விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா? தமிழக எம்.பி.க்கள் கேள்விக்கு மத்திய அரசு 'மழுப்பல்' பதில்.

வறட்சி, வறுமை காரணமாக வாடும் ஏழை, எளிய விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு நேரடியாகக் கருத்து தெரிவிக்காமல், 'மழுப்பல்' பதிலை அளித்தது.
மாநிலங்களவையில் விவசாயிகள் கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக முக்கிய பிரச்னைகளை அவையின் கவனத்துக்குக் கொண்டு வரும் நேரத்தில் திருச்சி சிவா பேசியதாவது:
வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் இதுவரை 200 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய ஏதுவாக மாநில அரசு கோரியுள்ள ரூ.40 ஆயிரம் கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும்.

தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசியது ஆறுதலாக இருந்தது. ஆனால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
15.1 லட்சம் விவசாயிகள் 31 லட்சம் ஏக்கர் நிலங்களை ரூ.8,878 கோடி அளவுக்கு காப்பீடு செய்துள்ளனர். அத்தொகையை விவசாயிகளுக்கு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். மாநில அரசுகளால் நிறைவேற்ற முடியாத திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும் வசதி உள்ளது. அதன்படி மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்' என்றார் திருச்சி சிவா. அவரது பேச்சுக்கு அதிமுக குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன், திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

இடதுசாரிகள் கேள்வி: இதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா பேசுகையில், 'பெருநிறுவனங்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய ஆர்வம் காட்டும் மத்திய அரசு, ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யத் தயங்குவது ஏன்? தமிழகத்தின் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை பொருள்படுத்தாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துடன் மத்திய அரசு ஏன் செய்தது?' என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசுகையில், 'தமிழகத்தில் நிலவும் வறட்சியால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்குத் தீவனம் கூட வழங்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில், வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய விவசாயிகள் விடுக்கும் நியாயமான கோரிக்கையை ஏற்க வேண்டும்' என்றார்.
அவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்தார்.

அமைச்சர் பதில்: இதையடுத்து, அவையில் இருந்த மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில் வருமாறு: பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கும் யோசனை மத்திய வேளாண் துறை அமைச்சரின் பரிசீலனையில் உள்ளது. காவிரி மேலாண்மை விவகாரம் மீது மத்திய நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஏற்கெனவே ரூ.1,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. நெடுவாசல் விவகாரத்தில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மட்டுமே செய்து கொள்ளப்பட்டுள்ளது.
உள்ளூர்வாசிகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவது அவசியம். நெடுவாசல் அல்லது விவசாயிகள் பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்றார் நிர்மலா சீதாராமன்.
இந்நிலையில், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி குறித்து நிர்மலா சீதாராமன் எவ்வித பதிலையும் அளிக்காதது பற்றி தமிழக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து, அவையை வழிநடத்திய மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் 'இந்த விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் மட்டுமே பதில் அளிக்க முடியும்' என்று கூறினார். இதனால், தமிழக உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.