மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுப்பு: ஆபத்தானவர்கள் பட்டியலில் பெயர் இருப்பதாக அதிகாரிகள் விளக்கம்.


மலேசியாவுக்குள் நுழைய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவே அவர் விமானத்தில் இந்தியா திருப்பி அனுப்பப்படுகிறார்.
இது தொடர்பாக மதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி மகள் திருமண வரவேற்பு ஜூன் 10 சனிக்கிழமை மாலை பினாங்கில் நடைபெறுகிறது.
அதில் பங்கேற்க வந்த அழைப்பினை ஏற்று மலேசியாவுக்குச் செல்வதற்காக சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் வைகோ விசா கேட்டு விண்ணப்பித்தார். மலேசிய தூதரகம் கடந்த வாரமே வைகோவுக்கு விசா வழங்கி விட்டது.
அதன்படி நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு 11.55 மணிக்கு வைகோ தனது செயலாளர் அருணகிரியுடன் மலேசியா புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 6.30 மணிக்கு கோலாலாம்பூர் விமான நிலையம் சென்றடைந்தார்.
மலேசிய குடிவரவு சோதனையில் "நீங்கள் மலேசிய நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே எங்களது குடிவரவு மேல் அதிகாரிகளைச் சந்தியுங்கள்" என்று கூறி அங்கே அழைத்துச் சென்றார்கள்.
அங்கு இருந்த உயர் அதிகாரிகள், 'நீங்கள் இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்' என்று சொல்லி விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக பல கேள்விகளைக் கேட்டனர். 'இலங்கையில் உங்கள் மீது பல வழக்குகள் உள்ளன' என்று அதிகாரிகல் கூற, "இல்லை, நான் இந்தியக் குடிமகன்" என்று வைகோ கூறி பாஸ்போர்ட்டை காட்டிய போதிலும் அதனை அவர்கள் ஏற்கவில்லை.
"மலேசியா நாட்டுக்கு ஆபத்தானவர் என்ற பட்டியலில் உங்கள் பெயர் இருக்கின்றது. எனவே உங்களை மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது" என்று கூறி, வைகோவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டனர்.
இந்தத் தகவலைப் பேராசிரியர் ராமசாமிக்கு வைகோ தெரிவித்தார். அவரும் பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் யங்கும் எவ்வளவோ முயற்சித்தும் அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை.
"துணைப் பிரதமர் அலுவலகத்தில் இருந்தே எங்களுக்கு உத்தரவு வந்துவிட்டது. அவரை நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று சொல்லி, குடிவரவு அலுவலகத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைகோவை உட்கார வைத்தனர்.
"நீங்கள் இந்த இடத்தை விட்டு எழுந்துபோகக் கூடாது. உங்கள் செயலாளர் அருணகிரிக்கு மலேசியா விசா உள்ளது. அவர் முதல் மாடியில் உள்ள உணவகத்துக்குச் சென்று உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வரலாம்," என்று அதிகாரிகள் கூறினர்.
அதற்கு வைகோ, "நான் எதுவும் சாப்பிட விரும்பவில்லை" என்று சொன்னார். அதிகாரிகள் திரும்பக் கூறியபோதும் சாப்பிட மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இன்று இரவு 10.45 மணிக்கு சென்னை வந்து சேர்கின்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வைகோவை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மலேசிய அதிகாரிகள் செய்து உள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.