April 2017


போராட்டத்தின் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மே 3ஆம் தேதி முதல் அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் என அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மருத்துவ பட்ட மேற்படிப்பில், அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யக் கோரி தமிழகம் முழுவதும்,அரசு மருத்துவர்கள் 11ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.


பெட்ரோல், டீசல் விலையில‌ சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 44 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளன. விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 71.17 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 60.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே குடியிருப்புப் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.கீழ்பென்னாத்தூரை அடுத்த பள்ளியம்பட்டு பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை, அகற்ற அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மதுக்கடையை மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மதுக்கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களை சாலையில் வீசி உடைத்தனர்.
மதுக்கடையை நிரந்தமாக மூடக்கோரி,ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


சென்னையில் 19வது ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா மோதினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், நான்கு செட்டுகளில் 2 க்கு 2 என்று கைப்பற்றி போட்டி சமநிலை பெற்றது. வெற்றியை தீர்மானிக்கும் 5வது செட்டில், எழுச்சியடைந்த ஜோஷ்னா சின்னப்பா, ஆக்ரோஷமாக விளையாடி, 11க்கு 4 என்ற கணக்கில் வென்று, தீபிகா பல்லிகல்லை வீழ்த்தினார்.முன்னதாக நடைபெற்ற ஆண்கள் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் சவுரவ் கோஷல், ஹாங்காங் வீரர் மேக்ஸ் லீயிடம் தோல்வியடைந்தார்.திரைப்படங்களில் வருவதுபோன்ற பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சிகள், கோவை – பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் அவ்வப்போது அரங்கேறும். கோவை – பொள்ளாச்சி நெடுஞாலையை தற்போது நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது செயல்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டிருக்கும் மணல் மற்றும் ஜல்லிகள் நிறைந்த சாலைதான் தனியார் பேருந்து ஓட்டுநர்களின் இலக்கு. இதில், பயணிகளை ஏற்றிக்கொண்டு, பாலைவனங்களில் நடைபெறுவதைப்போல் மணல் புழுதியை வாரி இறைத்துக்கொண்டு பறக்கின்றன தனியார் பேருந்துகள்.

இவர்கள் தார்ச்சலை, மணற்சாலை என மாறி மாறி பயணிக்கும்போது, மற்ற வாகன ஓட்டிகள் உயிர் பயத்தில் அஞ்சி நடுங்கியவாறு செல்கின்றனர். அதேவேளையில், பேருந்துக்குள் இருக்கும் பயணிகள் சிலர் பேருந்து ஓட்டுநர்களை ஊக்கப்படுத்தி உற்சாகமளிப்பதாக கூறப்படுகிறது. பேராபத்து நிறைந்த இந்த பந்தய காட்சியை, இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து வீடியோ பதிவு செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், ஐயப்பா மற்றும் SVT ஆகிய இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் வைரமுத்து மற்றும் நாகராஜ் ஆகியோரை நான்கு பிரிவுகளின் கீழ் கைது செய்த போலீஸார், அவர்களது ஓட்டுநர்களின் உரிமங்களையும் ரத்து செய்துள்ளனர்.


மேற்கு வங்கத்தில் போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளுடன் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முர்ஷிதாபாத் நகரில் ரோந்துப்பணியில் இருந்த போலீசார், சந்தேகத்தின்பேரில் நடமாடிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வில், அவை கள்ள ரூபாய் நோட்டுக்கள் என்பது தெரியவந்ததை அடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மத்திய பிரதேசத்தில், பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்.மில் இருந்து பணம் எடுத்த நபருக்கு, காந்தியின் படம் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளன. மொரேனா மாவட்டத்தில் கணேஷ்பூர் என்ற இடத்தில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. காந்தியின் உருவம் இல்லாத நான்கு 500 ரூபாய் நோட்டுகளை பெற்று திகைத்து போன கோவர்தன் சர்மா என்ற நபருக்கு, ஸ்டேட் வங்கி கிளை நல்ல ரூபாய் நோட்டுகளை கொடுத்தது. அச்சுப்பிழையால் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் இடம்பெறாமல் போவதற்கு வாய்ப்பிருப்பதாக ஸ்டேட் வங்கி அதிகாரிகள் விளக்கமளித்தனர்.ஆஸ்திரேலியாவில் பாறைகளுக்கிடையே, ஆயிரம் அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். டாஸ்மானியா ((Tasmania)) என்ற தீவில் மலைக்கும், தூண்பாறைக்கும் இடையே கயிறு கட்டப்பட்டிருந்தது. ஆயிரம் அடிக்கு கீழே கடல் அலைகளும், கூரிய பாறைகளும் மிரட்டிக் கொண்டிருக்க, லூகா இம்லர் ((Luka Irmler)) என்ற அந்த சாகசப்பிரியர் கயிற்றின் மீது நடந்தார். சிலிர்ப்பை ஏற்படுத்தும் இந்தக் காட்சிகளை தற்போது வெளியாகியுள்ளன.
லூகா இம்லர் கயிற்றின் மீது நடந்து சாகசம் நடத்திய இந்தப் பகுதி சுறாக்களும், திமிங்கலங்களும் சுற்றித்திரியும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.


விவேகம் படத்தின் ஷூட்டிங் செர்பியாவில் நடந்துவருகிறது. இதையடுத்து அஜீத், அங்கு தனது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம், விவேகம். காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் தீவிரவாதிகளை வேட்டையாடும் இன்டர்போல் போலீஸ் அதிகாரியாக அஜீத் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இப்போது செர்பியாவில் நடந்து வருகிறது. அஜீத்தும் விவேக் ஓபராயும் மோதும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் இங்கு படமாகி வருவதாகக் கூறப்படுகிறது. கூடவே ஸ்பாட் எடிட்டிங்கும் நடந்து வருகிறது. இதற்காக எடிட்டர் ஆண்டனி எல்.ரூபனும் அங்கு சென்றிருக்கிறார். அங்கு படக்குழுவுடன் தனது பிறந்த தினத்தை நடிகர் அஜீத் நாளை கொண்டாடுகிறார் என கூறப்படுகிறது.


இந்தியாவின் சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கையின் எதிரொலியாக, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர் நீக்கப்பட்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பாதுகாப்பு குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியா நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வெளியுறவுத்துறை சிறப்புச் செயலாளர் தாரிக் பதேமி, ரகசிய தகவல்களை கசியவிட்டதாகவும், எனவே அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரை பதவிநீக்கம் செய்து பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசாணை பிறப்பித்தார். ஆனால், இந்த உத்தரவை ஏற்க மறுத்துள்ள ராணுவம், அதை நிராகரித்துள்ளது. பதவிநீக்கம் குறித்த நடவடிக்கை முழுமை பெறாதது என்றும், விசாரணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட தாரிக் பதேமி, நவாஸ் ஷெரீப்பின் நம்பிக்கைக்குரியவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.


ரியல் எஸ்டேட் திட்டங்களை முறைப்படுத்தும் ரெரா சட்டம் நாளை முதல் அமல் படுத்த வேண்டிய சூழலில், நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் அதற்கு தயாராகவில்லை எனத் கூறப்படுகிறது. வீடு வாங்குபவர்களுக்கு நிம்மதியளிக்கும் விதமாக இருக்கும், ரெரா சட்டம் நீண்ட இழுபறிக்குப் பின் மே 1 முதல் அமலாகிறது. ரியல் எஸ்டேட் துறையில் புதிய திட்டங்களைத் தொடங்கும் முன்னர், அந்த திட்டத்தை, அதற்கென அமைக்கப்படும், முறைப்படுத்தும் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசின் ரெரா சட்டம் கட்டாயமாக்குகிறது. இதற்காக மாநிலந்தோறும், முறைப்படுத்தும் அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து மே 1 முதல் பதிவு செய்ய வேண்டும். ஆனால், நாட்டின் 32 மாநிலங்களில் 12 மாநிலங்கள் மட்டுமே இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளன.


என் வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், மற்றவர்களுக்காக நான் வாழ முடியாது என்று நடிகை யாமி கவுதம் கூறினார்.
தமிழில் கவுரவம், தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை யாமி கவுதம்.
சிவப்பழகு கிரீம் தொடர்பான விளம்பரத்தில் நடித்துவரும் இவர் மற்றும் நடிகர் ஷாரூக்கான், தீபிகா படுகோன், சோனம் கபூர் போன்ற நடிகர், நடிகைகளை இந்தி நடிகர் அபய் தியோல் கடுமையாகச் சாடியிருந்தார். இது தொடர்பாக யாமி கவுதமிடம் கேட்டபோது, ‘எனது வாழ்க்கையை நான் வாழ்கிறேன். எனக்கு சுயமாக சிந்திக்க தெரியும். எதில் நடிக்க வேண்டும், வேண்டாம் என்ற முடிவை நான் மட்டுமே எடுக்க முடியும். மற்றவர்களின் கருத்துகளுக்கு நான் வாழ முடியாது’ என்று கூறினார்.


அமெரிக்கா-வடகொரியா பிரச்சனை குறித்து, மூன்றாம் நாடு தலையிட்டு சுமுக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். நேற்று தடையை மீறி மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதும், வடகொரியாவுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் தராவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் எச்சரித்திருப்பதும் போர் ஏற்படும் என்ற பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்கா-வடகொரியா இடையே ஏற்படும் போர் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு விமானத்தில் பயணித்தபோது, செய்தியாளர்களிடம் பேசிய போப், பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வருமாறு உலக தலைவர்களுக்கு தாம் அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்தார். போரானது பிற நாடுகளுக்கும் பரவினால், மனிதநேயத்தின் சிறந்த பகுதியை இழக்க நேரிடும் என அவர் எச்சரித்தார்.டெல்லியில் விவாயிகள் என்ற போர்வையில் போராட்டத்தை நடத்திய அய்யா கண்ணு ஒரு மோசடிப் பேர்வழி என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
விவசாயிகளை பற்றி அவதூறாக பேசி வந்தால் பாஜக தேசிய செயலாலர் ஹெச்.ராஜாவால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹவாலா தரகரிடம் இருந்து ரூ.50 லட்சத்தை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர்.
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை டெல்லி போலீசார் கடந்த 25ம் தேதி கைது செய்தனர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தினகரனையும், அவர் நண்பர் மல்லிகார்ஜுனாவையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அதன் ஒரு பகுதியாக சென்னைக்கு அழைத்துவந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து அவர்கள் நேற்று மாலை டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’தமிழகத்தில் இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது இந்தி பற்றி மு.க.ஸ்டாலின் ஏன் கேட்கவில்லை?
தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளை வைத்து வளரும் நிலை, பாஜாவுக்கு கிடையாது. தினகரன் கைதுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கோடநாடு உள்ளிட்ட விவகாரங்களில் சட்டம்-ஒழுங்கை காக்கவேண்டியது மாநில அரசின் கடமை’ என்று கூறினார்.


புதுச்சேரியில் நெடுஞ்சாலைகளில் இருந்த 164 மதுக்கடைகள் மூடப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுக்கடைகள் மூடும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தியது என்றார். புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், தெரிவித்தார்.


அனைத்து முறைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கும் ஒரே மாதிரியாக விலை நிர்ணயிக்க பரிசீலிக்கப்படுவதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சிஐஐ ஆண்டு மாநாட்டில் பேசிய அவர், குறுகிய கால அடிப்படையில் மின்சாரத்துக்கு ஒரு யூனிட் 3 ரூபாய் என விலை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நீர், அனல், சூரியசக்தி, காற்றாலை என எல்லா மின்சாரத்துக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கான மின்சார இணைப்புக்கு கட்டணத்தை உயர்த்தும் திட்டம் ஏதுமில்லை என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.


உத்தரப்பிரதேசத்தில் உள்ள அம்ரோஹா என்ற ஊரில் 101 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. கோவர் சிங் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். ஏழைக் குடும்பங்களில் இருந்து 101 பெண்கள் தங்கள் வரன்களைத் தேர்வு செய்ய இந்த திருமண வைபோகம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மணமக்கள் குடிநீரை சேமிப்போம் என்றும் பசுவை பாதுகாப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


2017-18 பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணக்க, ஆன்லைன் பதிவு நாளை தொடங்குகிறது. மாணவர்கள் தங்கள் தகவல்களை இணையதளத்தில் உள்ளீடு செய்து, யுசர் ஐடி, பாஸ்வேர்டு பெற வேண்டும். பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானதும் மதிப்பெண் உள்ளிட்ட தகவல்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இம்மாதம் 31ம் தேதி வரை மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ஜூன் 3ம் தேதிக்குள் தபால் மூலமோ நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். பொறியியல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் 27ம் தேதி தொடங்குகிறது.தென் மாவட்டங்களுக்கு போதிய பேருந்து இல்லாததால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி அடைந்தனர்.


கோடை விடுமுறை காரணமாகவும், அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுமுறையாக இருப்பதாலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று இரவு ஏராளமான பயணிகள் குவிந்தனர். மதுரை, திருச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை போன்ற இடங்களுக்கு போதிய பேருந்துகள் விடப்படவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்தவோ, பிக்பாக்கெட்காரர்களை கண்காணிக்கவோ போலீசார் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். பேருந்துகள் இல்லாததால் அதிகாலை வரை ஏராளமான பயணிகள் பேருந்து நிலையத்திலேயே குடும்பத்துடன் காத்திருந்தனர்.அரசியல் கட்சிகளுக்கு பெருநிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைக்கான உச்சவரம்பை நீக்குவது, வெளிப்படைத் தன்மையை பாதிக்கும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏழரை சதவீதம் வரைதான் நன்கொடை வழங்க முடியும் என்ற விதியைத் தளர்த்தும் வகையில், நிறுவனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, எதிர்காலத்தில் இந்த நடவடிக்கை தேர்தலில் வெளிப்படைத்தன்மையை அழித்துவிடும் என்றார். ஒவ்வொரு நிறுவனமும் தனது லாப நட்ட கணக்கை அறிவித்து, அதில் எவ்வளவு தொகை அரசியல் கட்சிக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது என்று அறிவிக்க வேண்டிய நிலை இருந்ததாகவும், புதிய சட்டத்தால் எந்தக் கட்சிக்கு நன்கொடை தரப்பட்டது என்பதை கணக்கில் காட்ட வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக தேர்தல் நேரத்தில் போலியான நிறுவனங்களின் பெயரால் பெரும் தொகை செலவிடப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த சட்டத்திருத்தத்தால் ஏற்படும் விளைவுகளை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக பரிசீலித்து வருவதாகவும் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.


பிரிட்டன், சீனா இடையிலான 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூர சரக்கு ரயில்வே சேவை தொடங்கியுள்ளது. பிரிட்டன்- சீனா இடையே ரயில்பாதை மூலம் சரக்குகளை கொண்டு செல்ல ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக, லண்டனில் இருந்து, பீர்,விஸ்கி, பால்பவுடர், மருந்து பொருட்கள், உபகரணங்கள் ஆகிய சிறிய நுகர்பொருட்களை ஏற்றிக்கொண்டு, 88 கண்டெய்னர்களுடன் சரக்கு ரயில் ஒன்று கடந்த 10ஆம் தேதி புறப்பட்டது. பிரான்ஸ்,பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா, கஜகஸ்தான் ஆகிய நாடுகள் வழியாக, 12 ஆயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்து 20 நாட்களில் சீனாவின் யீவியூ நகரை அந்த ரயில் வந்தடைந்தது. கப்பலில் 10 ஆயிரம் முதல் 20ஆயிரம் கண்டெய்னர்கள் கொண்டு வரலாம் என்றாலும், அவை வந்து சேர்வதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே வெடித்த மோதல் கலவரமாக மாறியது. கற்களை வீசி ஒருவரையொருவர் தாக்கி வன்முறையில் ஈடுபட்ட இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் கண்ணில் பட்ட வாகனங்களையெல்லாம் அடித்து நொறுக்கினர். நிலைமைக் கட்டுப்பாட்டை மீறிப் போனதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
பின்னர் காவல்துறையினர் திரிணாமூல் தொண்டர்களிடமிருந்து பாஜகவினரை மீட்டு வேன் மூலம் பத்திரமாக அனுப்பி வைத்தனர்


திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் அடுப்புக்கரி இருந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த தேவாம்பிகையாமினி என்பவர் சுவாமி தரிசனம் செய்த பின், கோயிலுக்கு வெளியே லட்டு கவுன்டரில் லட்டு பெற்றுக்கொண்டார். சாப்பிடுவதற்காக லட்டை உடைத்தபோது அதில் அடுப்பு கரித்துண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தேவாம்பிகையாமினி தேவஸ்தான சுகாதார துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் கோயிலுக்குள் கேஸ் பயன்படுத்தி தயாரிக்கப்படும் லட்டுவில் எப்படி கரித்துண்டு வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா, விவசாய விளைப் பொருட்களுக்கு சந்தையில் உரிய விலை கிடைப்பதற்குரிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து விவசாயிகளின் பயிர்களுக்குரிய விலையைப் பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் தலைமையில் இயங்கும் நிதி ஆயோக் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்றும் தெரிவித்த அவர் , விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதன் மூலம் 2022ம் ஆண்டுக்குள் விவசாயம் மூலம் அரசு பெறும் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும் என்று நம்புவதாகவும் நிதி ஆயோக் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் புகுந்து காவலாளியை கொலை செய்துவிட்டு, விலைமதிப்பு மிக்க 5 கைக்கடிகாரங்களை கொள்ளையடித்துச்சென்ற 4 கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெயலலிதா அணிந்த கைக்கடிகாரங்களை திருடிச்சென்றவர்கள் சிக்கிய பின்னணி.


மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்கும் கொடநாடு பங்களாவில் கடந்த 24 ந்தேதி காவலாளி ராம் பகதூர் கொலை செய்யப்பட்டார். பங்களாவில் கொள்ளை முயற்சி நடந்திருப்பதாக மட்டும் தெரிவித்த காவல்துறையினர், மற்ற விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா. இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிடம் கடந்த 2009 ஆம் ஆண்டுமுதல் 2012 ஆம் ஆண்டுவரை, கார் ஓட்டுனராக பணியில் இருந்த, சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் என்பவர் தான், இந்த கொலை சம்பவத்துக்கு மூளையாக இருந்துள்ளார் என்கிறது காவல்துறை. கொடநாடு பங்களாவில் கோடிக்கணக்கில் பணம் இருக்கும் என்றும், அங்கு பாதுகாப்புக்கு சிசிடிவி காமிராக்களோ, நாய்களோ இல்லை என்றும் தனது நண்பரான சயான் என்பவரிடம் தெரிவித்துள்ளார் கனகராஜ்.

அதன்படி கேரளாவைச் சேர்ந்த சயானின் நண்பர்கள் 9 பேருடன் இணைந்து, மொத்தம் 11 பேர், கடந்த 23 ந்தேதி இரவு கோவையில் இருந்து 3 கார்களில் கொடநாடு சென்றுள்ளனர். அனைத்து கார்களிலும் போலியான நம்பர் பிளேட்டுகளை பொருத்தி உள்ளனர். கொட நாடு எஸ்டேட்டின் 8 வது நுழைவாயிலில் இருந்த, கிருஷ்ணா தம்பா என்ற காவலாளியை தாக்கி ஒரு கும்பல் உள்ளே நுழைந்துள்ளது. 10 வது கேட்டில் இருந்த காவலாளி ஓம் பகதூரை தாக்கிய போது அவர் எதிர்த்து போராடியதால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மற்றோரு கும்பலும் உள்ளே புகுந்துள்ளது.

ஜன்னல் வழியாக பங்களாவுக்குள் புகுந்த 11 பேரும், மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் பயன்படுத்தும் 3 அறைகளின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்குள்ள பீரோக்களில் பணம் ஏதும் இல்லை என்பதால், அங்கிருந்த படிகக் கல் ஒன்றையும், ஜெயலலிதா அணியும் விலைமதிப்புமிக்க 5 கைக்கடிகாரங்களையும் திருடிக்கொண்டு தப்பி உள்ளது கொள்ளைக் கும்பல்.
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணிவரை இருந்த கொள்ளைக் கும்பலுக்கு பெரிய அளவில் பணமோ, சொத்துப் பத்திரங்களோ கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டுகிறது காவல்துறை. அங்கிருந்து தப்பிய 11பேரில் கனகராஜும், சயானும் சாண்ட்ரோ காரில் கோவை திரும்பி, அங்கிருந்து பேருந்து மூலம் அவரவர் ஊர்களுக்கு சென்றுள்ளனர். மீதம் உள்ள 9 பேரும் இன்னோவா மற்றும் எண்டவர் கார்களில் கேரளாவுக்கு புறப்பட்டுள்ளனர். 24 ந்தேதி அதிகாலை, கூடலூர் காவல்துறையினர் வாகனச்சோதனையின் போது, இரு கார்களில் வந்தவர்களும் போலி ஆவணங்களைக் காட்டி தப்பிச்சென்றுள்ளனர்.

காவல்துறையினர் சேகரித்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கேரளாவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் ஆத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும், இதனை அங்குள்ள காவல்துறை உறுதிபடுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் காவல்கண்காணிப்பாளர் முரளி ரம்பா. கனகராஜின் கூட்டாளி சயான் பாலக்காடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவரது மனைவியும் குழந்தையும் பலியான வழக்கு கேரள காவல்துறையினரின் விசாரணையில் உள்ளதாகவும், இதில் தொடர்புடைய மேலும் 5 பேரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 4 பேர் கொடுத்த தகவலின்படி, ஜெயலலிதா வீட்டில் இருந்து திருடிச்சென்ற 5 கைக்கடிகாரங்களையும் கேரளாவில் உள்ள ஆற்றில் தூக்கி வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கைகடிகாரங்களையும், படிகத் துண்டையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொட நாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட பேக்கரி ஊழியர் குடும்பத்துடன் விபத்தில் சிக்கிய சம்பவத்தில், பலியானதாக சொல்லப்பட்ட அவரது மனைவி மற்றும் மகள் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கொட நாடு காவலாளி கொலை வழக்கில் தொடர்புடையதாக காவல்துறையால் சந்தேகப்படும் கேரளாவைசேர்ந்த சயான் என்பவரை விசாரணைக்கு ஆஜராகும் படி வெள்ளிக்கிழமை கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்க்கு சென்ற தனிப்படை போலீசார் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இந்தனிலையில் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சயான் குடும்பத்துடன் காரில் தப்பிச்சென்ற போது பாலக்காடு அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், இதில் அவரது மனைவி, மகள் பலியானதாகவும் சொல்லப்பட்டது. சயான் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

பலியான சயானின் மனைவி, மகள் ஆகியோரின் சடலங்கள் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள காவல்துறையினர் அவர்களது சடலத்தை ஆய்வு செய்த போது இருவரது கழுத்திலும் கத்தியால் அறுத்தது போன்று ஆழமான காயங்கள் இருந்தது. விபத்தில் சிக்கியவர்களின் உடலில் இப்படிப்பட்ட காயங்கள் எப்படி ஏற்பட்டது என்ற சந்தேகத்தில் கேரள போலீசார் சயானிடம் விசாரிக்க கேவை வந்தனர்.

சயானிடம் விசாரித்த பின்னர் மனைவி மகள் கழுத்தில் ஏற்பட்ட ஆழமான காயங்களுக்கு விடைகிடைக்கும் என்று தெரிவித்த கேரள காவல்துறையினர் மருத்துவ மனையின் பின் வாசல் வழியாக புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை தமிழக காவல்துறை சயானினின் மாமனார் வீட்டில் விசாரித்ததில் தொடங்கி தற்போது தனியார் மருத்துவமனியில் அளிக்கப்படும் சிகிச்சை வரை பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
போக்குவரத்து நெரிசல் இல்லா அகலமான சாலையில் சென்ற கார் லாரியின் பின்பக்கத்தில் எதிர்பாராதவிதமாக மோதியதா ? அல்லது யாராவது காரை விரட்டி வந்து லாரியின் பின்பக்கத்தில் ஒதுக்கி மோதவிட்டனரா என்ற கேள்வி எழுகிறது.

வழக்கமாக விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்பது தான் வழக்கம் ஆனால் சயானை தனியாருக்கு சொந்தமான மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதும் சந்தேகத்தை பலப்படுத்தியுள்ளது.

முதலில் சயான் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் தற்போது அவர் உயிருக்கு போராடி வருவதாக கூறுவதும் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

சயான் கடந்த 24 ந்தேதி கோவையில் இருந்து தலைமறைவாகிவிட்டதாக போலீஸ் கூறிவந்த நிலையில், சயான் எப்படி சனிக்கிழமை அதிகாலை குடும்பத்துடன் மீண்டும் கோவையில் இருந்து கேரளாவுக்கு சென்றார் ?
கொட நாட்டில் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து 200 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டதாகவும் முக்கிய ஆவணங்கள் பல திருடப்பட்டதாகவும், இதன் பின்னணியில் கோவையை சேர்ந்த அதிமுக பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்பட்ட நிலையில் கோவை குனியமுத்தூரில் வசித்துவந்த சயானுக்கு காவல்துறையால் நெருக்கடி கொடுக்க தூண்டியது யார் ?

சயானுடன் தொடர்புள்ள அந்த அதிமுக பிரமுகர் யார் ? காட்டிக்கொடுத்துவிடக்கூடாது என்பதர்காக அவரது கூலிப்படையினரால் இந்த விபத்து நிகழ்த்தப்பட்டதா? என்பன போன்ற தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு விடைகிடைத்தால் கொட நாடு காவலாளி கொலைக்கும் இது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்பதற்கும் விடை கிடைத்துவிடும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.


ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைக்காமல் போவது நீதித்துறையின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் கூறியுள்ளார். டெல்லியில் சட்ட உதவி தன்னார்வலர்களின் இரண்டு நாள் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய தலைமை நீதிபதி, இக்கருத்தை வெளியிட்டார். அதே நிகழ்வில் உரை நிகழ்த்திய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நீதியை விரைவாக அடைய தொழில்நுட்ப உதவியை கையாள வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்ட உதவி தன்னார்வலர்கள் மூலம், வழக்கறிஞர்களை நாட வேண்டிய கிராமப்புற மக்களின் சிரமங்கள் போக்கப்படும் என்றும் சட்டத்துறையில் நன்கு பயிற்சி பெற்ற சட்ட உதவி தன்னார்வலர் குழுவினரை அணுகி, தங்கள் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு ஏழை மக்கள் தீர்வு காண முடியும் என்றும் இந்தக் கூட்டத்தில் விளக்கப்பட்டது.


பிரேசில் நாட்டில் அதிபர் மைக்கேல் டெமரின் தலைமையிலான அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அரசின் தொழிற் கொள்கையால் வேலை வாய்ப்புகள் பறி போவதாக கூறியுள்ள தொழிற் சங்கங்கள், வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளன. தொழிலாளர்களுடன், ஆசிரியர்கள் வங்கி ஊழியர்களும் கைகோர்த்துள்ளதால், பிரதான நகரங்களில் உள்ள பள்ளிகள், தொழிற்சாலைகள் மற்றும் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டன. பிரேசிலியா நகரில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டு வீசியும் துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டத்தை கலைத்தனர்.


ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். சீனாவின் ஊகான் நகரில் நடைபெறும் இந்த தொடரின் கால் இறுதியில் அந்நாட்டு வீராங்கனை ஹி பிங்ஜியாவோவுடன் மோதிய சிந்து 21-15 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். எனினும், அடுத்த 2 செட்களிலும் கடும் நெருக்கடி கொடுத்த பிங்ஜியாவோ 15-21, 21-14, 24-22 என்ற கணக்கில் 1 மணி, 20 நிமிடம் போராடி வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். வெற்றி வாய்ப்பை இழந்த சிந்து போட்டித் தொடரில் இருந்து வெளியேறினார்.


இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் பட‌குகளில் 20 படகுகளை மட்டும் நிபந்தனை அடிப்படையில் விடுவிக்க இலங்‌கை அரசு தீர்மானித்துள்ளது.
தமிழக மீனவர்களின் படகுகளை‌ இலங்கையில் இருந்து‌ ‌மீட்டுத் தரக்கோரி மீனவ சங்கத்தினர் மத்தி‌‌ய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ட்ரூ சிலோன் என்ற இணையதள செய்தி‌ நிறுவனத்திற்கு அந்நாட்டு அமைச்சர் ‌மஹிந்தா அமரவீர அளித்துள்ள பேட்டியில், தமிழக மீனவர்கள் படகு‌களில் 20 படகுகளை மட்டும் முதற்கட்டமாக நிபந்தனை அடிப்படையில் விடுவிக்க உள்ளோம் எனக் கூறியுள்ளார்.


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் எவ்வித மோசடிக்கும் வாய்ப்பு இல்லை என்பதை நிரூபிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டப் போவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, அரசியல் கட்சிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மோசடி செய்ய இயலாதது என தெளிவுபடுத்தப் போவதாக கூறினார். மேலும், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் , யாருக்கு வாக்களித்தோம் என வாக்காளர்கள் ரசீது பெறும் வெளிப்படைத் தன்மை நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.


கொடநாடு பங்களா காவலாளி கொலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அங்கு 200 கோடி ரூபாய் இருந்ததாகவும், அதை கொள்ளையடிக்க முயற்சித்த போதுதான் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டதாகவும், காவல்துறையிடம் சிக்கியுள்ள 6 பேர் தெரிவித்துள்ளனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில்‌ பணிபுரிந்து வந்த காவலாளி ஓம்பகதூர் சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்டார். காவலாளி ஓம்பகதூர் கொலையில் முக்கிய குற்றவாளிகளாக சந்தேகிக்கப்பட்ட கனகராஜ் இன்று காலை கார் விபத்தில் உயிரி‌ழந்தார். கனகராஜ்-க்கு நெருங்கியவரான சயான் மற்றொரு சாலை விபத்தில் காயமடைந்து கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் பங்களா காவலாளி கொலை தொடர்பாக கேரள மாநிலம் திருச்சூரில் திபு, உதயன், சதீஷன், சந்தோஷ் ஆகிய 4 பேரும், மலப்புரத்தில் ஜித்தன் ராய், அர்ஷத் ஆகிய இருவரையும் காவல்துறையினர் பிடித்துள்ளனர். அவர்களை கோவை அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர். கொலை தொடர்பாக குட்டி, மனோஜ்‌ உள்பட 3 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும் பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்‌.
பிடிபட்டிருக்கும் 6 பேரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொடநாடு பங்களாவில் 200 கோடி ரூபாய் இருந்ததை அறிந்து, கொள்ளையடிக்க திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர். இதற்காக, பங்களாவிற்கு அருகிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகவும், கொள்ளையடிக்க முயற்சித்த போதுதான் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டதாகவும், காவல்துறையினரிடம் ஆறு பேரும் தெரிவித்துள்ளனர்.
முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் கனகராஜூக்கும், சயானுக்கும் இடையே, கோவையை சேர்ந்த‌ அதிமுக முக்கியப் புள்ளி ஒருவர் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.


கஞ்சாவை மருத்துவ நோக்கத்துக்கு பயன்படுத்த மெக்சிகோ நாடாளுமன்றக் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு 374 பேர் ஆதரவாகவும் 7 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 11 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை இதன்படி கஞ்சா பயிரை மருத்துவ மற்றும் அறிவியல் நோக்கத்துக்காக வளர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. கஞ்சாவை மருத்துவத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் பொதுக் கொள்கைகளை வடிவமைக்கவும் சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மசோதா அதிபர் என்ரிக் பீனா நீட்டோவின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்துவது குறித்து வடகொரியா நெருப்புடன் விளையாடுகிறது என்று தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற அண்டை நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
போர்ப்பதற்றம் சூழ்ந்திருக்கும் நிலையில், வட கொரியா இன்னொரு ஏவுகணைச் சோதனையை நடத்தியிருக்கிறது. இருப்பினும் புறப்பட்ட சில நொடிகளிலேயே அது விண்ணில் வெடித்துச் சிதறியதாக தென்கொரிய மற்றும் அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏவுகணை வடகொரிய எல்லையைத் தாண்டவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் இது எந்தவகையைச் சேர்ந்தது என்பது தெரியவில்லை. இந்தச் சோதனை குறித்து வடகொரியா இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. சில நாள்களுக்கு முன்பும் வடகொரியாவின் இதேபோன்றதொரு ஏவுகணைச் சோதனை தோல்வியில் முடிந்தது.
வடகொரியா நெருப்புடன் விளையாடிக் கொண்டிருப்பதாக தென் கொரியா எச்சரித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்களை மதிக்கத் தவறிவிட்டதாகவும் தென்கொரியா குறிப்பிட்டிருக்கிறது. தொடர்ந்து இதேபோல் செயல்பட்டுக் கொண்டிருந்தால், கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தென்கொரியா கூறியிருக்கிறது. வடகொரியாவின் மற்றொரு அண்டை நாடான ஜப்பானும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது.
வடகொரியாவின் ஏவுகணைச் சோதனை முயற்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். சீனாவின் அமைதி முற்சிகளுக்கும் விருப்பங்களுக்கும் வடகொரியா மரியாதை அளிக்கவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ட்ரம்ப், ஏவுகணைச் சோதனை தோல்வியில் முடிந்தாலும், இது மோசமான நடவடிக்கை என்று குறிப்பிட்டிருக்கிறார். வடகொரியப் பிரச்னையை அமைதி முறையிலேயே தீர்க்க தாம் விரும்புவதாக ட்ரம்ப் ஏற்கெனவே கூறியிருந்தார்.


கடந்த சில வாரங்களாக சசிகலாவை சிறையில் சந்திப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. கடந்த 15-ம் தேதியில் இருந்து அவரை வெறும் 3 பேர் மட்டுமே சந்தித்துள்ளனர்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல் தெரியவந்துள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் சசிகலாவின் வக்கீல்கள் தவிர்த்து 19 பேர் அவரை சிறையில் சந்தித்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக மூன்று பேர் மட்டுமே அவரை சந்தித்து பேசியுள்ளனர், அதில் ஒருவர் சென்னையை சேர்ந்த டாக்டர் என தெரியவந்துள்ளது.
இளவரசி உடல்நலக் குறைவு காரணமாக சிறை மருத்துவமனையில் அதிக நேரம் இருக்கிறார். எனவே சசிகலா சிறையில் தனியாகவே இருக்கிறார் என சிறை தகவல்கள் கூறியுள்ளன.


நாடு முழுவதும் 9 லட்சம் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கார்ப்பரேட் விவகாரத்துறை சார்பில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய வருவாய்த்துறை செயலர் ஹஸ்மக் ஆதியா ((Hasmukh Adhia)), நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 15 லட்சம் நிறுவனங்களில், 8 முதல் 9 லட்சம் நிறுவனங்கள், கடந்த ஆண்டுக்கான கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றார். இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிக்க வாய்ப்புள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், அவற்றில் சில நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். கணக்கு விவரங்களை முறையாக தாக்கல் செய்யாத நிறுவனங்களின் வர்த்தக செயல்பாடுகளை 15 நாள்களுக்கு ஒரு முறை கண்காணிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஹஸ்மக் அதியா தெரிவித்தார்.


கூகுள் நிறுவனத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் சுந்தர்பிச்சை, 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிஇஒ (CEO) ஆக பதவி உயர்வு பெற்றார். அந்த வகையில் கடந்த ஆண்டு அவருக்கு ஊதியமாக 6 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களை பெற்றுள்ளார். 44 வயதை எட்டியுள்ள சுந்தர்பிச்சை 2015ஆம் ஆண்டில் சம்பளமாகப் பெற்ற 6 லட்சத்து 52 ஆயிரத்து 500 டாலர்கள் தொகையைவிட சிறிது குறைவாகவே 2016ஆம் ஆண்டில் ஊதியத்தைப் பெற்றுள்ளார். அதுமட்டும் இன்றி சுமார் 200 மில்லியன் டாலர் அளவிற்கு சுந்தர் பிச்சைக்கு கூகுள் பங்குகள் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளன. இது ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 285 கோடியே 50 லட்சமாகும். வெற்றிகரமாக பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய வகையில் பெரும் ஊதியம் சுந்தர்பிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் ஸ்மார்ட்ஃபோன், விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், ரூட்டர், குரல் மூலம் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் உள்ளிட்ட தயாரிப்புகளை கூகுள் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த வாரத்தில், கூகுள் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு முதல்முறையாக 600 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பிலிப்பைன்ஸ் நாட்டில் 6 புள்ளி 8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிலிப்பைன்சில் சனிக்கிழமை அதிகாலை 4 மணி 23 நிமிடங்களுக்கு மிண்டானோ தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்படும்போது, மின் சேவை தடையானதால், மக்கள் இருளுக்குள்ளேயே அடித்துப் பிடித்து, தெருக்களில் ஓடி வந்து தஞ்சம் அடைந்தனர். நிலம் மேலெழும்பி பின், பக்கவாட்டில் பென்டுலம் போல் ஆடியது போன்று உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். கடலுக்கு அடியில் 53 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே, கரையோரப் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். கலன் (Galan) மற்றும் மலபதான் (malapadan) நகரங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி உள்பட இருவர் காயமடைந்தனர்.அக்ஷய திரிதியை தினத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை தற்போது நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு அக்ஷய திரிதியை விற்பனையை நகைக்கடைகள் நேற்றே தொடங்கின. செய்கூலி, சேதாரம் போன்ற வழக்கமான கட்டணங்களில் சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்க நகைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அக்ஷய திரிதியை-யை முன்னிட்டு புதிய புதிய டிசைன்களில் நகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தியாகராய நகரில் உள்ள நகைக்கடைகளில் ஏராளமானோர், தங்கம் மற்றும் வைர நகைகளை தேர்வு செய்து வருகின்றனர்.
பிற நாள்களை விட தங்கநகை விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால், தியாகராய நகரில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் தியாகராய நகரில் திரண்டதால், சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


பணக்கார விவசாயிகளுக்கு வரி விதிக்கலாம் என பிரதமர் மோடியின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ஆலோசனை வழங்கியுள்ளார். விவசாயத்தின் மூலம் வரும் வருவாய்க்கு வரி விதிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு தடை விதிக்கும் சட்டம் உள்ளதை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், விவசாய வருமானத்திற்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, விவசாயிகளில் பணக்காரர் யார்? ஏழை யார் எனக் கண்டறிவது அவசியமாகிறது எனக் கூறியுள்ள அரவிந்த் சுப்ரமணியன், பணக்கார விவசாயிகளுக்கு வரி விதிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே இந்த வாரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வேளாண் வருவாய்க்கு வரி விதிக்கும் திட்டம் இல்லை எனத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


சென்னையில், அடுக்குமாடி குடியிருப்புகள், தரை தளங்களில் உள்ள செல்போன் டவர்களில், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கதிர்வீச்சு கட்டுப்பாடு பாதுகாப்பு சோதனை, சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்கப்பட்ட கேள்விக்கு, தொலைத்தொடர்பு துறை அளித்திருக்கும் பதில் மூலம், இந்த தகவல் தெரியவந்திருக்கிறது. செல்போன் டவர்களிலிருந்து, வெளியாகும் கதிர்வீச்சை கண்காணிக்கும் வழிமுறைகள் என்ன? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கார்த்திக்கேயன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு, சென்னையில் உள்ள தொலைத்தொடர்புத்துறையின் தலைமை பொது தகவல் அதிகாரியும், இயக்குநருமான தமிழ்மணி பதிலளித்திருக்கிறார். அதில், சென்னை பெருநகர பகுதிகளில், 36 ஆயிரத்து 442 செல்போன் டவர்கள் நிறுவபட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். பன்னாட்டு அளவில், மிக கடுமையான அலைவரிசை கதிர்வீச்சு கட்டுப்பாடுகளை கொண்ட நாடுகளில் இந்தியா முதன்மையானதாகத் திகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புதுறையின் ஒழுங்குமுறை விதிகளை மீறி, அதிகளவிலான கதிர்வீச்சு அளவுகளை கொண்ட டவர்களை பயன்படுத்தும் செல்போன் நிறுவனங்களுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், சென்னை பெருநகரில், அளவுக்கதிகமான கதிர்வீச்சு மாறுபாட்டு நடவடிக்கையில் சிக்கி, எத்தனை செல்போன் நிறுவனங்கள், தண்டிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படவில்லை.
ஆண்டுக்கொருமுறை, செல்போன் டவர்களின் கதிர்வீச்சு கட்டுப்பாட்டு அளவை, தொலைத்தொடர்புத்துறை கண்காணிக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அளிக்கப்பட்டுள்ள பதில், ஆண்டுக்கு ஒருமுறை, 10 சதவீத டவர்களில் கதிர்வீச்சு அளவுகள் கண்காணிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் ஏர்டெல் நிறுவனம் 9 ஆயிரத்து 607 செல்போன் டவர்களை நிறுவியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக வோடஃபோன் நிறுவனம், 7 ஆயிரத்து 768 செல்போன் கோபுரங்களை அமைத்துள்ளது. செல்போன் சந்தையில், விட்ட இடத்தை பிடிக்க இலவசத்தை அள்ளிவீசிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 6 ஆயிரத்து 190 செல்போன் டவர்களை அமைத்துள்ளது. ஐடியா 4 ஆயிரத்து, 284 டவர்களையும், ஏர்செல் 4 ஆயிரத்து 111 டவர்களையும், இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 3 ஆயிரத்து 98 செல்போன் கோபுரங்களையும் அமைத்துள்ளன.


எதிர்ப்பை மீறி நடத்தப்பட்ட வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி அடைந்துள்ளது. ஐ.நா.சபை, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தலைநகர் பியாங்யாங்கை அடுத்த பக்சாங் என்ற இடத்தில் ஏவுகணை சோதனையை நடத்தியது. ஆனால் ஏவப்பட்ட சில விநாடிகளில் அது 71 கிலோமீட்டர் உயரத்துக்குச் சென்று வடகொரியாவிலேயே விழுந்துவிட்டதாக தென்கொரியாவின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்திருப்பது அந்த நாட்டுக்கு மோசமான நேரம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


அதிமுகவில் உள்ள ஒரு அணிக்கு எதிராக மட்டும் நடைபெறும் ரெய்டு, கைது நடவடிக்கைகள், தமிழக அரசை முடக்க நினைக்கும் மத்திய அரசின் அதிகார மீறல்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, டெல்லி போலீஸ் என அனைத்து வகையான ஏஜென்சிகளையும் முடுக்கிவிட்டு, அதிமுகவை முதலில் உடைத்தும், பிறகு இணைப்பதற்குமான முயற்சிகளை செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மாநில அரசு நிர்வாகத்தை மத்திய பாஜக அரசு முழுமையாக நிலைகுலைய வைத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவில் உள்ள ஒரு அணிக்கு எதிராக நடக்கும் “செலக்ட்டிவ் ரெய்டு” – “செலக்ட்டிவ் கைது” உள்ளிட்டவற்றின் பின்னனியிலும், இன்னொரு அணியின் ஊழலை தூசு படியவிட்டு வேடிக்கை பார்ப்பதிலும் பா.ஜ.க.வின் கை வெளிப்படையாகத் தெரிகிறது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகள் எல்லாம், மத்திய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்றுவதற்கு நடக்கும் முயற்சிகள் என்றும் அவர் புகார் கூறியுள்ளார்.
இத்தகைய வீண் முயற்சிக்காக அரசியல் சித்துவிளையாட்டுகளில் ஈடுபடாமல், இதுவரை அதிமுக அமைச்சர்களின் மீது நடத்தப்பட்டுள்ள ரெய்டுகள், அதில் கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்கள் அடிப்படையில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் அரசியல் சட்டப்படியான நிலையான ஆட்சி நடைபெறுவதையும், மாநில அரசுக்குள்ள அதிகாரங்களுடன் செயல்படுவதையும் பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளியான கிஷன் பகதூர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவலாளியை கொலை செய்த நபர்கள் கொடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைந்து விலை உயர்ந்த நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை திருடிச் சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை போலீசார் உறுதிப்படுத்தவில்லை. அத்துடன் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை மூன்று பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறி வருகின்றனர். ஆனால் தற்போது வரை அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுனர் கனகராஜ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். அவர் நேற்று இரவு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். கனகராஜை போலீசார் என்கவுண்டர் செய்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள போலீசார் கனகராஜ் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் விபத்து எப்போது நிகழ்ந்தது, விபத்தை ஏற்படுத்தியது எந்த வாகனம், கனகராஜ் எந்த வாகனத்தில் சென்று விபத்தில் சிக்கினார் என்கிற தகவலை வெளியிடவில்லை. இதனால் கனகராஜ் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் தொடர்புடைய வழக்கில் அடுத்தடுத்து மர்மமங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் போலீசார் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.


மும்பை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்படும் முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராகிம் மாரடைப்பால் பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த போதும் பாகிஸ்தானில் தாவூத்திற்கு சொந்தமாக பல வீடுகள் இருப்பதை ஊடகங்கள் படம்பிடித்துக் காட்டியுள்ளன. இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதால் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் தாவூத் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


சென்னை விமானநிலையத்தில் இன்று அதிகாலையில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதால், விமான பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு விமானநிலைய புறப்பாடு பகுதியில் 2 சூட்கேசுகள் கேட்பாரற்று கிடந்தன. இதனை அடுத்து அதில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்குமோ என்ற பீதியின் காரணமாக விமானநிலைய வளாகம் முழுவதும் பதட்டம் நிலவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து வந்து சூட்கேசுகளை கைப்பற்றி பத்திரமாக எடுத்து சென்றனர். இதன் காரணமாக, 4 மணி நேரத்திற்குப் பின் விமான நிலையத்திற்குள் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.


7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும், ஆசிரியர் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும், ‘டெட்’ தேர்வுக்கு,7 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கான, முதல்தாள் தேர்வை, 598 மையங்களில், 2 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். 10ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கான, இரண்டாம் தாள் தேர்வு, ஆயிரத்து 561 மையங்களில் நாளை நடைபெறுகிறது. இதில் 5 லட்சத்து 3 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க, 3 ஆயிரம் ஆசிரியர்கள் இடம் பெற்ற பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.கண்காணிப்பு பணிக்காக 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 10 மணிக்குத் தேர்வு தொடங்கினாலும், ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு அறைக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காப்பியடித்தல், மற்றவர்களிடம் கேட்டு எழுதுதல், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேட்டில் ஈடுபடக் கூடாது என்றும், மீறுவோர் மூன்று முறை ‘டெட்’ தேர்வுகளை எழுத தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.


குரூப் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள 1,953 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் விஜயகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2ஏ-வில் அடங்கிய (நேர்முகத் தேர்வு அல்லாத) பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 1953. தமிழ்நாடு அமைச்சுப் பணிகள், தமிழ்நாடு தலைமைச்செயலகப் பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பணிகளில் அடங்கிய உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில் சுமார் 1953 காலிப்பணியிடங்கள் உள்ளன.

உதவியாளர் மற்றும் கணக்கர் பதவிகளுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு அல்லது இளங்கலை சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 26 ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6 ஆம் தேதி தேர்வு நடைபெறும். விண்ணப்பங்களை www.tnpsc.gov.in, www.tnpscexams.net என்ற இணையதளங்களின் வழியே பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏனெனில், கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பப் பிரச்சனைகளோ எழ வாய்ப்புள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாள்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்குத் தேர்வாணையம் பொறுப்பாகாது.
விண்ணப்பிக்கும் முறை குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத தொலைபேசி எண்: 1800-425-1002- இல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று தனது அறிவிப்பில் விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.