தினகரனுடன் மோதல் முற்றுகிறது.. எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்தா?


தினகரனை ஒதுக்கிவைப்பதாக எடுக்கப்பட்ட முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.
 
இந்த அறிவிப்பில் காட்டமான தினகரன் ஆதரவு எம்எல்ஏ பெரம்பூர் வெற்றிவேல், தினகரனை ஒதுக்க அமைச்சர்கள் உள்பட யாருக்கும் அருகதையில்லை. அவரை ஒதுக்க நினைத்தால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அது என்ன விபரீத விளைவுகள்? எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 122. சட்டப்பேரவையில் சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்த எண்ணிக்கை இது. சிறையில் சசிகலாவை சந்திக்கச் சென்ற டிடிவி தினகரனுடன் 10 எம்எல்ஏக்களும், ஒரு எம்பியும் சென்றனர். அந்த 10 எம்எல்ஏக்களும் தினகரனுக்கு ஆதரவு என்று சொல்லி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்காமல் போனால், ஆட்சியே கவிழ வாய்ப்புள்ளது. ஏனெனில் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பழனிசாமிக்கு குறைந்தபட்சம் 118 எம்எல்ஏக்கள் தேவை. 
ஆனால், டிடிவி தினகரனை சார்ந்தவர்களை நம்பி அதிமுக அரசு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். ஐந்து ஆண்டு ஆட்சி தொடரும் என்று மட்டுமல்ல. அடுத்த முறையும் தங்களின் அரசு மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி நடத்தும் என்றும் அவர் கூறியிருக்கிறார். 
தினகரன் ஒருபுறம் சசிகலாவைச் சந்திக்கப் புறப்பட்ட அதே வேளையில், இங்கே அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டு வெளியே வந்து, தினகரனை ஒதுக்கி வைப்பதாக கடந்த ஏப்ரல் 17ல் எடுக்கப்பட்ட முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கூறினர்.  குறிப்பாக, அதிமுக நிர்வாகிகள் யாரும் தினகரனைச் சந்திக்க மாட்டார்கள், யாருடைய பின்னணியிலும் ஆட்சி இயங்கவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார். 
ஆனால் சிறையிலிருந்து வெளிவந்த தினகரனை தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் டெல்லிக்கே சென்று நேரில் வரவேற்றிருக்கின்றனர். சென்னை விமான நிலையத்திலும், அடையாறில் உள்ள இல்லத்திலும் தினகரனுக்கு தடபுடலாக வரவேற்பு அளித்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள். சிறையில் சசிகலாவைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு என்றார். மேலும், அணிகள் இணைவதற்காக மேலும் 60 நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்று சசிகலா கூறியதாகவும் தெரிவித்தார். 
முதலில் ஒதுங்கிக் கொள்கிறேன் என்று சொன்ன தினகரன், தற்போது இரு அணிகளும் இணையும் என்று பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை. அதனால் மீண்டும் கட்சிப் பணி ஆற்றப் போகிறேன் என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார். அவர் கட்சிக்குள் தனது பிடியை இறுக்கமாக வைத்திருக்க ஒருபுறம் முயற்சிக்க, மற்றொரு புறம் அமைச்சர்கள் அவருக்குப் பிடி கொடுக்காமல் தங்களது பிடியில் கட்சியும் ஆட்சியும் இருப்பதாக உறுதியாகத் தெரிவித்து வருகின்றனர். 
இந்த மோதல் முற்றி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டாலும், பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏக்கள் ஆதரவினால் அரசைக் கவிழாமல் தடுத்து விடலாம் என்று எடப்பாடி தரப்பு கணக்குப் போடுவதாக கணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அப்படி ஒரு வேளை எடப்பாடி அரசு கவிழும் நிலை ஏற்பட்டால், ஆட்சிக்குக் கை கொடுக்க பன்னீர் செல்வம் அணியினர் வருவார்களா? அதன் மூலம் சசிகலா குடும்பம் அல்லாத ஒரு புதிய அதிமுக இணைப்பு உருவாகுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.