிலமாக மாற்ற நீர் கல்வி இயக்கத்தை நடத்த வேண்டும். தண்ணீர் பாதுகாப்பு, முறையான பயன்பாடு, மழைக்கும் பயிருக்குமான தொடர்பு ஆகியவை நீர் கல்வி இயக்கத்தில் முக்கியமாக இருக்க வேண்டிய அம்சங்கள் ஆகும்.
உடனடித் தீர்வு
தண்ணீரின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்வதும், தண்ணீருக்கான மரியாதையை வழங்குவதும், தண்ணீர்மீது பற்று வைப்பதுமே வறட்சியைப் போக்க தற்போதுள்ள ஒரே உடனடித் தீர்வாகும். இன்று தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த புரிதல் இல்லை. நீர் மீதான பற்று இல்லை. தண்ணீரைப் பாதுகாக்க யார் உதவி கேட்டாலும் உதவத் தயாராக இருக்கிறேன். அதேபோல தமிழகத்தில் வறட்சியைப் போக்க தமிழக அரசு உதவி கோரினால் கட்டாயம் உதவி செய்வேன் என்று அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.