கொடுத்த லஞ்சத்தை திரும்பப்பெற வாய்ப்பு…!!!


அண்மையில் எடுக்கப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள்,
இந்தியாவில் – காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட பல
அத்தியாவசிய சேவைகளைப் பெற மூன்றில் ஒரு பங்கு
பொதுமக்கள் லஞ்சம் கொடுப்பதாக தெரிவிக்கின்றன.

அதிக ஊழல் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகா
முதலிடத்திலும், ஆந்திரா இரண்டாவது இடத்திலும்,தமிழ்நாடு
மூன்றாவது இடத்திலும் ( ??? !!! ) உள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில் அதிகரித்துள்ள லஞ்சத்தையும்
ஊழலையும் ஒழிப்பதற்கு அம்மாநில அரசு – ” பீப்பிள் பர்ஸ்ட் ” என்ற அதிரடி திட்டத்தை கடந்த மே-25 ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது அரசு சேவையையும், சலுகையையும் பெறுவதற்கு பொது மக்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருந்தால் 1100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு அரசு சலுகைகளை
குறித்த விவரங்களும் தெரிவிக்கப்படுகிறது. இதில் 52,000 பேர்
‘சந்திரனா பீமா’ காப்பீடு திட்டம் குறித்து விசாரித்துள்ளனர். 6.2
லட்சம் பேர் சமூக நல ஓய்வூதியங்கள் குறித்தும், 9.5 லட்சம்
பேர் பொது விநியோக திட்டம் குறித்தும் விசாரித்துள்ளனர்.

பின் இந்தத் திட்டங்களை அமல்படுத்துவதில் அதிகாரிகள்
லஞ்சம் பெறுவதாக 3000 பேர் புகாரும் அளித்துள்ளனர். இந்த
அழைப்பு மையத்தில் 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள்
பணியாற்றுகிறார்கள்.

இந்தப் புகாரின் பேரில் உடனடியாக, சம்பந்தப்பட்டவர்களிடம்
விசாரணை நடத்தப்படும். லஞ்சம் பெற்றதை
ஒப்புக்கொண்டால், பணத்தை மக்களிடமே திருப்பி
கொடுக்குமாறு அறிவுறுத்தப்படும். இதைத்தொடர்ந்து
அதிகாரிகள், மக்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் சென்று
பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுகின்றனர்.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது,
” இந்தத் திட்டம் தொடங்கிய சில நாட்களிலே 12 அரசு
அதிகாரிகள் லஞ்சத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர். கர்னூல்
அருகே 10 பேரிடம் இருந்து வாங்கியிருந்த லஞ்சப் பணத்தை
ஊராட்சி அதிகாரி ஒருவர் திருப்பிக் கொடுத்தார். கடப்பா
மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களிலும் பொதுமக்களிடம்
இருந்து லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள், அதை திருப்பிக்
கொடுத்துள்ளனர்.

லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மனம் திருந்தி அல்லது மேல் விசாரணைக்கு பயந்து பணத்தை, வாங்கியவரிடமே திருப்பி கொடுத்தனர் என்றால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது.
லஞ்சம் வாங்கியதை ஊழியர் புகாரை மறுத்தார் எனில்,
விஷயம், விவரமான விசாரணக்கு உட்படுத்தப்பட்டு,
இலாகா ரீதியாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு வேளை புகார் கொடுத்தவர் பொய்யான புகாரை
அளித்ததாக நிரூபிக்கப்பட்டால், அவர் மீதும் நடவடிக்கை
எடுக்கப்படும்.

————————————————————
சில நடைமுறை பிரச்சினைகள் இருந்தாலும் கூட –
இந்த திட்டம் ஒரு நல்ல முயற்சியாகவே தெரிகிறது.

மாட்டிக் கொள்ள மாட்டோம் என்கிற தைரியத்தில் தான்
பெரும்பாலும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள்.

புகார் கொடுத்து ஒரு பயனும் இல்லை – லஞ்சம் கொடுக்காமல் காரியம் நடப்பதில்லை என்கிற நிலையில் தான், வேறு வழியின்றி, பொதுமக்களும் கொடுக்கிறார்கள்.
ஆனால், காரியம் முடிந்த பிறகு கூட, கம்ப்ளெயிண்ட் கொடுக்கவும், கொடுத்த லஞ்ச பணத்தை திரும்பப்பெற
வாய்ப்பும் இருக்கும் என்று தெரிந்தால்,

பொதுஜனம், அரசு ஊழியர் கேட்கிற லஞ்சத்தை
( தகுந்த ஆதாரங்களை ஏற்படுத்திக்கொண்டு ), கொடுத்து
தங்கள் காரியங்களை முதலில் சாதித்துக் கொள்ளலாம்.

காரியம் முடிந்த பிறகு, கம்ப்ளெயிண்டும் கொடுத்து விடலாம்.
சம்பந்தப்பட்ட பொது ஜனத்துக்கு காரியமும் முடிந்து விடும்.
கம்ப்ளெயிண்ட் கொடுப்பதால், அரசு ஊழியர் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டு பணமும் திரும்ப வரக்கூடும்.

இது வெறும் வெத்துவேட்டு அறிவிப்பு தான் என்று மக்கள்
நினைக்காமல் இருக்க, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும்
விதத்தில், சில நிர்வாக ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

இதற்காக, தனியே இலாகா ரீதியான அமைப்புகளை
உருவாக்க வேண்டும். புகார் கொடுத்தவர் எந்தவித
அச்சுருத்தலுக்கோ, தொல்லைகளுக்கோ ஆளாகாதபடி
பாதுகாக்கப்பட வேண்டும்.

சில நிகழ்வுகளுக்கு, சம்பந்தப்பட்டவர் பெயர்களை
வெளியிடாமல் நிறைய விளம்பரம் கொடுக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் – லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களிடையே,
தாங்கள் மாட்டிக்கொள்ளக்கூடிய ஆபத்து அதிகம் என்கிற பயம்
உண்டாகும். அவமானத்துக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும்
உட்பட வேண்டியிருக்கும் என்கிற அச்சம் – அவர்களிடையே
லஞ்சம் வாங்குகிற பழக்கத்தை குறைக்கலாம்…. தங்கள்
தவறான பழக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கு ஒரு
வாய்ப்பும் கிடைக்கலாம்.

ஆரம்பகால சூரத்தனத்துடன் நின்று விடாமல், அரசு நிர்வாகம்,
இந்த முயற்சியை தீவிரமாக, தேவைப்படும் மாறுதல்களுடன்
தொடர்ந்தால் – நாளாவட்டத்தில் இது ஒரு நல்ல
விளைவைத் தரும் என்றே தோன்றுகிறது.

—————————–
பின் குறிப்பு –
இந்த லஞ்சம் வாங்கும் விவகாரத்தில், தமிழகம் முதல் ரேங்கில்
இல்லையென்பது ஒரு ஆறுதல்….!!!அகில இந்திய அளவில், 3-வது ரேங்கில் இருக்கும் தமிழ்நாடும் இந்த மாதிரி எதாவது முயற்சிக்கலாமே…!!!
                                                                                                                        BY; காவிரிமைந்தன்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.