சென்னை துறைமுகத்தில் ரூ.10 கோடிக்கு 1.32 லட்சம் டன் இரும்புத் தாது விற்பனை: விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடு?

சென்னை துறைமுகத்தில் சுமார் ரூ.10.50 கோடிக்கு 1.32 லட்சம் மெட்ரிக் டன் இரும்புத்தாது விற்பனை நடைபெற்றுள்ளது. சந்தை விலையுடன் நோக்கும்போது மிகக் குறைந்தவிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இதில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என புகார் எழுந்துள்ளது.

சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 18 மில்லியன் டன் நிலக்கரி, இரும்புத்தாது கையாளப்பட்டு வந்தது. இதனால் சென்னை மாநகரத்தின் பெரும்பகுதி மாசடைந்து வருகிறது எனத் தொடரப்பட்ட வழக்கில் இவற்றைக் கையாள சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே, 2011-ல் தடை விதித்தது. இதனையடுத்து நிலக்கரி, இரும்புத் தாது கையாள்வதை அக்.,2011-லிருந்து சென்னைத் துறைமுகம் நிறுத்திவிட்டது.

இதனால் சென்னைத் துறைமுகத்தின் வருவாயில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்த மேல்முறையீட்டு வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்ற நிலுவையில் உள்ளது.

தேங்கிய 1.32 லட்சம் டன் இரும்புத்தாது:

கர்நாடகம், பீகார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சரக்கு ரயில்கள் மூலம்

கொண்டு வரப்பட்ட இரும்புத்தாது பல ஆண்டுகளாக சென்னைத் துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட வந்தது. இதனால் துறைமுகத்தின் வடக்கு பகுதியில் இரும்புத்தாது கையாளும் சிறப்பு கப்பல்தளம் அமைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு கையாளப்படும்போது சிதறும் அல்லது மீதமாகும் இரும்புத்தாது படிப்படியாக தேங்கிவிடும். இது போன்ற சரக்குகள் துறைமுகத்திற்குச் சொந்தமாகிவிடும். இவ்வாறு பல ஆண்டுகளாக சேகரித்த இரும்புத்தாதுவின் தற்போதைய மொத்த இருப்பு சுமார் 1.32 லட்சம் டன் ஆகும். இரும்புத்தாது கையாள்வது நிறுத்தப்பட்டதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர் இருப்பு வைத்திருந்த இரும்புத்தாது மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டவிட்டது.

சந்தை விலை ரூ.5,800, ஏலத்திலோ ரூ.787-க்கு விற்பனை:

தாதுவில் உள்ள இரும்பின் சதவீதத்தைக் கொண்டு மேக்னடைட், ஹேமடைட், லிமோடைட், சைடெரைட் ஆகிய நான்கு வகைகளாகக் பிரிக்கப்படுகிறது. இதில் உயர்வகை இரும்புதாதுதான் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததாகவும், இதில் தேங்கிய 1.32 லட்சம் டன் இரும்புத் தாதுவும் இதே வகையானது எனக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடந்த இந்த இரும்புத் தாதுவை விற்பனை செய்ய கடந்த டிசம்பர் 27-ல் மின்னணு ஏலம் விடப்பட்டது.

மத்திய அரசு நிறுவனமான எம்.எஸ்.டி.சி. லிமிடெட் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஏலத்தில் இறுதிவரை 7 பேர் கலந்து கொண்டதாகவும், இதில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒரு டன்னுக்கான விலை ரூ.787-க்கு ஏலத்தில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் 6 மாதங்களுக்குள் இரும்புத் தாதுவை சென்னைத் துறைமுகத்திலிருந்து அகற்ற இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது இதே நிறுவனம் டெல்லியைச் சேர்ந்த இரும்பு உருக்காலைக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

புதன்கிழமை நிலவரப்படி ஒரு டன் உயர் ரக இரும்புத்தாது 84 அமெரிக்க டாலராக (சுமார் ரூ.5,600) உள்ளது. இதுவே 2014-ம் ஆண்டில் 125 டாலர்வரை இருந்துள்ளது.

இந்நிலையில் மிகக் குறைந்த கொள்முதல் ஏல விலை, ஒட்டுமொத்த இருப்பு உள்ளிட்டவைகளை நிர்ணயம் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் அதிகார வர்க்கத்தினர் உள்ளதாக துறைமுக வட்டாரத்தில் புகார் கூறுகின்றனர். ஏற்கனவை துறைமுகம் தொடர்ந்து வருவாய் பாதிப்பில் சிக்கித் தவித்து வரும் நிலையில் இரும்புத்தாது ஏல விற்பனை குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.

விலையை நிர்ணயம் செய்தது துறைமுக நிர்வாகம் அல்ல

இது குறித்து சென்னைத் துறைமுக தலைமை இயந்திரவியல் பொறியாளர் பி.சண்முகநாதன் அளித்த விளக்கம்:

இரும்புத்தாது எவ்வளவு உள்ளது என்பதை அளவிடுவதிலும், தரத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்தது அரசு அங்கீகாரம் பெற்றுள்ள நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. பிறகு ஏலம் நடத்தும் பொறுப்பு மத்திய அரசின் நிறுவனமான எம்.எஸ்.டி.சி-தான் மேற்கொண்டது. பகிரங்கமாக நடைபெற்ற மின்னணு முறையிலான ஏலத்தில் பங்கேற்றவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களாகவே இருந்தனர். எனவே சிண்டிகேட் முறையில்

விலையை நிர்ணயம் செய்துவிட முடியாது. மேலும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த ஆதார விலைக்கு அதிகமாக ஏலம் கேட்டதால்தான் இரும்புத் தாது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சந்தை விலையுடன் ஒப்பிடும்போது ஏல விலை மிகக் குறைவாக இருப்பதற்கு காரணம் தரத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டிருக்கலாம்.

எனவே அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத் தன்மை உள்ளது. இதில் முறைகேடு ஏதும் இல்லை. சென்னைத் துறைமுகத்தைப் பொருத்தவரை இது ஒரு உபரி வருவாய்தான். தடை விதிக்கப்பட்ட பிறகு ஏற்றுமதியாளர்கள் தங்களது இருப்புச் சரக்கை எடுத்துச் செல்ல காலதாமதம் ஆகிவிட்டது. எனவேதான் ஏலமும் தாமதமாகிவிட்டது. ஒட்டுமொத்த இருப்பான 1.32 லட்சம் டன் இரும்புத் தாதுக்கும் சுமார் ரூ.10.50 கோடிவரை முன்தொகை பெறப்பட்டுள்ளது என்றார் சண்முகநாதன்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.