June 2017


தமிழக காவல்துறை டிஜிபியாக இருக்கும் டி.கே.ராஜேந்திரனின் பணிக்காலம் முடிந்ததால் வெள்ளிக்கிழமையோடு ஓய்வு பெற இருந்தார்.
தமிழகத்தின் அரசியல் சூழல் காரணமாகவும், குட்கா சர்ச்சை காரணமாகவும், இதுவரை காவல்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவாக அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் பரவலாக எழுந்தது.
இதையடுத்து, வியாழக்கிழமையன்று, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மூத்த 5 டிஜிபிக்களின் பெயர் பட்டியலோடு, டெல்லி சென்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய கூட்டத்தில் பங்கேற்றார்.
அதில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூத்த 5 டிஜிபிக்களின் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து, அதில், ஒருவரை மாநில அரசு தெரிவு செய்யலாம் எனக் கூறியது.
அந்த பட்டியலில், டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை, மூத்த 5 டிஜிபிக்களில், டி.கே.ராஜேந்திரனை தமிழக அரசு தேர்வு செய்தது. இதையடுத்து, பணி நியமன உத்தரவை எடுத்துக்கொண்டு, தலைமைச் செயலக அதிகாரி ஒருவர், மும்பைக்கு விமானத்தில் சென்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கையெழுத்து பெற்று ஒப்புதல் வாங்கினார்.
அங்கிருந்து விமானத்தில் மதுரைக் கொண்டு செல்லப்பட்ட உத்தரவில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் இருந்த முதலமைச்சரிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு டி.கே.ராஜேந்திரன் காவல்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி, தமிழக காவல்துறையின் பொறுப்பு டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன், இனி, இரண்டு ஆண்டுகளுக்கு நிரந்தர டிஜிபியாக பதவி வகிப்பார் என கூறப்பட்டிருக்கிறது. இதுவரையில், உளவுத்துறை டிஜிபியான டி.கே.ராஜேந்திரன், தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக பதவி வகித்து வந்தார்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி நியமிக்கப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரன், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, நிரந்தர டிஜிபியாக பதவியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


நள்ளிரவு முதல் அமலாக உள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை தொடர்ந்து, புதுச்சேரியில் திரைப்பட டிக்கெட்டுகளுக்கான புதிய கட்டணங்களை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் ஏசி திரையங்கில் பாக்ஸ் எனில், 175 ரூபாயும் ஏசியற்ற திரையரங்கில் 70 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏசி பால்கனி/டீலக்ஸ் எனில் 160 ரூபாயும் ஏசியற்ற திரையங்கில் 55 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு ஏசிக்கு 105 ரூபாயும் ஏசி இல்லை எனில், 45 ரூபாயும் கட்டணம். இரண்டாம் வகுப்பு ஏசிக்கு 80 ரூபாயும், ஏசி இல்லை எனில், 35 ரூபாய் கட்டணம். மூன்றாம் வகுப்பு ஏசிக்கு 50 ரூபாயும், ஏசி இல்லை எனில் 30 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஜி.எஸ்.டி. அமலாகவுள்ளதால், வணிக வரிச் சோதனைக்காக மாநில எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் அகற்றப்படவுள்ளன.
பொருட்களை ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு லாரிகளில் எடுத்துச் செல்லும் போது அவற்றுக்கு வணிக வரி செலுத்தப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்ய மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
ஆனால் தற்போது நாடு முழுவதும் அனைத்து வரிகளையும் உள்ளடக்கிய ஜி.எஸ்.டி. வரி சட்டம் நடைமுறைக்கு வருவதால் வணிக வரி சோதனை என்பது அவசியம் இல்லாமல் போய் விடும்.
பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு விடும் என்பதால் மாநிலம் கடந்து மற்றொரு மாநிலம் செல்லும் லாரிகளுக்கு இனி வணிக வரிச் சோதனை தேவையில்லை. எனவே அனைத்து மாநில அரசுகளும் வணிக வரிச் சோதனை சாவடிகளை நீக்கிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜூலை 1 முதல் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லாது என்ற தகவலை மத்திய நேரடி வரிகள் வாரியம் மறுத்துள்ளது. பல பான் கார்டுகளைக் கொண்டு வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது.
வருமான வரித்தாக்கல் செய்பவர்களுக்கு இந்த இரண்டு ஆவணங்களின் இணைப்பு அவசியமாகிறது.ஜூன் 30-ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் ஜூலை 1-ம் தேதி முதல் அத்தகைய பான் கார்டுகள் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இது, மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியதை அடுத்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதாருடன் இணைக்காத பான்கார்டுகள் ஜூலை முதல் தேதிக்குப் பின் மறு உத்தரவு வரும்வரை செல்லும் என அறிவித்துள்ளது.


சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் வேந்தர் மூவிஸ் மதனின் 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் கைதாகி ஜாமினில் வெளிவந்த மதனை, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.
மருத்துவ படிப்பிற்கான இடம் வாங்கி தருவதற்கு 91 கோடி ரூபாய் வசூலித்தாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், மதனின்6 கோடியே 35 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் வடபழனி, சாலிகிராமம் மற்றும் கேரளா மாநிலம் இரவிபுரம் ஆகிய இடங்களில் மதனுக்கு சொந்தமான நிலங்கள் முடக்கப்பட்டுள்ளது.


சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் பலகோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தைக் கைப்பற்ற கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியே தொழில் அதிபரான கணவனை கொலை செய்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் ஜோதி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் உதய பாலன் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தில் மின்சாதன உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 5-ம் தேதி இரவு உதயபாலன் வீட்டில் தனியாக இருந்தபோது படுக்கை அறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையும், 30 ஆயிரம் ரூபாய் பணமும் மட்டும் கொளை போயிருந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சி அடிப்படையில் உதயபாலன் வீட்டில் பணியாற்றிய கார் ஓட்டுநர் பிரபாகரன் கொலை செய்திருப்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கை செலவுக்கு பணம் தேவைப்பட்டதாகவும், அதனால், நகையைத் திருடும்போது உரிமையாளர் உதய பாலன் பார்த்துவிட்டதால் அவரைக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
ஆனால் தமது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உதயபாலன் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் உதயபாலனின் மனைவி உதயலேகாவுக்கு கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது.
வழக்கை முதலில் விசாரித்த காவல்துறையினருக்கு இந்த விவரம் தெரிந்திருந்தும் அவரை கைது செய்யாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பலகோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தைக் கைப்பற்ற கள்ளக்காதலனோடு சேர்ந்து திட்டம் தீட்டி கணவனைக் கொன்ற வழக்கில் தற்போது உதயலேகா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


புழல் சிறையில் இருந்து, வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிறை அதிகாரிகள் குடியிருப்பில் இருந்து தப்பிய ஆயுள் கைதி இன்று காலை பிடிபட்டார். சென்னையை அடுத்த புழல் சிறையின் பின்புறம், சிறை அதிகாரிகள் குடியிருப்பு அமைந்துள்ளது.
அங்கு சிறைக் கண்காணிப்பாளர் ஜெயராமன் வீட்டில் வேலைசெய்வதற்காக புழல் சிறையில் இருந்து 7 கைதிகளை அழைத்துச் சென்றுள்ளனர். அதில், 2008ஆம் ஆண்டில் வளசரவாக்கத்தில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற சின்னையன் என்ற ஜெயராஜும் ஒருவர்.
சிறை அதிகாரிகள் குடியிருப்பின் சுற்றுச்சுவர் 6 அடி உயரம் மட்டுமே என்பதால், எளிதாக சுவரில் ஏறி சின்னையன் தப்பியுள்ளார். அவரை தீவிரமாகத் தேடிவந்த நிலையில், இன்று அதிகாலை வளசரவாக்கத்தில் உள்ள தமது மனைவியை பார்ப்பதற்காக சின்னையன் பதுங்கி பதுங்கி வந்தபோது போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
சின்னையன் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலை வழக்கு போன்றவற்றில் தண்டனை பெற்ற கைதிகளை அதிகாரிகள் வீட்டு வேலை செய்ய அழைத்துச் செல்லலாமா, அத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


35 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்ற உத்தரவுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக ரவி நியமனம் - தமிழக அரசு டி.ஐ.ஜி-க்கள் 6 பேர், ஐ.ஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், தென்மண்டல ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேல் ரயில்வே துறையின் ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

ஊர்க்காவல்படை ஐஜியாக இருந்த பெரியய்யா சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

புதுக்கோட்டை எஸ்.பி. லோகநாதன், தஞ்சை சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தென்மண்டல ஐ.ஜியாக இருந்த முருகன், லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த வெங்கட்ராமன், உணவுப்பொருள் வழங்கல் துறை ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முழு விவரம் வருமாறு:
1.சென்னை, நவினமயப்படுத்தல் துறை தலைமை ஆய்வாளர் கருணாசாகர் ஐபிஎஸ், ஏடிஜிபி-யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
2. சென்னை, ஐஜிபி, எஸ்டாப்ளிஷ்மெண்ட் ராஜீவ் குமார் ஐபிஎஸ், ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றதோடு நவீனமயமாக்கல் கூடுதல் டிஜிபியாகவும் செயல்படுவார்.
3. சென்னை, கடலோரப் பாதுகாப்பு குழு ஐஜிபி சந்தீப் ராய் ராத்தோர் ஐபிஎஸ், ஏடிஜிபியாகவும், ஈரோடு சிறப்புப் பணிப் படை ஏடிஜிபியாக ஏற்கெனவே காலியாக இருந்த பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
4. ஐஜிபி மற்றும் போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த அபய்குமார் சிங் ஐபிஎஸ்., தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், புகளூர், கருர் கூடுதல் டிஜிபி, தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
5. சென்னை, பயிற்சித்துறை தலைமை ஆய்வாளர் கே.வன்னியப் பெருமாள் ஐபிஎஸ், புதிதாக உருவாக்கப்பட்ட சென்னை பிரிவு மாநகர போக்குவரத்துக் கழக கூடுதல் டிஜிபி தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
6. மதுரை முன்னாள் டிஐஜி ஆனந்த் குமார் சோமானி ஐபிஎஸ், தலைமை ஆய்வாளராக (ஐஜிபி) பதவி உயர்வு பெற்றுள்ளார்.
7. சென்னை ஆயுதப் போலீஸ் படையின் உதவி தலைமை ஆய்வாளர் என்.ராஜசேகரன், ஐபிஎஸ் தலைமை ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று, விஜிலன்ஸ் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறையில் பதவி வகிப்பார்.
8. சேலம் உதவி தலைமை ஆய்வாளர், பி.நாகராஜன், ஐபிஎஸ், தலைமை ஆய்வாளராக/ திருப்பூர் நகர போலீஸ் கமிஷனராக பதவி பெற்றுள்ளார்.
9. வடக்கு/கிரேட்டர் சென்னை இணை கமிஷனர், உதவி தலைமை ஆய்வாளர் என்.பாஸ்கரன் ஐபிஎஸ், சென்னை மாநகர குற்றவியல் பிரிவு தலைமை ஆய்வாளராக நியமிக்கப்படுகிறார்.
10. சென்னை ஊழல் தடுப்பு உதவி இயக்குநர், விஜிலன்ஸ் உதவித் தலைமை ஆய்வாளர் ஆர்.சமுத்திரப்பாண்டி, ஐபிஎஸ், சென்னை ஊர்க்காவல்படை தலைமை ஆய்வாளராக பதவி பெறுகிறார்.
11. வேலூர், உதவி தலைமை ஆய்வாளர் ஆர்.தமிழ் சந்திரன், ஐபிஎஸ், சிலைத்திருட்டுப் பிரிவு ஐ.ஜி.யாக நியமனம்
12. சென்னை, சிலைத்திருட்டு தடுப்புப் பிரிவு ஐஜி ஏ.ஜி. பொன்.மாணிக்கவேல், சென்னை, ரயில்வே ஐஜியாக நியமனம்.
13. திருப்பூர் ஐஜி சஞ்சய் மாத்தூர், சிபிசிஐடி, எஸ்ஐடி, ஐஜியாக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
14. சென்னை சிபிசிஐடி ஐஜி மகேஷ் குமார், ஐபிஎஸ், மதுரை மாநகர ஐஜி/போலீஸ் ஆணையராக நியமிக்கப்படுகிறார்
15. மதுரை மாநகர ஐஜி/போலீஸ் கமிஷனர் ஷைலேஷ் குமார் யாதவ், தெற்கு மண்டல ஐஜியாகிறார்.
16. தெற்கு மண்டல ஐஜி டாக்டர் எஸ்.முருகன், ஐபிஎஸ், ஊழல் தடுப்பு மற்றும் விஜிலன்ஸ் ஐஜி/இணை இயக்குநர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
17. சென்னை ஊழல் தடுப்ப்பு மற்றும் விஜிலன்ஸ் ஐஜி/ இணை இயக்குநர், ஜி.வெங்கட்ராமன், சென்னை பொதுவிநியோகத்துறை ஐஜி.
18. திருச்சி ஆயுதப் போலீஸ் படை ஐஜி கே.பி.ஷண்முக ராஜேஸ்வரன், ஐபிஎஸ், சென்னை போலீஸ் பயிற்சித்துறை ஐஜியாக நியமனம்.
19. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், புகளூர், ஐஜி சி.சந்திரசேகர், ஆபரேஷன்ஸ் ஐஜியாக நியமனம்.
20. திருநெல்வேலி, மாநில போக்குவரத்து தலைமை கண்காணிப்பு அதிகாரி/ஐஜி, சு.அருணாச்சலம் ஐபிஎஸ், சென்னை, கடலோரப் பாதுகாப்பு ஐஜியாக நியமனம்.
21. சென்னை ஊர்க்காவல் படை ஐஜி கே.பெரியையா, சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம்
22. புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் டாக்டர் ஜே.லோகநாதன் ஐபிஎஸ், தஞ்சாவூர் சரக டிஐஜியாக நியமனம்.
23. போலீஸ் கண்காணிப்பு அதிகாரி அமித் குமார் ஐபிஎஸ், தஞ்சை சரக டிஐஜியாக நியமனம்.
24. தூத்துக்குடி மாவட்ட அஸ்வின் எம்.கோட்னிஸ், ஐபிஎஸ், டிஐஜியாக பதவி உயர்வு பெறுகிறார்.
25. மைலாப்பூர், உதவி போலீஸ் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், விழுப்புரம் சரக டிஐஜியாக பதவி உயர்வு பெறுகிறார்..
26. அம்பத்தூர், கிரேட்டர் சென்னை உதவி போலீஸ் ஆணையர், ஆர்.சுதாகர், வடக்கு, கிரேட்டர் சென்னை டிஐஜி/ இணை கமிஷனராக நியமனம்.
27. திருநெல்வேலி நகர உதவி கமிஷனர் பிரதீப் குமார், ஐபிஎஸ், மதுரை சரக டிஐஜியாகிறார்.
28, தஞ்சாவூர் சரக டிஐஜி டி.செந்தில் குமார், சேலம் டிஐஜியாக பொறுப்பேற்கிறார்.
29. தேன்மொழி ஐபிஎஸ், டிஐஜி, காஞ்சீபுரம் சரக டிஐஜியாக நியமனம்.
30. காஞ்சீபுரம் டிஐஜி நஜ்முல் ஹோடா, வடக்கு, கிரேட்டர் சென்னை போக்குவரத்து டிஐஜி/ இணை போலீஸ் ஆணையர்
31. வடக்கு, கிரேட்டர் சென்னை போக்குவரத்து டிஐஜி/ இணை போலீஸ் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, தென் சென்னை டிஐஜி/ போக்குவரத்து உதவி ஆணையர்.
32. தென் சென்னை போக்குவரத்து காவல் உதவி ஆணையர், டிஐஜி, கே.பவானீஸ்வரி, திருச்சி சரக டிஐஜியாகிறார்.
33. சென்னை ரயில்வே போலீஸ் டிஐஜி வனிதா, ஐபிஎஸ், வேலூர் டிஐஜியாகிறார்.
34. ராமநாதபுரம் டிஐஜி கபில்குமார் சரத்கர், ஐபிஎஸ், திருநெல்வேலி சரக டிஐஜியாகிறார்.
35. விழுப்புரம் சரக டிஐஜி அனிசா ஹுசைன், சென்னை தலைமைச் செயலக டிஐஜி/ இணை போலீஸ் ஆணையராகிறார்.


சென்னையை அடுத்த திருவொற்றியூரில் கோட்டையை நோக்கி பேரணியில் ஈடுபட முயன்ற 50 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி சி.பி.சி.எல். தொழில்சாலை வரை 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு மீனவர்களிடம் கருத்து கேட்புக்கூட்டம் திருவொற்றியூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களில் ஒருசிலருக்கு மட்டுமே அனுமயளிக்கப்பட்டது. இதனால் அனுமதி மறுக்கப்பட்டவர்கள் சுமார் 50-பேர் கோட்டையை நோக்கி பேரணியாக செல்லமுயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அனைவரையும் கைதுசெய்தனர்.


*ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து
*உள்ளாட்சி நிர்வாகம் 30 சதவீத வரி, ஜிஎஸ்டி 18 சதவீதம் சேர்த்து 48 சதவீத வரி விதிக்கப்படுவதாக புகார்
*தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் அறிவிப்பு
*ஜிஎஸ்டிக்கு எதிராக ஜுலை 3-ஆம் தேதி முதல் திரையரங்குகள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு


நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூரில் அரசு மணல் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 488 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மக்கள் எதிர்ப்பை அடுத்து கடந்த 10 நாட்களாக மூடப்பட்டிருந்த அரசு மணல் குவாரி வியாழக்கிழமை போலீசாரின் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் மீண்டும் மணல்குவாரி மூடப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமக்கள் 488 பேர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


*நாளை முதல், ஆதார் எண் இல்லாமல் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
*நாளை முதல் ஆதார் அட்டை இல்லாமல் புதிய பான் கார்ட் பெற முடியாது.
*பாஸ்போர்ட் பெறுபவர்கள் ஆதார் அட்டை இன்றி நாளை முதல் விண்ணப்பிக்க முடியாது.
*நாளை முதல் பிஎஃப் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகிறது.
*இதேபோல, ரயில்கட்டணங்களில் சலுகைகளை பெறவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
*இன்றைக்குள் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்காத பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படாது
*குடிமைப் பொருட்களைத் தடையின்றி பெற ஆதார் எண்ணுடன் ரேசன் கார்டை இணைத்திருப்பதும் நாளை முதல் கட்டாயமாகிறது.
*நாளை முதல் விமான நிலையங்களில் டிபார்சர் ஃபார்ம் எனப்படும் புறப்பாட்டு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு பதில் ஆதார் அட்டையைக் காண்பித்து நேரத்தை மிச்சமாக்கலாம்.
*சி.ஏ. எனும் கணக்குத் தணிக்கையியல் படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டம், ஜி.எஸ்.டி. மற்றும் சர்வதேச தரத்துக்கு ஏற்ப நாளை முதல் மாற்றப்படுகிறது.
*ஆஸ்திரேலிய செல்ல விரும்பும் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் விசிடர் விஸா பெறும் நடைமுறையும் நாளை முதல் அமலாகிறது.
*சவுதிஅரேபியாவில் குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர் அந்நாட்டில் வசிப்பதற்கான வரிக் கட்டணம், ஆண்டுக்கு 100 ரியால்களாக நாளை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.


ஜி.எஸ்.டி.யில் அதிக வரி வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசியில் பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். நள்ளிரவு முதல் அமலாகவுள்ள ஜி.எஸ்.டி.யில் பட்டாசுக்கு 28 சதவீத வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள், பட்டாசுக்கு 5 அல்லது 12 சதவீத வரி நிர்ணயிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காததால் இன்று முதல் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
சிவகாசியில் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆலைகள் மற்றும் கடைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளதுடன், பல கோடிக்கணக்கிலான ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியிலும் ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு தெரிவித்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தினர் இந்த கடை அடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஜி.எஸ்.டியில் மரச்சாமான்களுக்கு 28 சதவீத வரியும், மூலப்பொருளான மரத்துக்கு 18 சதவீத வரியும் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மர வியாபாரிகள் மற்றும் மரச்சாமான் உற்பத்தியாளர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சூளையில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வரிவிதிப்பை பரிசீலிக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய அளவில் கடை அடைப்பு நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர். இன்றைய வேலைநிறுத்தத்தால் 120 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அரசுக்கு 20 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


புழல் மத்திய சிறையில் தோட்ட வேலை செய்துகொண்டிருந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர், சிறைக்காவலர்களின் கண்ணுக்கு புலப்படாமல் மாயமாக மறைந்துள்ளதால், சிறை நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற கொலை வழக்கில், சின்னைய்யா என்ற ஜெயராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் 2009-ம் ஆண்டு முதல் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று இவர் சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் சிறைக் காவலர்களின் பாதுகாப்பில் சக கைதிகளுடன் வேலை செய்துகொண்டிருந்தார். மாலை ஆறு மணிக்கு கைதிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றபோது, ஜெயராஜ் மாயமாகியிருந்தார்.
அவரை சிறை வளாகத்துக்குள் சல்லடை போட்டு தேடியும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு கெடுபிடிகள், சிசிடிவி கேமராக்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மிகுந்த புழல் சிறையில், ஆயுள் கைதி ஒருவர் தப்பிச் சென்ற நிகழ்வு, அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


தடைசெய்யப்பட்ட மாவா போதைப்பொருளை தயாரித்து சென்னை முழுவதும் விநியோகித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை டி.பி.சத்திரம் அருகே உள்ள கே.வி.என்.புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாவா போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின்அடிப்படையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மாவா போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்களையும், மாவா பொட்டலங்களையும், 50,000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்த போலீசார், அவர்கள் சென்னையில் யார் யாருக்கு போதைப்பொருள் பொட்டலங்களை விநியோகித்தனர் என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்


தமிழக பொறுப்பு டி.ஜி.பி. டி. கே. ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை ஓய்வு பெறும் நிலையில், புதிய டி.ஜி.பி. தேர்வு குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் உளவுத்துறை டி.ஜி.பி.யாக உள்ள டி.கே. ராஜேந்திரன் கூடுதல் பொறுப்பாக சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி. பொறுப்பையும் கவனித்து வருகிறார். வெள்ளியன்று இவர் பணி ஓய்வு பெறுவதால், புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2006-ம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், டி.ஜி.பி. நியமனத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பதவிமூப்பின் அடிப்படையில் டி.ஜி.பி. பதவிக்கு தகுதியான 5 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையத்திடம் மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும்.
அவர்களில் 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுக்கும். அந்த மூவரில் ஒருவர் டி.ஜி.பி.யாக தேர்வு செய்யப்படுவார். டி.ஜி.பி.யாக தேர்வு செய்யப்படுபவர் அடுத்த சில மாதங்களில் ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.
இந்த நடைமுறைப்படி, மத்திய எல்லை ஆயுதப்படை பிரிவு தலைவராக உள்ள அர்ச்சனா ராமசுந்தரம், சிவில் சப்ளை சிஐடியாக உள்ள கே. ராதாகிருஷ்ணன், தீயணைப்புத்துறை இயக்குநர் ஜார்ஜ், தற்போதைய பொறுப்பு டிஜிபியாக உள்ள டி. கே. ராஜேந்திரன், தமிழ்நாடு காவலர் பயிற்சி அகாடமி மகேந்திரன் ஆகியோர் தேர்வாகினர்.
இந்தப் பட்டியலை வியாழனன்று டெல்லியில் நடந்த மத்திய பணியாளர் தேர்வாணைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சமர்ப்பித்துள்ளார். இந்தப் பட்டியலிலிருந்து 3 பேர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், தமிழக டிஜிபி தேர்வு இறுதி செய்யப்படும்.
இந்தப் பட்டியலில் உள்ள ஜார்ஜ், டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் குட்கா சர்ச்சையில் சிக்கியுள்ளதால், மீதமுள்ளவர்களில் ஒருவரே டிஜிபியாக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


ஈரான் உள்ளிட்ட 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய விசா நடைமுறை அமெரிக்காவில் அமலுக்கு வந்துள்ளது.
ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு அமெரிக்க கீழமை நீதிமன்றங்கள் தடை விதித்தபோதும், டிரம்ப் நிர்வாகத்திற்கு சாதகமாக உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியது. உடனடியாக, ஈரான் உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கொண்டுவந்தது.
இதன்படி, அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுள்ளவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே விசா கோரி விண்ணப்பிக்க முடியும். பெற்றோர், கணவன்-மனைவி, குழந்தைகள், மகன்-மகள், மருமகன், மருமகள், உடன் பிறந்தவர்கள் ஆகியோர் மட்டுமே புதிய விதிமுறைகளின்படி நெருங்கிய குடும்ப உறவினர்களாக கருதப்படுவார்கள்.


ஜி.எஸ்.டி. வரி நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று நள்ளிரவு அறிமுக விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவை புறக்கணிக்க வேண்டாம் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி கோரிக்கை விடுத்துள்ளார்.
70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாக பெரிய அளவில் வரி சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று நள்ளிரவு சுமார் 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் சென்ட்ரல் ஹாலில் ஜிஎஸ்டி அறிமுக விழா நடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி உள்ளிட்டோருடன் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
விழாவில் பங்கேற்க தொழிலதிபர் ரத்தன் டாட்டா, நடிகர் அமிதாப் பச்சன், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர், பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி உள்ளிட்டோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 மணிக்கு மணியடிக்கப்பட்டு ஜிஎஸ்டி அமலுக்கு வந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அனைத்து மாநில அரசுகளும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த முன்வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் , இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஜிஎஸ்டி சட்டத்தை கடுமையாக எதிர்க்கும் நிலையில் இந்த விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இந்த விழாவில் பங்கேற்க போவதில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து எதிர்க்கட்சியினரும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். அனைத்து எதிர்க்கட்சியினருடனும் ஆலோசித்துதான் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கட்சிகள் தங்கள் தோள்களில் பொறுப்பை சுமக்க வேண்டும் என்றும் அருண் ஜேட்லீ கோரியுள்ளார்.
இதனிடையே, ஜி.எஸ்.டி. அறிமுக விழாவில் பங்கேற்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.


நீண்ட யோசனைகள், நேர் செய்யவே முடியாத  தொடர் கணக்கீடுகள் என ஏராளமான தாமதங்களுக்கு பிறகு ஒருவழியாய் புதிய வேலையை துவங்கியிருக்கிறேன். மாணவர்களோடு பணியாற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். உளவியல் ஆற்றுப்படுத்துனர் மற்றும் பயிற்சியாளர் எனும் துறையை தெரிவு செய்த பிறகு அந்த விருப்பம் இன்னும் தீவிரமானது. ஆனால் பள்ளி ஆற்றுப்படுத்துனர் (கவுன்சிலர்) வேலை என்பது அத்தனை சுலபத்தில் கிடைக்கும் விசயமல்ல. பல பள்ளிகளில் அப்படியான ஒரு பதவியே கிடையாது. அந்த வேலை இருக்கும் பள்ளிகள் பெருநகரங்களில் மட்டுமே உண்டு. சொற்ப சம்பளம் கிடைக்கும் அந்த வேலைக்காக குடும்பத்தோடு இடம்பெயர்வது ஒரு பொருளாதார தற்கொலை முடிவாகிவிடும் ஆகையால் அத்தகைய வாய்ப்புக்களை ஏற்க இயலவில்லை.
ஒரு வழியாக தயக்கங்களை ஒதுக்கிவைத்து இந்த மாதம் சென்னையில் இருக்கும் பள்ளியொன்றில் ஆற்றுப்படுத்துனராக இணைந்திருக்கிறேன். குறைந்தபட்சம் 5 மாணவர்களோடு ஆளுக்கு 45 நிமிடம் பேசுகிறேன். வகுப்புக்களுக்கு நேரடியாக போய் விவாதிக்கிறேன். கூடுதலாக ஆசிரியர்கள் பெற்றோர்களை சந்திக்கிறேன். இந்த அனுபவம் 100 புத்தகங்களை வாசிப்பதைக் காட்டிலும் மேலானதாக இருக்கிறது. நல்வாய்ப்பாக கட்டுப்பாடுகள் விதிக்காத பள்ளி முதல்வர் வாய்த்திருக்கிறார், குளிர்சாதன வசதி கொண்ட அறை தரப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தரப்படும் வகுப்பு நேரங்களை மாணவர் நலனுக்கான எந்த தலைப்பையும் எடுத்து விவாதிக்கலாம் எனும் சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். அனேகமாக எனக்கு தெரிந்த எந்த பள்ளி கவுன்சிலரும் பெற்றிராத வாய்ப்பு இது.
வாரத்தில் 3 நாட்கள் வேலை என்பதால் வாரா வாரம் சென்னைக்கு பயணிக்க வேண்டும். தங்கியிருக்கும் இடத்துக்கும் பள்ளிக்கும் இடையேயான தூரத்தை கடக்க தோராயமாக 4 மணிநேரம் பிடிக்கிறது (போக வர). 2 பேருந்துகள், ஒரு ரயில் பயணம் மற்றும் நடை என சலிப்பூட்டுவதற்கான எல்லா தகுதியும் கொண்ட பயணமாக இது இருக்கிறது. பயணத்தின் விரோதியான முதுகுவலி, சென்னைக்கு விரோதியான காற்று மாசு ஒவ்வாமை (சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது ஸ்டீராய்டு மருந்துகள்) என கூடுதல் தகுதிகள் வேறு.  ஆனால் இந்த சிறிய இடையூறுகளை பெரிய சங்கடம் இல்லாமல் சகித்துக்கொள்வதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கிறது எனது வேலைக் களம்.
ஏழாம் வகுப்பு மாணவர்கள் பலருக்கு தமது வீட்டு முகவரி தெரியவில்லை. எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் என் பெற்றோர்கள் பணத்தை மட்டுமே லட்சியமாக கொண்டிருப்பது (உபயோகித்த வார்த்தை “மணி மைண்டட்”) எனக்கு பிடிக்கவில்லை என்கிறார். சந்திக்கும் பாதிபேருக்கு தான் சரியான மதிப்பெண் வாங்க முடிவதில்லை எனும் குற்ற உணர்வு இருக்கிறது. ஆங்கிலத்தில் பேசுவது கட்டாயமாக இருக்கும் வளாகத்தில் “நான் தமிழில் பேசலாமா என கேட்டால் “எஸ்” என வகுப்பறை அதிரும் அளவுக்கு பதில் வருகிறது (பாகுபாடின்றி எல்லா வகுப்புக்களிலும்). நான் உங்ககிட்ட சொல்றதையெல்லாம் பிரின்சிபல்கிட்ட சொல்லுவீங்களா என உறுதிப்படுத்தும் கேள்வியோடு பேச ஆரம்பிக்கிறார் 5 வகுப்பு மாணவர். இப்படி எந்த நிமிடத்திலும் ஆர்வக்குறைவை ஏற்படுத்தாத வேலையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். பொருளாதார இடைஞ்சல்கள் என் குரல்வளையை கடிக்கும் முன்னால் அதனை செய்தாக வேண்டும்.
இப்படி சிறியதும் பெரியதுமான பல காரணங்களால் இனி எனது எழுத்து வேலையில் கவனம் செலுத்த இயலாது. ஆகவே  இன்னும் கொஞ்சகாலம் அரசியல் பதிவுகள் இருக்காது. தனிப்பதிவு எழுதி சொல்லுமளவுக்கு எனது எழுத்துக்கள் முக்கியத்துவம் பெற்றவை அல்ல என்றாலும் எதிர்பார்க்கின்ற சில நண்பர்களுக்கு சொல்வது அவசியமாகிறது. ஆனாலும் இந்த இடைவெளிக்கான உரிய நியாயத்தை பின் நாட்களில் செய்ய முடியும் என நம்புகிறேன்.
BY: வல்லவன் 


மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் பொது வெளியில் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் பீகார் மாநிலத்தில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை வறட்சிப் பகுதியில் பாசனத்திட்டத்தை துவக்கி வைத்த மத்திய அமைச்சர் என லல்லுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம்  நையாண்டி செய்துள்ளது.


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான கலந்தாய்வின் இரண்டாம் நாளான இன்று, இடஒதுக்கீட்டு பிரிவினர் பங்கேற்றனர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மொத்தமாக 200 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்புவதற்காக கடந்த 4ந்தேதி அகில இந்திய அளவில் ஆன்லைன் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் நேற்று பொது கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கலாந்தாய்வின் இரண்டாவது நாளான இன்று 75 இடங்களுக்கான, ஓ.பி.சி, எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள 750 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் சான்றிதழ்கள் , கை ரேகை ஆகியவை சரிபார்க்கப்பட்டு , கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.


உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் எபினேசர் சாமுவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் உரிய அனுமதியில்லாமல், போராட்டம், சாலைமறியல் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறியுள்ளார். இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மட்டுமின்றி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால சேவைகளும் பாதிப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், போராட்டங்கள் அதிகரித்துவரும் நிலையில், அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறை இயக்குநருக்கு அனுப்பிய மனு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆஜரான அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞர், தமிழகத்தில் அனுமதியில்லாமல் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறினார்.
இந்த பதிலில், திருப்தி அடையாத நீதிபதிகள், உரிய அனுமதியில்லாமல் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் உள்பட பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அனைத்து வகை போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை டி.ஜி.பிக்கு உத்தரவிட்டார். உரிய அனுமதியின்றி அதிக அளவில் கூடினாலும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்த நீதிபதிகள், சிறுவர், சிறுமிகள், குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துவந்தால், கைது செய்யமாட்டார்கள் என போராட்டக்காரர்கள் கருதுவது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்தனர்.


நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே செயல்பட்டு வரும் மணல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி, 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த ஒருவந்தூரில் பொதுப்பணித்துறை சார்பில் காவிரி ஆற்றில், கடந்த சில நாட்களுக்கு மணல் குவாரி துவக்கப்பட்டது. ஏற்கனவே மோகனூரில் திறக்கப்பட்டுள்ள மணல் குவாரியில் அதிகளவு மணல் அள்ளப்பட்டதால் சுற்று வட்டாரப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மணல் குவாரியில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒருவந்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் பேச்சுவர்த்தையையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.


பசு பக்தி என்ற பெயரில் படுகொலைகள் நடப்பது ஏற்கத்தக்கதல்ல என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாக இருந்ததில்லை.

இன்று நடைபெறும் சில விரும்பத்தகாத சம்பவம் தொடர்பாக எனது வேதனையைத் தெரிவிப்பதோடு அது தொடர்பாக சில வார்த்தைகளையும் கூற விரும்புகிறேன்.

பசு பக்தி என்ற பெயரில் யாரையும் படுகொலை செய்வது ஏற்கத்தக்கதல்ல. மகாத்மா காந்தியும், வினோபா பவேவும் பசு பாதுகாப்பு குறித்து பேசியளவுக்கு வேறு யாரும் பேசியிருக்க மாட்டார்கள்.
ஆனால், இன்று பசு பக்தி என்ற பெயரில் படுகொலைகள் நடப்பதை மகாத்மா காந்தியே ஏற்க மாட்டார்.

இத்தேசத்தில் யாருக்கும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் அதிகாரம் இல்லை. வன்முறை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாக இருந்ததில்லை இனியும் இருக்கப்போவதில்லை.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். மகாத்மா காந்தி கண்ட கனவு இந்தியாவை நனவாக்குவோம். நமது தேச விடுதலைக்காக போராடியவர்கள் பெருமை கொள்ளும் வகையில் நமது தேசத்தை வளர்த்தெடுப்போம். நமது தேசம் அகிம்சைக்கு பெயர் பெற்றது.

2017-ம் ஆண்டு, சம்பாரண் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு என்பதோடு சபர்மதி ஆசிரமம் நிறுவப்பெற்றதன் நூற்றாண்டும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.


கேரளாவில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பிடம் போலீசார் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
நடிகை பாவனாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு காருடன் கடத்திய பல்சர் சுனில் என்பவன் பாலியல் ரீதியில் அவரை துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்த நிலையில், நடிகை மஞ்சுவாரியருடனான தனது விவகாரத்திற்கு நடிகை பாவனா தான் காரணம் என்று கருதி அவரை பல்சர் சுனில் மூலமாக நடிகர் திலீப் பழி தீர்த்துக் கொண்டதாக புகார் எழுந்தது.
இந்த புகாருக்கு வலு சேர்க்கும் வகையில், கூறியபடி தனக்கு சேர வேண்டிய ஒன்றரை கோடி ரூபாயை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நடிகர் திலீப்புக்கு சிறையில் இருக்கும் பல்சர் சுனில் கடிதம் அனுப்பியதும், அந்த கடிதம் ஊடகங்களில் வெளியானது. இதனை தொடர்ந்து பல்சர் சுனில் தன்னை பிளாக் மெயில் செய்வதாக நடிகர் தீலிப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து விளக்கம் பெறவும், பாவனா கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது குறித்தும் விசாரணை நடத்த நடிகர் திலீப்புக்கு ஆலுவா போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதன் அடிப்படையில் நேற்று நண்பகல் பன்னிரெண்டு முப்பது மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜரான திலீப்பிடம் நள்ளிரவு ஒரு மணி வரை விசாரணை நடைபெற்றது. திலீப்பின் நண்பர் என்று கூறப்படும் மற்றொரு நடிகர் நாதிர்ஷா மற்றும் திலீப்பின் கார் ஓட்டுனர் ஆகியோரிடடும் நேற்று முழுவதும் விசாரணை நடந்துள்ளது.


அஞ்சல் நிலையங்களில் ஆதார் எண் பெறும் வசதி அறிமுகப் படுத்தப்பட உள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக அஞ்சல் நிலையங்களில் ஆதார் எண் பெறும் வசதி அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு சர்க்கிள் அஞ்சல் துறை தலைவர் (அஞ்சல் மற்றும் வர்த்தக வளர்ச்சி) ஜே.டி.வெங்கடேஸ்வரலு கூறியதாவது:
அஞ்சல் நிலையங்கள் மூலம் ஆதார் எண் பெறுவதற்காக பதிவு செய்வது மற்றும் ஏற்கெனவே பெற்ற ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது ஆகிய புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்காக 15 தலைமை அஞ்சல் நிலையங்கள் மற்றும் 2515 துணை அஞ்சல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் ஆதார் எண் பதிவு செய்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. துணை அஞ்சல் நிலையங்களில் ஏற்கெனவே பெற்ற ஆதார் அட்டை யில் திருத்தங்கள் செய்யலாம். உதாரணமாக, பெயர் திருத்தம், முகவரி திருத்தம், மொபைல் எண் சேர்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.
இப்பணியை செய்வதற்காக ஒவ்வொரு அஞ்சல் நிலையத்தில் இருந்தும் தலா 2 ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக ஏற்கெனவே 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்பயிற்சியை மற்ற ஊழியர்களுக்கு அளிப்பார்கள். மேலும், ஆதார் எண் பதிவு செய்வதற்காக பயோ மெட்ரிக் கருவிகள் வாங்கப்பட உள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.80 லட்சம் செலவாகும். இதற்கான நிதி கிடைத்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.


செய்யது பீடி குழுமத்தில் 2-வது நாளாக நடைபெற்று வரும் வருமான வரிச் சோதனையில் 3 கோடி ரூபாய் ரொக்கப்பணமும், வரி ஏய்ப்புக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வறத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கன மழையால் பரளியார் மற்றும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து உள்ளது. இதனால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளாதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சாரல் மழையோடு, அருவியில் கொட்டும் தண்ணீரில் உற்சாக குளியல் போடும், சுற்றுலாப் பயணிகள் தொடந்து அங்கு நிலவி வரும் குளுமையான சூழலால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தென் கொரிய முன்னாள் அதிபருக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாக வடகொரியா கூறியுள்ளது.
தென் கொரிய முன்னாள் அதிபர் கியூன்ஹை என்பவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை விமானத்தில் குண்டு வைத்து கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த விவகாரத்தில் கியூன் ஹைக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று வடகொரிய அதிபரின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்தத அறிவிப்புக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது ஜூலை ஒன்றாம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதேபோல், புதிய பான் அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள் ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை 2 கோடியே 7 லட்சம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்துள்ள நிலையில், வருமான வரி செலுத்தும் 25 கோடி பேர் இன்னும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் இந்த வாரத் தொடக்கத்தில் பெல்ஜியம் புறப்பட்டார். அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஹாலிவுட் திரைப்படமான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகீர்’(The Extraordinary Journey of the Fakir)  ஷுட்டிங் பெல்ஜியத்தில் ஒரு மாதம் நடைபெறும், அதற்காகத்தான் தனுஷ் பெல்ஜியம் சென்றார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஞாயிறு அன்று விஐபி 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்சிக்குப் பிறகு தனுஷ் பெல்ஜியத்துப் புறப்பட்டார். ஆகஸ்ட் முதல் வாரம் வரையிலான படப்பிடிப்பை முடித்த பிறகு தான் வீடு திரும்புவார்.

ப்ரெஞ்சு நாவலான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபாகிர் ஹூ காட் டிராப்ட் இன் அன் ஐகியா கபோர்ட்’ என்ற' நாவலை தழுவி உருவாகி வரும் இந்த ஹாலிவுட் திரைப்படத்தில் நடிப்பதில் பெருமை கொள்வதாக தனுஷ் கூறியுள்ளார். இப்படத்தின் கதை தலைப்பைப் போலவே சுவாரஸ்யமானது.

அஜா ஒரு மேஜிக் நிபுணன். இந்தியாவில் அவனுக்கு கிடைத்ததெல்லாம் வறுமைதான். அவனுடைய அம்மா அவனை ஒரு ரகசிய நோக்கத்துக்காக பாரிஸ் நகரத்தில் இருக்கும் ஈஃபில் டவருக்கு அனுப்புகிறார். டாக்ஸி ட்ரைவர் ஒருவனுடன் ஏற்படும் திடீர் சண்டையால் அஜா, பாரிஸின் பிரம்மாண்டமான ஃபர்னிச்சர் கடையில் உள்ள ஒரு அலமாரிக்குள் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்கிறான்.

அந்த அலமாரி விற்பனையாகி உடனடியாக ஏற்றுமதி செய்யப்பட்டு ஐரோப்பாவை சுற்றி வருகிறது. இந்தப் பயணத்தில் பலவிதமான மனிதர்களை சந்திக்கிறான் அஜா. வாழ்க்கைப் பற்றிய புரிதல் அவனுக்கு விரிவடைகிறது. தான் கற்ற வித்தையான மேஜிக்கின் மீது நம்பிக்கை வைத்து வீடு திரும்புகிறானா அவனுக்கு பாரீஸில் என்ன ஆகிறது என்பது தான் இப்படத்தின் கதை.

தனுஷுடன் இணைந்து 'தி ஆர்டிஸ்ட்' திரைப்பட நாயகி பெர்னிஸ் பெஜோ, உமா துர்மான் மற்றும் அலெக்ஸஸாட்ரா தாத்ரியோ உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். கனடா இயக்குனர் கேன் ஸ்காட் இயக்குகிறார். இசையமைப்பாளர் நிகோலஸ் எரெரா தவிர அமித் திரிவேதி இரண்டு இந்திப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மே மாதம் மும்பையில் முடிந்தது.


சிட்டி யூனியன் வங்கியில் 2017-2018 ஆண்டிற்கான உதவி மேலாளர், துணை மேலாளர், சீனியர் அசோசியேட்ஸ், மேலாளர், முதன்மை மேலாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: தமிழ்நாடு

பணி: Senior Associates
பணி: Assistant Managers
பணி: Deputy Managers
பணி: Managers
பணி: Senior Managers
பணி: Chief Managers

தகுதி: பொறியியல் துறையில் கணினி பிரிவில் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் அல்லது எம்எஸ்சி(ஐடி), எம்.எஸ்சி (கணினி அறிவியல்), எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 23 - 50க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cityunionbank.com என அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy General Manager,
HRMD, City Union Bank Ltd.,
Administrative Office, 24-B, Gandhi Nagar,
Kumbakonam– 612 001. Tamil Nadu.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.07.2017

மேலும், பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2017/6/27/csd_recruit.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


2009-ம் ஆண்டு வெளிவந்த படம், ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கிய அவதார். உலக அளவில் அதிக வசூல் செய்த படம் இது. ரூ. 18 ஆயிரம் கோடி ($2.79 பில்லியன்) வசூலை அள்ளி மிகப்பெரிய சாதனை செய்தது.

அவதார் படம் மேலும் 4 பாகங்களாக வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் கடந்த வருடம் அறிவித்தார். நான் காணும் கலை என்பது, துல்லியமான கற்பனை உலகம். முதல் பாகத்தை விடவும் சிறப்பாக அமையும். மிகச்சிறந்த காவியமாக உருவாகும் என்று கேம்ரூன் கூறினார். இப்போது அவதார் 2 குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 3டி படமாக உருவாக்கப்படும் அவதார் 2 மற்றும் அதன் ஏனைய பாகங்களை 3டி கண்ணாடியின்றி பார்க்கமுடியும் என்று கூறியுள்ளார் கேம்ரூன். இதற்குரிய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. புதிய தொழில்நுட்பம் என்பதால் திரையுலகினர் இதன் முடிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். செப்டம்பர் மாதம் அவதார் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. 

டெர்மினேட்டர் படத்தின் இரு பாகங்கள், ஏலியன்ஸ், டைட்டானிக் போன்ற படங்கள் மூலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை முன்னெடுத்த ஜேம்ஸ் கேம்ரூன், 3டி கண்ணாடியின்றி 3டி படம் பார்க்கமுடியும் என்றறிவித்திருப்பது திரையுலகில் பல்வேறு புதிய அனுபவங்களைத் தர முதற்காரணமாக அமையும் என்றே நம்பப்படுகிறது.


இஸ்ரோவால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட கார்ட்ரோ சாட் செயற்கைக்கோள், முதன்முதலாக எடுத்த புவிசார் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த 23-ம் தேதி கார்ட்ரோசாட் உள்ளிட்ட 31 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. அதில் கார்டோசாட், எடுத்த பூமியின் பல அழகிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. அவற்றை, இஸ்ரோ தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ராஜஸ்தானின் ரயில்நிலையம், எகிப்தின் அழகிய பயிர்வட்டங்கள், கத்தாரின் அழகிய கட்டுமானங்கள் அவற்றில் இடம்பெற்றுள்ளன.


சென்னையில் 2 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களிடையிலான மோதலில், மாநகரப் பேருந்தின் மீது கல்வீசி தாக்கப்பட்டதில் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.
தியாகராய நகரிலிருந்து அம்பத்தூர் சென்ற 147 – சி தடம் எண் கொண்ட சென்னை மாநகரப் பேருந்து அண்ணா நகர் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தது. அவ்வழியே முன்னதாக சென்றுகொண்டிருந்த 27 தடம் எண் பேருந்தில், 2 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஒரு தரப்பினர் அதிலிருந்து இறங்கி, 147 – சி வழித்தடத்தில் சென்ற பேருந்தில் ஏறியுள்ளனர். அவர்களை துரத்தி வந்த மற்றொரு பிரிவினர், பேருந்தை நிறுத்துமாறு கூச்சலிட்டுள்ளனர். பேருந்தின் முன்பகுதியை அடைந்த அவர்களில் சிலர், கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. ஓட்டுநர் பரணபாஸ், நடத்துநர் வன்னியன், பச்சையப்பன் என்ற பயணி ஆகியோர் காயமடைந்தனர். கல்வீச்சு குறித்து அண்ணா நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், மோதலில் ஈடுபட்டவர்கள் யார், எந்த கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் இதை வெளியிட்டுள்ள அவர், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு வர்த்தகர்களுக்கும் குறைந்தது 6 மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அப்போதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இல்லையெனில் பெரிய பொருளாதார நாட்டில் ஏற்படும் குழப்பங்களுக்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார். தெளிவின்மை, மோசமான நிர்வாகம் காரணமாக மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பல இடங்களில் உயர்ந்திருப்பதாக அவர் சுட்டிக்காடியுள்ளார். ஜி.எஸ்.டி. அறிமுக நிகழ்ச்சியில் புறக்கணிப்பதாக திரிணாமூல் காங்கிரசின் நாடாளுமன்றக் குழுவும் அறிவித்துள்ளது.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.