மண் திருடும் முதலாளிகள் – கண்ணீர் விடும் விவசாயிகள்.


தமிழகத்தில் நீர்நிலைகளில் இருந்து தூர்வாரப்படும் செம்மண் மற்றும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்குக் கொடுக்காமல், ஆயிரக்கணக்கான டிப்பர் லாரிகள் மூலம் நடைபெறும் கடத்தலை பொதுப்பணித்துறை அதிகாரிகள், தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பொருட்டு, குடிமராமத்துப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார். அவ்வாறு தூர்வாரும் போது கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களது தொழிலுக்கு இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தமிழக விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியில் உள்ளது கோட்டேரி ஏரி. இந்த ஏரியை தூர்வாரி அதன்மூலம் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தினால், தங்களது விவசாய நிலங்கள் பொன் விளையும் பூமியாக மாறும் என அப்பகுதி விவசாயிகள் எண்ணியிருந்த நிலையில், அவர்களது எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர் மணல் மாஃபியக்களும் அரசு அதிகாரிகளும்.
கோட்டேரி ஏரியில் மண்ணை அள்ளி விவசாயிகளுக்கு வழங்க மட்டுமே அனுமதி வழங்கியுள்ள நிலையில், செங்கல் சூளைகளுக்கு அதிகமாக கோட்டேரி ஏரி செம்மண் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினம்தோறும் ஆயிரக்கணக்கான டிப்பர் லாரிகளில் செம்மண், மணல் ஆகியவை 24 மணி நேரமும் கடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு கடத்தப்படும் மண் அப்பகுதியில் உள்ள செங்கள் சூளை முதலாளிகளுக்கு லோடு ஒன்று ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் புகார் அளித்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒருமாதம் மட்டும் தங்களுக்கு மண் அள்ள அனுமதி அளித்தால், ஓரளவாவது தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனக் கூறும் விவசாயிகள், ஆயிரக்கணக்கான டிப்பர் லாரிகளில் நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, ஓமலூரை அடுத்த கருப்பூர் பேரூராட்சிப் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்த நீர்சமுத்திர ஏரி, கடும் வறட்சியின் காரணமாக காலப்போக்கில் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு மைதானமாகவும், அதன்பின்னர் பேரூராட்சி குப்பைகள் கொட்டும் குப்பைக் கிடங்காகவும் மாறிப்போனது.
இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததோடு, கொஞ்ச நஞ்சம் கிடைத்த குடிநீரும் விசமாக மாறிப் போனது. துர்நாற்றம் வீசும் காற்றால் பல்வேறு நோய்களுக்கு ஆளான மக்கள், குளத்தை தூர்வாரி பழைய நிலைக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்தனர். இங்கு குப்பை கொட்ட நீதிமன்றம் தடைவிதித்தாலும், அதனை மதிக்காத பேரூராட்சி அதிகாரிகள் அங்கு தொடர்ந்து குப்பை கொட்டி வந்துள்ளனர்.
இந்த குளத்தில் கிடைக்கும் மண்ணை, செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்ய முடியாது என நினைத்ததாலவோ என்னவே நீர்சமுத்திர ஏரியை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. தற்போது தூர்ந்து போன குளங்களை சீரமைக்கும் முதலமைச்சர் கொண்டு வந்த திட்டத்தின் மூலமாவது குளத்தை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருபுறம் மணல் கொள்ளை, மறுபுறம் தூர்வாரப்படாத ஏரி என பாதிக்கப்படுவதென்னவோ விவசாயிகள் தன். இனியாவது அரசும் அரசு அதிகாரிகளும் விவசாயிகளின் துயர் துடைக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.