May 2017


கர்நாடக மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி வழியாக, கேரளாவுக்கு ஆம்னி பேருந்தில் கடத்த முயற்சித்த 10 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தமிழக – கேரளா எல்லைப் பகுதியான அமரவிளை சோதனை சாவடியில், கேரளா வணிகவரித் துறை மற்றும் மதுவிலக்கு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த ஆரஞ்சு எனும் தனியார் நிறுவன ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில், பேருந்தின் அடிப்பகுதியில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இறைச்சிக்கு மாடுகளை விற்பனைசெய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது உரையாற்றிய மு.க.ஸ்டாலின், மாடு விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதித்திருப்பது மோடி அரசின் மிகவும் கொடுமையான செயல் என கண்டனம் தெரிவித்தார்.


தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள அதிமுக (அம்மா) அணியைச்சேர்ந்த டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீதான உத்தரவை டெல்லி நீதிமன்றம் நாளை (வியாழன்) வெளியிடுகிறது. 

சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரி இன்று தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோரது ஜாமீன் மனு மீதான உத்தரவை பிறப்பிக்கவிருந்தார். ஆனால் ஸ்டெனோகிராபர்கள் விடுப்பில் சென்றுள்ளதால் உத்தரவை இன்று பூர்த்தி செய்ய முடியாமல் போனது, எனவே உத்தரவு வியாழக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

டெல்லி போலீஸாரால் ஏப்ரல் 25-ம் தேதி கைது செய்யப்பட்ட டிடிவி. தினகரன், எந்த ஒரு அரசு ஊழியரும் இதில் குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை எனும்போது தன்னை சிறையில் வைப்பதற்கான காரணம் ஏதுமில்லை. எனவே, ஜாமீன் வேண்டும் என்று தன் மனுவில் கோரியிருந்தார். கைது செய்யப்பட்ட இவரது கூட்டாளியான் மல்லிகார்ஜுனாவும் ஜாமீன் கோரியுள்ளார்.
தினகரன், மல்லிகார்ஜுனா, தரகர் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஹவாலா நடவடிக்கை நாத்துசிங் ஆகியோர் ஜூன் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட லலித்குமார் என்பவர் ஜூன் 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே 22-ம் தேதி இடைத்தரகர் சுகேஷின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னதாக தினகரன், சுகேஷ் குரல் மாதிரிகளை பரிசோதனை செய்ய டெல்லி போலீஸ் கோரியது, ஆனால் இருவரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில் தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது வியாழனன்று தெரியவரும்


சென்னை தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் அதிகாலை 4 மணி முதல் கட்டுக்கடங்காத தீ
*4-வது தளத்தில் உள்ள முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது
*15 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரியும் தீயின் சூட்டால் இடிந்தது. ஏற்கெனவே எந்நேரமும் இடிந்துவிழலாம் என காவல்துறை எச்சரித்திருந்தது
*கட்டிடத்தின் அபாய நிலை கருதி யாரும் அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது
*அதிக உயரம் கொண்ட தீயணைப்பு வாகன கிரேன் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சி நடைபெறுகிறது
*ஏற்கெனவே கட்டிடத்தின் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டிருந்தது
*தீயணைப்பு வாகனங்களும், கட்டிடத்தில் இருந்து தொலைதூரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இயக்கப்படுகிறது
*அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், விரைவில் தீயை அணைக்க ஆலோசனை
*இதுவரை தீ எத்தனை சதவீதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற தகவல் தீயணைப்புத்துறையால் வெளியிடப்படவில்லை
*ஒரு வேளை கட்டிடம் இடிந்தால் கட்டிடத்திலிருந்து தீ, அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பரவ வாய்ப்பு ஏற்படுமோ என அச்சம்
*தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலேயே தீயணைப்புத்துறை ஈடுபட்டுள்ளது
*6 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்ட சுவர் முழுவதுமாக பெயர்ந்து விழுந்தது
*அதிக வெப்பம் மட்டுமல்லாது, அதி வேகத்தில் நீரைப் பீய்ச்சி அடித்து கட்டிட சுவர் குளிரூட்டப்படுவதால் இடிவதாகக் கூறப்படுகிறது


பள்ளி மாணவிகளின் மனதை பாதிக்காதவகையில், திரைப்படங்களின் தணிக்கை அமைவதற்காக, சென்சார்போர்டு சட்டத்தில் கடுமையான திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமி காணாமல் போன வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் நாகமுத்து, அனிதாசுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பள்ளி செல்லும் மாணவிகள் மனதில், திரைப்படங்கள் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இதைத் தவிர்க்கும் வகையில் சென்சார்போர்டு முழு அதிகாரத்தோடு தணிக்கை செய்யாததே இதற்குக் காரணம் என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
எனவே, இந்த நிலையைப் போக்க, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப சென்சார் போர்டு சட்டத்தில் கடுமையான திருத்தங்களை கொண்டு வர வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இணையத்தளங்களில் ஆபாச காட்சிகள் வெளியிடுவதைத் தடுக்க மத்திய – மாநில அரசுகள் புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.


வெந்தயத்தில் ஈஸ்ட்ரோஜென் போன்ற குணங்களுடன், டையோஸ்ஜெனின் மற்றும் ஐசோஃப்ளேவோன்ஸ் போன்ற பொருட்கள் உள்ளதால், மாதவிலக்குக்கு முன் ஏற்படும் தாக்கீடுடன் சம்பந்தப்பட்ட வலிகள் மற்றும் உபாதைகளை குறைக்க இது உதவும். மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் காய்ச்சல் உணர்வு, உடல் சூடு மற்றும் மனநிலை மாற்றத்தையும் சாந்தப்படுத்தும். உங்கள் உடல் சூட்டை குறைக்கும். இந்த வெந்தயத்தில் பாயசம் செய்ய கற்றுகொள்ளுவோம்.
வெந்தய பாயசம்
தேவையான பொருட்கள் :
அரிசி – கால் கப்
வெந்தயம் – ஒரு மேசைக் கரண்டி
தேங்காய் – 1
பூண்டு – தேவையானால்
கருப்பட்டி (அ) வெல்லம் – தேவைக்கேற்ப
செய்முறை :
முந்தைய இரவில் கால் கப் அரிசியுடன் ஒரு மேசைக்கரண்டி வெந்தயத்தைப் போட்டு நீரில் ஊற வைக்கவும். ஒரு பெரிய தேங்காயைத் துருவி வெந்நீரைச் சேர்த்துப் பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். அதே தேங்காய் துருவலில் மீண்டும் வெந்நீரைச் சேர்த்துப் பிழிந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மறுநாள், இரண்டாவது பாலுடன் அரிசியையும், வெந்தயத்தையும் (விரும்பினால் சில பூண்டு பற்கள் சேர்க்கலாம்) சேர்த்து ஐந்தாறு விசில்கள் வரும் வரை வேக வைக்கவும். நன்கு வெந்ததும் குழிக்கரண்டியால் நன்றாக மசிக்கவும். அல்லது மிக்சியில் ஊற்றி ஓரிரு நிமிடங்கள் ஓடவிடலாம். இதனுடன் தேவையான கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்துக் கரையும் வரையில் கொதிக்க வைக்கவும். இறுதியில் முதல் தேங்காய்ப் பாலை சேர்த்து இறக்கவும். மிகவும் சுவையான சத்துள்ள பானம் இது.


தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது, பணிச்சூழல் சிறப்பாக இருக்கிறது, தவிர பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும் நல்ல வேலை கிடைப்பதால், இந்ததுறை பணியாளர்களுக்கு சங்கம் தேவையில்லை என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதிஅதிகாரி பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
எப்போதெல்லாம் ஐடி துறையில் பிரச்சினை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம், தொழிற்சங்கம் என்னும் கோரிக்கை எழும். ஆனால் இந்த கோரிக்கைகள் நீண்டநாட்கள் நிலைப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஐடி பணியாளர்களின் நிலைமைக்கு தொழிற்சங்கங்கள் தேவையில்லை. ஒருவேளை சங்கங்கள் அமைக்கப்பட்டாலும், அதனால் இந்த துறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. காரணம் இங்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது. தவிர பணிவாய்ப்புகளும் ஏராளமாக இருக்கின்றன.
எந்ததுறையில் பணிச்சூழல் சரியில்லையோ, பணியாளர்களுக்கு குறைவான சம்பளம் உள்ளிட்ட மோசமாக சூழல் நிலவுகிறதோ அங்கு தொழில்சங்கங்களுக்கு தேவை இருக்கும். ஆனால் ஐடி துறை மோசமாக இல்லை. பணியாளர்கள் நன்றாக நடத்தப்படுகின்றனர். அதனால் சங்கத்துக்கான அவசியம் இங்கு இல்லை.
தற்போது இந்தத்துறையை பற்றி வெளியாகும் செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றன. ஐடி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் செய்யும் வழக்கமான செயல்பாடுகளின் மீதான மதிப்பீடுதான். வேலையிழப்பு குறித்த பயம் காரணமாக மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகின்றன.
ஐடி என்பது வழக்கமான சிறியதுறை கிடையாது. இது சர்வதேச அளவிலான துறை. இங்கு சர்வதேச அளவிலான வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் வழக்கமான தொழிற்சங்கஅமைப்பு முறை இங்கு வெற்றியடையுமா என தெரியவில்லை.
ஐடி துறையின் வளர்ச்சி முடிந்து விட்டதா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். 2000-ம் ஆண்டு ஒய்2கே பிரச்சினை வந்தபோதும், இதே கேள்வி எழுந்தது. 2008-ம் ஆண்டு மந்த நிலை உருவான போதும் இதே கேள்வி எழுந்தது. ஏற்ற இறக்கங்கள் இந்த துறையில் இருப்பது இயல்பானதுதான். ஆனால் பிரச்சினை ஏற்படும் போது புதிய வாய்ப்புகளை இந்த துறை கண்டுபிடிக்கும். தற்போதைய மந்த நிலையால் டிஜிட்டல், மொபிலிட்டி உள்ளிட்ட பிரிவுகளில் முதலீடு செய்வதற்கு வாய்ப்பாக அமையும் என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலின் உதவியுடன், இந்திய கடற்படையைச் சேர்ந்த வீரர்கள், வங்கக் கடலில் தத்தளித்த 18 பேரை மீட்டுள்ளனர். சிட்டகாங் அருகே மோரா புயல் பலவீனமடையும் போது, காற்றின் வேகம் அதிகரித்து இருந்தது.
இதனால், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வந்த படகு ஒன்று பலத்த காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் கவிழ்ந்தது. அதில் பயணித்தவர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு ரோந்தில் இருந்த ஐஎன்எஸ் சுமித்ரா என்ற இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல், மீட்புப் பணியில் ஈடுபட்டது. காற்று நிரப்பிய மிதவைகளைக் கொண்டும், கயிற்றின் உதவியுடனும், கடலில் தத்தளித்த வங்க தேசத்தவர் 18 பேரை வீரர்கள் மீட்டனர்.


மே 2017 முதல் ஜூன் 2017 மாதங்களில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணிக்கான அறிவிப்புகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
Bharat Electronics Limited (BHEL Chennai)
கல்வி:  B.E Degree
சம்பளம்: Rs. 23000-26500/-
கடைசி நாள்: 14.06.2017
Apply Link:  https://goo.gl/UKtXhU
Karur Vysya Bank (KVB) Recruitment 2017
கல்வி:  Any Degree
சம்பளம்: various amount
கடைசி நாள்: 4.06.2017
Apply Link:  https://goo.gl/cRzPkK
Hindustan Petroleum Corporation Limited (HPCL) Recruitment 2017
கல்வி:  Diploma in chemical and Diploma in mechanical engg
சம்பளம்: Rs. 45000/-
கடைசி நாள்: 27.06.2017
Apply Link:  https://goo.gl/c5hAKg
Vizag Steel Plant Recruitment 2017
கல்வி:  various Qualification
சம்பளம்: Rs. 20600-46500/-
கடைசி நாள்: 31.05.2017
Apply Link:  https://goo.gl/MyFa89
National Remote Sensing Center (NRSC)  Recruitment 2017
கல்வி: Various Qualification
சம்பளம்: Rs. 21700-44900/-
கடைசி நாள்: 10.06.2017
Apply Link:  https://goo.gl/W2TjKa
Indian Navy Recruitment 2017
கல்வி: Plus 2 (+2) or SSR
சம்பளம்: Rs.20500/-
கடைசி நாள்:  04.06.2017
Apply Link:  https://goo.gl/Dklcqa


ராக்கின் கராடா பகுதியில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் கடை முன்பு நேற்று முன்தினம் இரவு மக்கள் நெரிசல் அதிகளவில் இருந்தது. ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு முஸ்லிம்கள் தங்களது கடமையை ஆற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென கார் வெடிகுண்டு வெடித்தது.
இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 32 பேர் படுகாயமடைந்தனர். கார் வெடிகுண்டு வெடிப்பது அப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை அப்பகுதியில் உள்ள பாலம் அருகே மற்றொருகார் வெடிகுண்டு வெடித்தது. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 37-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2 இடங்களிலும் தீவிரவாதச்செயல்களை நிகழ்த்தியது ஐ.எஸ் தீவிரவாதிகள் என்பது தெரியவந்தது.


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள வாசிர் அக்பர்கான் தூதரகப்பகுதியில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் உள்ளன. இங்கு ஜெர்மன் தூதரகத்தை ஒட்டிய பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது. சுமார் 350 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை
இதனிடையே இந்த குண்டுவெடிப்பால் இந்தியத்தூதரகத்துக்கோ ஊழியர்களுக்கோ அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் இல்லை என்றும் தூதரக ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
மோடி கண்டனம்
காபூல் வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்ததுடன், ஆப்கனுக்கு இந்தியா துணை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.


மாட்டிறைச்சி விருந்துக்கு ஆதரவாகவும், எதிராகவும், மாணவர்கள் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், தமிழ் மற்றும் மாணவர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் என்றுகூறி சிலர் ஐ.ஐ.டி முன்பாக போராட்டம் நடத்தினர்.
மாட்டிறைச்சி விருந்து நடத்திய சுராஜை தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறத்தி, தமிழ் அமைப்பு என்று கூறிக்கொண்ட சிலர், ஊர்வலமாக வந்து ஐஐடி முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் நீண்ட நேரம் போராடி குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்தனர். கைது செய்ய முற்பட்டபோது போலீசாருடன் அவர்கள் மோதலிலும் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது.
மற்றொரு தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு 20 பேர், சமைத்த மாட்டு இறைச்சியை கொண்டு வந்து அதை ஐ.ஐ.டி முன்பாக வைத்து சாப்பிட்டனர். மாணவர் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட சிலர் கிண்டி மத்திய கைலாஷ் சாலையில் ஊர்வலமாக வந்து கல்லூரியை முற்றுகையிட முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
ஐஐடி வளாகத்துக்கு வெளியில் மட்டும் அல்லாமல், கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயும், ஒரு தரப்பைச்சேர்ந்த ஐஐடி மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். இருதரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால், ஐஐடி வளாகத்திலும், அதற்கு வெளியிலும், போலீசார் அதிகளவில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ஐஐடியை இணைக்கும் சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்தை சீர்செய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.


சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸில் நிறுவனத்தின் கிளையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நெருப்பை அணைக்க முடியாததால், தீ மற்ற தளங்களுக்கும் பரவி, கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சுமார் 7 மணி நேரமாக எரியும் நெருப்பால், கட்டிடத்தின் உள்பகுதியில் இடிபாடுகள் ஏற்பட்டுள்ளது.
கீழ்த்தளத்தில் தொடங்கிய நெருப்பு வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவிவருகிறது. தற்போது நெருப்பு 7 தளங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் தீயணைப்புவீரர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தியாகராய நகரில் கட்டிடங்கள் நெருக்கமாக அமைந்திருப்பதால் முழுவீச்சில் செயல்பட இயலாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.
ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட துணிக்கடை ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கேஸ்சிலிண்டர்கள் உள்ளிட்டவையும் உடனடியாக அகற்றப்பட்டன.
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், ''மனிதர்கள் யாரும் விபத்தால் பாதிக்கப்படவில்லை. கட்டிடத்தின் உள்ளே இருந்த 14பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள வணிக நிறுவனங்களையும், சிறு கடைகளையும் திறக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். கட்டிடங்களின் அருகில் வாகனங்கள் எதையும் நிறுத்த வேண்டாம்.
சாலைப்போக்குவரத்து வேறு வழியில் மாற்றப்பட்டுள்ளது. ஆர்வம் காரணமாக பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க வரவேண்டாம்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சம்பவ இடம் முழுவதையும் காவல்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
இந்த விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள ஆடைகள் தீயில் கருகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''புகை மூட்டம் அதிகமாக இருப்பதால், தீயை அணைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது. சேதங்கள் எதுவும் இன்றி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. போதுமான மனித வளம், உயரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் தீ விரைவில் அணைக்கப்படும்'' என்று தெரிவித்தார்


குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன்காந்தி மீது போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை மெரீனாவில் கடந்த 21-ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்று கூறி பேருந்துக் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திருமுருகன்காந்தி பின்னர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன்ஆயில் தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது.
திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன் ஆகியோர் தூண்டுதலின் பேரில் தான் இந்தியன் ஆயில் தலைமை அலுவலகம் தாக்கப்பட்டதாக் தேனாம்பேட்டை போலீசார் புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது புழல் சிறையில் உள்ள மூவரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலிசார் அழைத்து வரவுள்ளனர். இதனால் மே 17 இயக்கத்தினரும், தமிழர் விடியல் கட்சியினரும் சைதாப்பேட்டை நிதிமன்றத்தில் கூடியுள்ளதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையானது, காலையிலிருந்து சுமார் 5 மணிநேரம் வரை நீடித்தது. 50 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், 13 கடைகளிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், ரெமோ, எம்.டி, சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பாக்குவகைகளை மூட்டை மூட்டைகளாக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் வரை இருக்கலாம் என தெரிவித்துள்ள அதிகாரிகள், அவற்றில் என்ன மாதிரியான புகையிலை பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது என சோதனைக்கு உட்படுத்தியபின், விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.


போஸ்னியாவில் பிறந்த இஸ்மாயில் ஜூல்பிக்கிற்கு இப்போது வயது ஆறு. பிறந்தது முதலே கைகள் இல்லாமலும் ஒரு கால் ஊனமுற்ற நிலையிலும் பிறந்தான்.
ஆனால் துணிவும் தன்னம்பிக்கையும்தான் அவனுக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று தந்துள்ளது. ஜெனிக்காவில் வசிக்கும் இஸ்மாயில் வாரம்தோறும் நீச்சல் வகுப்புகளுக்காக, சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போஸ்னியா தலைநகர் சர்ஜேவோவுக்கு வந்து போவது வழக்கம். கூச்ச சுபாவமும் நீரைக்கண்டால் அச்சமும் கொண்ட தங்கள் பிள்ளை தங்கப்பதக்கம் வெல்வான் என்று கனவில்கூட எண்ணாத அந்த பெற்றோர் மகனின் சாதனையைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர்


சென்னை ஐஐடி வளாகத்தின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மயிலாப்பூர் துணைஆணையர் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.மிருகவதை தடைச்சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. சென்னை ஐஐடியில் முற்போக்கு மாணவர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் மாட்டுஇறைச்சி உண்ணும் போராட்டத்தை நடத்தினர்.
மாட்டு இறைச்சித் திருவிழா நடத்திய சூரஜ் என்ற மாணவர் மீது வேறு சில மாணவர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த சூரஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்த ஐஐடி முன் திரள முயற்சிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஐஐடி வளாகத்தின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரத்தில் 2017 – 18-ஆம் கல்வியாண்டு முதல் 3 சட்டக்கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
3 மற்றும் 5 ஆண்டு சட்டப்படிப்புகளில் முதலாமாண்டில் தலா 80 மாணவர்களுடன் இந்த சட்டக்கல்லூரிகளை தொடங்க ஆணையிடப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டப்பணிகளை கவனிக்க தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரிக்கு திருச்சி அரசு சட்டக்கல்லூரி உதவிப்பேராசிரியர் முனைவர் எஸ்.முருகேசனும், தருமபுரி அரசு சட்டக்கல்லூரிக்கு கோவை அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் ப.சிவதாசும், ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரிக்கு நெல்லை அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் இராமபிரானும் தனி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


சென்னை தியாகராயநகரில் உள்ள பிரபல துணிக்கடை நிறுவனத்தின் கிளையில் இன்று  அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்துவந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.
அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதால், இதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
நெருப்பின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தீயணைப்புத் துறையினரால் உள்ளே செல்ல முடியவில்லை. அதனால் வெளியில் இருந்தே தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர். சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு செய்து வருகிறார்.
அப்போது பேசியவர், ''கீழ்த்தளத்தில் ஏற்பட்ட தீ, மேல்தளங்களுக்கும் வேகமாகப் பரவிவருகிறது. மனிதர்கள் யாரும் விபத்தால் பாதிக்கப்படவில்லை.
கட்டிடத்தின் உள்ளேஇருந்த 14 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
அருகிலுள்ள வணிக நிறுவனங்களையும், சிறு கடைகளையும் திறக்கவேண்டாம். வாகனங்கள் எதையும் நிறுத்த வேண்டாம். ஆர்வம் காரணமாக பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க வரவேண்டாம்'' என்று ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சியில் (பட்டயப் படிப்பு) சேர 31 முதல் ஜூன் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ''2017-2018-ம் கல்வியாண்டிற்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சியில் (பட்டயப் படிப்பு) சேர்வதற்கான ஒற்றைச்சாளர முறையிலான மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணங்கள் மே 31 காலை 10 மணி முதல் ஜூன் 21 வரை www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
இந்த இணையதளத்தில் உரிய கட்டணத்தைச்செலுத்தி தங்களது விவரங்களை மாணவர்கள் பதிவேற்றம் செய்யலாம். கட்டணம் செலுத்த பற்று அட்டை, கடன் அட்டை, இணைய வங்கிசேவை ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தலாம். பொதுப்பிரிவு, பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ. 500-ம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 250-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் மாணவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்தபின்னர், சேவ் என்ற பொத்தானை அழுத்த வேண்டும். பின்னர் பணம் செலுத்தும் தளம் தொன்றும். அதில் கட்டணம் செலுத்தலாம். மாணவர்கள் அளிக்கும் விவரங்கள் கலந்தாய்வின்போது சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்பே சேர்க்கை உறுதி செய்யப்படும்.
விண்ணப்பத்தில் அளிக்க வேண்டிய விவரங்கள், தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்ந்த விவரங்கள், கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பங்கள் பதிவேற்ற கடைசி நாள், சிறப்பு இட ஒதுக்கீடு விவரம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்'' என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆள் அரவமற்ற சாலை..! அங்கு யார்வந்து போகிறார்கள் என்பது கூட தெரியாத இரவு வேளை..! அப்படிப்பட்ட நள்ளிரவு நேரத்தில் தான் சேலத்தில் இயங்கி வரும் சட்டவிரோத சாய ஆலைகளில் இருந்து சாயக்கழிவுகள் திருமணிமுத்தாரு நதியின் கால்வாயில் மடைதிறந்த வெள்ளம் போல் பாய்கிறது..!
சேலம் மாவட்டம் களரம்பட்டி, கருங்கல்பட்டி, நெத்திமேடு, அம்மாப்பேட்டை,உத்தமசோழபுரம், பூலாவரி, கொண்டலாம்பட்டி, சீலநாய்க்கன்பட்டி பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் சட்டவிரோதமாக சாயப்பட்டறைகள் பெயர்பலகையுடன் பகிரங்கமாக இயங்கி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்
இவற்றை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டு கொண்டதாக தெரியவில்லை என்றும் பகல் முழுவதும் சேமித்து வைக்கும் சாயக்கழிவுகளை திருமணிமுத்தாறு நதியின் கால்வாயில் சாயக்கழிவு ஆலைகள் திறந்து விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் கால்வாயில் செல்லும் நிறம் சென்னிறமாக மாறிப்போயுள்ளது
அண்மையில் சீலனாய்க்கன்பட்டி ஏரியில் சாயகழிவால் மீன்கள் செத்து மிதந்தது அப்போது அங்குள்ள தென்னந்தோப்புக்குள் சட்ட விரோதமாக இடங்கி வந்த சாயப்பட்டறை உடைத்து நொறுக்கப்பட்டது. ஆனால் அதே இடத்தில் மீண்டும் தொடங்கப்பட்ட சாயப்பட்டறை ஜரூராக நடந்து வருகின்றது
சட்டவிரோத சாய ஆலைகள் தொடர்பாக நமது செய்தி குழுவினர் நள்ளிரவில் படம் பிடித்து சென்ற தகவல் அறிந்ததும், கிராம நிர்வாக அலுவலர் தலைமையினான குழுவினர் காலையில் சாயஆலைகளில் சம்பிரதாய ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அந்த பகுதிக்கு வந்த பொதுப்பணித்துறையினரும் சட்டவிரோத சாய ஆலைகளை பார்வையிட்டு சென்றனரே தவிர எந்த ஒரு ஆலையையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதிலும் சில சாய ஆலைகள் மக்கள் குடியிருக்கும் வீடுகளிலேயே ரகசியமாக செயல்பட்டு வருவது தான் வேதனை கலந்த உண்மை.
சேலம் மாவட்டத்தில் சாய ஆலைகளை மாசு கட்டுப்பட்டுதுறையினர் அவ்வப்போது இடித்து அகற்றினாலும், உள்ளூர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக சாய ஆலைகளை புதிது புதிதாக தொடங்கி நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாயக்கழிவுகளால் நிலத்தடி நீர் கெட்டு விவசாயம் சீர்கெட்டுள்ள இந்த நிலையில், நீரையும் நிலத்தையும்.. மாசுப்படுத்தும் சாயப்பட்டறைகளை தங்கள் பகுதிகளில் இருந்து இடித்து அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.


பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் தாசரி நாராயணராவ் உடல்நலக்குறைவால் இன்று ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 74.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்தவர் தாசரி நாராயணராவ். தெலுங்கில் 150-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர், 50-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். 250க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். சமூக அநீதி, ஊழல், பாலின பாகுபாடு குறித்து இவரது படங்கள் அதிகம் பேசின.
இந்தியாவில் அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற்றவர் தாசரி நாராயணராவ். தேசிய விருது, நந்தி விருது, தென்னிந்திய ஃபிலிம் பேர் விருதுகளைப் பெற்றுள்ளார்.
தாசரி நாராயணநாவ் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை 'அம்மா' எனும் பெயரில் திரைப்படமாக எடுக்க இருப்பதாக தாசரி நாராயண ராவ் அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நுரையீரலில் தொற்றால் அவதிப்பட்டு வந்த தாசரி நாராயணராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாசரி நாராயணராவ் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே புதிய மதுபானக் கடையை முற்றுகையிட்ட பெண்கள் மதுபாரை சூறையாடினர். மல்லிபுதூர் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுபானக் கடையை மூடக்கோரி அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மதுக்கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தும் இதுவரை மூடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் மதுக்கடையை முற்றுகையிட்டனர். மதுபாரில் புகுந்த அவர்கள், அங்குள்ள பொருட்களை சூறையாடினர்.


ரிலையன்ஸ் ஜியோநிறுவனம் வரும் தீபாவளி முதல் வீடுகளில் பயன்படுத்தப்படும் ப்ராட்பேண்ட் சேவையிலும் ஈடுபட உள்ளது.
((JioFiber)) ஜியோ-ஃபைபர் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி 500 ரூபாய் கட்டணத்தில் 100 ஜிபி டேட்டா வழங்கப்படும். இதன் வேகமும் 100 ((Mbps)) எம்பிபிஎஸ் இருக்கும். தற்போது ஏர்டெல் வழங்கும் 90 ஜிபி ப்ராட்பேண்ட் சேவையைப் பெற 1,099 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே ப்ராட்பேண்ட் சேவையில் முன்னனியில் இருக்கும் ஏர்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்களுக்கு ஜியோ-ஃபைபர் கடும் போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.
வரும் தீபாவளி முதல் சென்னை, மும்பை, டெல்லி, நொய்டா உள்ளிட்ட 10 நகரங்களில் அறிமுகப்படுத்தபடும் ஜியோஃபைபர் சேவை, படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. டிசம்பர் மாதத்திற்குள் 100 நகரங்களில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்படுள்ளது.


மத்திய அரசின் மாட்டிறைச்சி விற்பனை தடை சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பொதுநல மனுக்களை விசாரித்த நீதிபதிகள் முரளிதன், கார்த்திகேயன் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மேலும், இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை விதிக்கும் வகையில், விலங்கு வதை தடுப்புச்சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினர் எதிர்த்து வருகின்றனர். இந்த சட்டத்திருத்தத்தால், மாட்டு இறைச்சி தொழிலில் ஈடுபட்டு வருவோரின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி, ஆசிக் இலாஹி பாபு ஆகியோர் பொர்துநல மனுக்களை இன்று தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதிகள், "இந்தப் பிரச்சினை மத்திய - மாநில அரசுப் பட்டியலில் இருக்கிறது. அப்படியிருக்கும்போது மத்திய அரசு இதில் தன்னிச்சையாக ஆதிக்கம் செலுத்த முடியாது. எனவே மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


மத்திய அரசு பசுவதை தடை சட்டதிருத்தத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழக எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர், தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாகிருல்லாஹ் ஆகியோர் கூட்டறிக்கையை விடுத்துள்ளனர்.
திமுக தலைமைக்கழகம் சார்பில் இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த கூட்டறிக்கையில், "சந்தைகளில் இறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது அனைத்துபகுதி மக்களையும் கடுமையாக பாதிக்கக்கூடிய நடவடிக்கையாகும்.
மாநில பட்டியலில் இருக்கும் இப்பிரச்னையில் மத்தியஅரசு தானடித்தமூப்பாக தலையிட்டு, தன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் சார்பில் அறிவிக்கை வெளியிட்டிருப்பது மாநில உரிமைகளை உதாசீன படுத்துவதாகும். நாடாளுமன்றம், அமைச்சரவை போன்ற பல தீர்மானிக்கும் அமைப்புகளும் புறக்கணிக்கணிக்கப்பட்டு ஜனநாயக மரபுகளும் மீறப்பட்டிருக்கின்றன.
விவசாயிகளின் வாழ்க்கையை இது முற்றிலும் புரட்டிப்போடுகிறது. ஏற்கனவே வறட்சியின் பிடியில் வாழ்வை அடமானம் வைத்திருக்கும் விவசாயிகள், இனி பால்சுரப்பு நின்றுபோன மாடுகளையும், விவசாய பணிகளுக்கு உதவாத வயது முதிர்ந்த மாடுகளையும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற நிலை, பெரும் பொருளாதார இழப்புக்கு அவர்களைத் தள்ளும். விவசாயிகளின் தற்கொலை நீள்கதையாக வேண்டும், கிராமப்புற பொருளாதாரம் நொறுங்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறதா?
மாடுகளை வாங்கி விற்பவர்கள், இறைச்சி தொழிலில் ஈடுபடுபவர்கள் என்று பல்லாயிரகணக்கானவர்களை இந்த முடிவு வேலை இழக்க வைக்கும். வாழ்வாதாரத்தைத் தொலைக்க வைக்கும். சென்னையில் மட்டும் 40000 பேர் பாதிக்கப்படுவார்கள் என ஊடகங்கள் கூறுகின்றன. தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டவர்கள் கூடுதலாக பாதிப்புகளை சந்திப்பார்கள்.
உணவுக்கான உரிமையை மத்திய அரசின் இந்த முடிவு தகர்த்து எறிகிறது. என்ன உண்ண வேண்டும், உண்ண கூடாது என்று சொல்வதற்கு அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இது ஒற்றை கலாச்சாரத்தைத் திணிக்கும் பண்பாட்டு சர்வாதிகாரம்.
கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் இதற்கு அடிபணிய மாட்டோம் என்ற நிலை எடுத்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். தமிழக அரசு மௌனத்தைக் கலைத்து எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். ஏற்கனவே தமிழக நலனை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடிஅரசு, மேலும் பாதிப்புகளையும், நெருக்கடிகளையும் உருவாக்குவதை அனுமதிக்கக் கூடாது.
மோடி அரசின் 3 ஆண்டு கால ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்திருக்கக் கூடிய சூழலில், இதன் மீதான விவாதங்களையும், அதிருப்தியையும் திசைதிருப்பும் அரசியலும் இம்முடிவுக்குப்பின் இருப்பதை கவனிக்க தவறக் கூடாது.
இந்திய மக்களுக்குத் துயரம் இல்லாமல் ஒரு நாளும் இருந்து விடக்கூடாது என்ற வெறியுடன் எடுக்கப்பட்ட இந்த மோசமான முடிவை ரத்துசெய்ய வலியுறுத்தி, தமிழகமெங்கும் சுயேச்சையாகவும், கூட்டாகவும் மக்களைத் திரட்டி கண்டனம் முழங்குவோம். தமிழக மக்கள், இத்தகைய எதேச்சதிகார செயலை எதிர்த்து வீதிகளுக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரத்து 250 கோடி ரூபாயை, வரும் 9-ஆம் தேதிக்குள் அவர்களுக்கு வழங்கி, விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
செக்கானூரணியை சேர்ந்த 82 வயது மாயாண்டி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். தான் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளதாகவும், ஓய்வு பெற்று 24 ஆண்டுகளாகியும் தனக்கு சேரவேண்டிய பணபலன்கள் கிடைக்கவில்லை என்பதால், உணவுக்கே அல்லல்படுவதாகவும், தன்னைப் போன்றோருக்கு சாவதை தவிர வேறுவழியில்லை எனவும் கடிதத்தில் கூறியிருந்தார்.
கடிதத்தின் அடிப்படையில், தானாக முன்வந்து வழக்குபதிவு செய்த நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் அமர்வு, அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள தொகை மற்றும் வழங்கப்படவேண்டிய தொகை குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்துதுறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்தமனு இன்று மீண்டும் நீதிபதிகள் முரளிதரண், கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரத்து 250 கோடி ரூபாய் தொழிலாளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதா? இன்னும் எவ்வளவு தொகை நிலுவையில் உள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஒதுக்கப்பட்டுள்ள ஆயிரத்து 250 கோடி ரூபாயை, வரும் 9-ஆம் தேதிக்குள் தொழிலாளர்களுக்கு வழங்கி, அதுகுறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் போக்குவரத்துதுறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


குல்பூஷன் ஜாதவுக்கு எதிராக புதியஆதாரம் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையில் பணியாற்றி வந்த குல்பூஷன் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு ஈரானில் துறைமுக வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். அவரை இந்திய உளவாளி என குற்றம் சாட்டி பாகிஸ்தான் உளவுத்துறை கைது செய்தது. அவர் மீதான வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கடந்த ஏப்ரலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் குல்பூஷன் ஜாதவுக்கு எதிராக புதிய ஆதாரத்தை உளவுத்துறை வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் அட்டர்னி ஜெனரல் அஸ்தர் அசாஃப் டான் செய்தி தொலைக்காட்சியிடம் கூறும்போது, "குல்பூஷன் ஜாதவுக்கு எதிராக புதிய ஆதாரம் ஒன்று பாகிஸ்தானிடம் கிடைத்துள்ளது. இந்த ஆதாரம் சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.


நீச்சல்குளத்தில் தவறிவிழுந்த சக அதிகாரிகளை காப்பாற்ற முயன்ற இளம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அதே குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பயிற்சி முடித்த கடைசிநாளில் அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஷிஸ் தாஹியா 30 வயதான இளம் ஐஏஎஸ் அதிகாரியான இவருக்கு, இந்திய அயலுறவுத்துறை பணியில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கான பயிற்சியை நேற்றுடன் நிறைவு செய்தார்.
பயிற்சி நிறைவை கொண்டாடும் வகையில் டெல்லியில் நண்பர்களுடன் விருந்துக்கு சென்ற ஆஷிஸ், உணவு விடுதியில் இருந்த நீச்சல் குளத்தில் குளிக்க தயாராகியுள்ளார். அப்போது அவருக்கு அருகில் இருந்த பெண் அதிகாரி ஒருவர் மற்றும் குழந்தைகள் இருவர் நீச்சல் குளத்தில் தவறி விழுந்தனர். அவர்களைக் காப்பாற்ற நீச்சல் குளத்தில் குதித்த ஆஷிஸ் மூச்சு திணறி, குளத்தில் மூழ்கினார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஆஷிஸுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார் ஆஷிஸ் மது அருந்தியிருந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 வயதில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அயலுறவு பணிகளுக்கு செல்லவிருந்த நிலையில் ஆஷிஸுக்கு ஏற்பட்ட இந்த மரணம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஆஷிஸின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.


மாட்டிறைச்சி தடை குறித்த கருத்து மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று விமர்சித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என்றும் கூறியுள்ளார்.
மாட்டிறைச்சி தடை குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, “மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் நோக்கில் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது” என்றார். மேலும், மத்திய அரசின் அறிவிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், இத்தடையை சட்டரீதியாக எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். ஒருவருடைய உணவில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று கூறிய வந்த மம்தா, இப்படிப்பட்ட முடிவை தன்னிச்சையாக எடுக்க யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
புனித ரமலான் மாதம் தொடங்கும் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட தடை அறிவிப்பை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? என்று மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று  ஆஜரான பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 12 பேருக்கும் நிபந்தனைஜாமீன் வழங்கி லக்னோ சிபிஐ சிறப்புநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர்மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், கரசேவகர்களை தூண்டியதாக பாஜக மூத்ததலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் உமாபாரதி உள்ளிட்டோர் மீது கூட்டுசதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், இந்த வழக்கை விசாரித்த ரேபரேலி நீதிமன்றம் அத்வானி உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்தது. இதை அலகாபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.
அத்வானி உள்ளிட்டோர் மீது ரேபரேலி மற்றும் லக்னோவில் தொடரப்பட்ட 2 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து மீண்டும் விசாரிக்குமாறு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 4 வாரத்துக்குள் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் தினமும் விசாரணை நடத்தி 2 ஆண்டுகளில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் கடந்த 20-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் இன்று (மே 30-ம் தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, பாபர்மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் இன்று ஆஜராகினர். அவர்களுடன் பாஜகவின் வினய்கட்டியார், இந்துத்துவா பிரச்சாரகர் சாத்வி ரிதம்பரா ஆகியோரும் ஆஜராகினர்.
இந்நிலையில், அத்வானி உள்ளிட்டோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் தலா ரூ.50,000 பிணையாக செலுத்தி ஜாமீன் பெற்றனர்.


அசுர வேகத்தில் வளர்ந்துவரும் தொழிநுட்ப உலகில் நிஜத்தில் பார்ப்பது போன்ற 3D காட்சிகளை ஸ்மார்ட்ஃபோன்களில் காணும் தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாகிறது. 
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை முப்பரிமாண முறையில் நிஜம் போன்று தோற்றுவிக்கும் தொழில்நுட்பமே ஹோலோகிராம். ஆஸ்திரேலியா மற்றும் சீனா விஞ்ஞானிகள் நானோ-ஹோலோகிராம் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளனர். இத்தொழில்நுட்பமானது விரைவில் ஸ்மார்ட் ஃபோன்களில் தரப்படவுள்ளதாக RMIT பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
பொதுவாக இதுபோன்ற தொழில்நுட்பத்தை, கணினி மற்றும் திரையரங்குகளில் மட்டுமே பார்க்க முடியும். 3D கண்ணாடிகள் அணிந்து இதைப் பார்க்கலாம். ஆனால் ஸ்மார்ட் ஃபோன்களில் முப்பரிமாண காட்சிகளை, 3D கண்ணாடிகள் இல்லாமல் பார்க்கமுடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 
கணினிகளில் உருவாக்கப்படும் ஹோலோகிராம் காட்சிகள் மிக பெரியவை. இது அறிமுகம் செய்யப்பட்டால் அதுவே உலகின் மிகவும் சிறிய ஹோலோகிராம் காட்சியாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது ஸ்மார்ட்ஃபோன்களில் உருவாக்கப்படும் ஹோலோகிராம் காட்சிகள் தலைமுடி ஒன்றை விடவும் 1,000 மடங்கு சிறியதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இத்தொழில்நுட்பத்தினை ஸ்மார்ட்ஃபோன்களில் மட்டுமன்றி கணினித்திரைகள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் பயன்படுத்த முடியும். ஹோலோகிராம் தொழில்நுட்பத்தில், ஃபோன்களின் எல்சிடி திரையின் மேற்பகுதியில் நிஜத்தில் பார்ப்பது போன்ற முப்பரிமாண காட்சிகள் தோன்றும்.

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளில் சில பொருட்கள், தரக்குறைவானவை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஆயுர்வேத மற்றும் யுனானி அலுவலகத்தில் ஆயுர்வேதத்தின் படி தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டதாக பதிலில் கூறப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் பதஞ்சலி நிறுவன பொருட்கள் உள்பட 40 சதவீதம் பொருட்கள் முழுமையான ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்றும் அவை தரக்குறைவானவை என்றும் தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் மற்றும் பீஜ் ஆகிய பொருட்களில் 31 சதவீதம் அந்நிய நாட்டு மூலப் பொருட்கள் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய கைதி ஒருவர், புழல் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்த போரூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ராஜ்குமார், அவரது மகன் சாந்தகுமார் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைதான தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி செந்தில்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை கைதி செந்தில்குமார், கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. செந்தில்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் சிறையில் கடந்த ஓராண்டில் மட்டும், சுவாதி கொலை வழக்கில் ராம்குமார், கடந்த 10 ஆம் தேதி ஆசிரியை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளையராஜா, தற்போது இரட்டை கொலை வழக்கில் செந்தில்குமார் என தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புழல் சிறையில் அடிக்கடி தற்கொலை சம்பவங்கள் நிகழ்வதால், அங்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மின்சாரம் வழங்கும் பெட்டி திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் கொழுந்து விட்டெரியும் தீயை அணைக்க உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்தும் மின் ஊழியர்கள் வர தாமதமானது.
மின் ஊழியர்கள் வர தாமதமானதால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, பழுதடைந்த மின்சாரப் பேட்டியில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.


ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று ஓட்டல்கள் மூடப்படுகின்றன. ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்துக் கடைகளும் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண ஓட்டல்களுக்கு 12 சதவீதமும், குளிர்சாதன வசதி கொண்ட ஓட்டல்களுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை ஒன்றாம் தேதி அமலுக்கு வர உள்ள இந்த வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள ஒன்றரை லட்சம் ஓட்டல்களும், தென் மாநிலங்களில் உள்ள 5 லட்சம் ஓட்டல்களும் இன்று மூடப்படுகின்றன. ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும், விலையை அதிகரித்தால் மக்கள் சாலையோரக் கடைகளை நோக்கிப் படையெடுப்பார்கள் என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று ஓட்டல்களில் குளிர்சாதன வசதி என்பது வழக்கமானது என்பதால், அதற்காக 18 சதவீத வரி விதிப்பது ஏற்புடையது அல்ல என்று அவர்கள் கூறுகின்றனர். வருகிற 3ஆம் தேதி நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் உணவகங்களுக்கான வரியை முற்றிலும் நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே, ஆன்லைன் மருந்து வணிகச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் 30 ஆயிரம் மருந்துக் கடைகளும், நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துக் கடைகளும் இன்று இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து வணிக உரிமக் கட்டணத்தை 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருப்பதாகவும், வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபட உள்ளதாகவும் மருந்து வர்த்தகர்கள் தெரிவித்தனர். காலாவதியான மற்றும் போலி மருந்துகள் விற்பனைக்கு வாய்ப்பு உள்ளதாலும், போலி மருத்துவர்கள் மருந்துகளை தவறான சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்பதாலும் ஆன்லைன் விற்பனை கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இன்று மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டாலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் வழக்கம்போல் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.