February 2017

சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர் ஊழியர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பாண்டி பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவுத் உஸ்மான் சாலையில் உள்ள சரவணா ஸ்டோரில் திருநெல்வேலியை சேர்ந்த ஜோசப் ராஜ் என்ற இளைஞர் கணக்காளராக, கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அந்நிறுவனத்தின் விடுதியில் ஜோசப் ராஜ் வாயில் நுரை தள்ளியப்படி இருந்ததை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், வரும் வழியிலேயே ஜோசப் ராஜ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாண்டி பஜார் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிந்த ஜோசப் ராஜ் விஷம் குடித்திருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி 13ஆவது நாளாக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும்வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். நெடுவாசல் போராட்டங்களில் மையப்புள்ளியாக தீவிரமெடுத்துவருகிறது. இருவாரங்களாக போராட்டக்களத்தில் தீவிரம் காட்டிவரும் மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்கள். மண்ணெண்ணெய் எடுக்கவென்று அனுமதித்த திட்டம் இப்போது தங்கள் வாழ்வாதாரத்தையே அசைத்துப்பார்ப்பதாக வேதனையுடன் கூறுகிறார்கள் இப்பகுதி விவசாயிகள். விவசாயத்தை காக்க போர்க்குரல் உயர்த்தியுள்ள மக்கள், போராட்டத்திற்காக ஆதரவையும் திரட்டிவருகிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தவும் மக்கள் முடிவு செய்துள்ளனர். நெடுவாசலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மனித சங்கிலி, ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை திருப்பி அளிக்கும் போராட்டம்,வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

வங்கித்துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ‌வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்ததில் ஈடுபடுகின்றனர்.

வராக்கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும், நிரந்தர வேலை வாய்ப்புகளில் அவுட்சோர்சிங்கை அனுமதிக்க கூடாது, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர். நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்ததில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை சேர்ந்த 7,000 வங்கிக்கிளை ஊழியர்கள் இந்த வேலை நிறுத்ததில் பங்கேற்று உள்ளனர்.

சென்னை திருவேற்காட்டில், தன் காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், இளம்பெண் ஒருவர் செல்ஃபோன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தம்புசாமி நகர் பகுதியை சேர்ந்த பிரியா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அதேபகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த இளைஞர் கடந்த மாதம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பூவிருந்தவல்லி மகளிர் காவல் நிலையத்தில் பிரியா புகார் அளிக்க சென்றபோது, காவல் துறையினர் பிரியாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், திடீரென பிரியா, வீட்டின் அருகே உள்ள செல்ஃபோன் டவரின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து தகவல் அறிந்த காவல் துறையினர், சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி அப்பெண்ணை கீழே இறக்கினர்.

திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் மற்றும் படகை ஓட்டிச் சென்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் அருகே படுக்கப்பத்து என்ற பகுதியைச் சேர்ந்த 42 பேர் தங்களது குடும்பத்தினருடன், மீனவர் படகில் கடலில் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டனர். அப்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அருண், சுரேந்தர், சுந்தரேஸ்வரன், அபிநயா ஆகிய 4 சிறார்கள் உயிரிழந்தனர். மேலும் முருகேஸ்வரி, முத்துலட்சுமி, உஷாராணி சுகன்யா, முத்துச்செல்வி, ஜெயராமன் ஆகிய 6 பேர் என மொத்தம் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 21 பேர் கடலில் இருந்து நீந்தி கரை சேர்ந்தனர். கடலில் தத்தளித்த 11 பேரை மீட்புப் படையினரும், மீனவர்களும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 9 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில், 12 வயது சிறுமி அபிநயாவின் உடல் இன்று மீட்கப்பட்டது. இதையடுத்து தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

படகில் 7 பேரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற விதியை மீறியதாக, படகின் உரிமையாளர் கெவின் மற்றும் அதை ஓட்டிச் சென்ற செல்வம் ஆகியோர் மீது கூடங்குளம் கடலோர காவல்படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் நிதியுதவியான தலா 2 லட்சம் ரூபாயை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். இதேபோல் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 11 பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாயை அமைச்சர் வழங்கினார்.

H-1B விசா கட்டுப்பாட்டால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் சிலர், அந்நாட்டிற்குள் மீண்டும் நுழைய அனுமதி கிடைக்காதோ என்ற அச்சத்தில் இந்தியா வரத் தயங்குவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் H-1B விசாவில் பணியாற்றும் பெரும்பாலான இந்திய ஐடி ஊழியர்கள், அதிபர் டிரம்பின் விசா உத்தரவால் பணிநிலையற்ற தன்மைக்குத் தள்ளப்பட்டுள்னர்.
ஏற்கனவே தீவிரவாதத் தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது அமெரிக்காவில் வசிக்கும் 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு மீண்டும் அமெரிக்கா வர முயன்றபோது விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் H-1B விசாவில் உள்ள இந்தியர்கள் சிலர் கோடை விடுமுறைக்கு இந்தியா வருவதற்காக முன்பதிவு செய்த விமான டிக்கெட்களை ரத்து செய்துள்ளனர். விசா குறித்த பிரச்சனைகள் தீரும் வரை சிலர் இந்தியா வரும் பயணத்தைத் தள்ளிப் போட்டுள்ளனர். இதனால், 2 அல்லது 3 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்த்து இந்தியாவில் காத்திருக்கும் அவர்களது உறவினர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராணுவத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்டது தொடர்பாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி பேர் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணுவ சிப்பாய் எழுத்தர் மற்றும் சிப்பாய் வர்த்தகர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நாடு முழுவதும் உள்ள 52 மையங்களில் நடந்தது. தேர்வின்போது, போலீசாரும், புலனாய்வு துறையினரும் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இத்தேர்வுக்கான வினாத்தாள்கள் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முன்கூட்டியே கசிந்ததை தானே நகர போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து மகாராஷ்டிர மாநிலத்த்தின் பல்வேறு நகரங்களிலும், கோவாவிலும் அதிரடிச் சோதனைகளை நடத்தினர். அப்போது, வினாத்தாள் கசிவு தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர், துணை ராணுவப் படை வீரர் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனால் மகராஷ்ட்ரா, குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் உள்ள 6 மையங்களில் இத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த வினாத்தாள்களை பயிற்சி நிலையங்களை நடத்தும் சிலரும், ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள் சிலரும் வெளியிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக 210 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு முன்கூட்டியே வெளியிட்ட வினாத்தாளின் நகலை வழங்கிய அதிகாரிகளுக்கு மாணவர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.2 லட்சத்தை அளித்ததாகவும் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 89ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்தது. மொத்தம் 24 பிரிவுகளில் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதுகளில் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 6 விருதுகளை லா லா லேண்ட் படம் வென்றது.

ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழுபட்டியல்

சிறந்த படம் - மூன்லைட்

சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன் (லா லா லேண்ட்)

சிறந்த நடிகர் - கேஸி அஃப்லெக் (மான்செஸ்டர் பை த சீ)

சிறந்த இயக்குனர் - டேமியன் சாஜெல்லே (லா லா லேண்ட்)

சிறந்த தழுவல் திரைக்கதை - பேரி ஜென்னிங்ஸ் (மூன்லைட்)

சிறந்த திரைக்கதை - கென்னெத் லோனர்கன் (மான்செஸ்டர் பை த சீ)

சிறந்த பாடல் - சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ் (லா லா லேண்ட்)

சிறந்த பின்னணி இசை - ஜஸ்டின் ஹர்விட்ஸ் (லா லா லேண்ட்)

சிறந்த ஒளிப்பதிவு - லினஸ் சாண்ட்க்ரீன் (லா லா லேண்ட்)

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - சிங்

சிறந்த ஆவண குறும்படம் - தி ஒயிட் ஹெல்மெட்ஸ்

சிறந்த படத்தொகுப்பு - ஜான் கில்பர்ட் (ஹாக்ஸா ரிட்ஜ்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - தி ஜங்கிள் புக்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - டேவிட் வாஸ்கோ மற்றும் சாண்டி ரெனால்ட்ஸ் (லா லா லேண்ட்)

சிறந்த அனிமேஷன் படம் - ஜூட்டோபியா

சிறந்த அனிமேஷன் குறும்படம் - பைப்பர்

சிறந்த வெளிநாட்டு மொழி படம் - தி சேல்ஸ்மேன் (ஈரான்)

சிறந்த துணை நடிகை - வயோலா டேவிஸ் (பென்சஸ்)

சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - ஹாக்ஸா ரிட்ஜ்

சிறந்த சவுண்ட் எடிட்டிங் - அரைவல்

சிறந்த ஆவணப்படம் - ஓ.ஜே. மேட் இன் அமெரிக்கா

சிறந்த ஆடை வடிவமைப்பு - பென்டாஸ்டிக் பீஸ்ட் அண்ட் வேர் டூ பைண்ட் தெம்

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் - சூசைட் ஸ்குவாட்

சிறந்த துணை நடிகர் - மஹேர்சலா அலி (மூன்லைட்)

மதுரை: தமிழகமெங்கும் சீமைக்கருவேல மரங்களை நீக்க இரண்டு மாதங்களுக்குள் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகமெங்கும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேலமரங்கள் அதிக அளவு நீரை உறிஞ்சி நிலத்தடி நீர் குறைபாடு உண்டாக்குவதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நிறைய இடங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்பொழுது நீதிபதிகள் தெரிவித்ததாவது:

தமிழகமெங்கும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேலமரங்களை அகற்ற வேண்டும் என்று முன்னரே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த ஆணை சரியாக நிறைவேற்றப்படவில்லை. 10 முதல் 15 சதவீதம் வரையிலான பணிகள் மட்டுமே நிறைவேறியுள்ளதா கத் தெரிகிறது. இன்னும் சில மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் இந்தப் பணியில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வருகிறது. எனவே முன்பு பிறப்பித்துள்ள உத்தரவை இன்னும் 15 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிடுகிறோம்.

மேலும் தமிழகமெங்கும் சீமைக்கருவேல மரங்களை நீக்க இரண்டு மாதங்களுக்குள் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. இந்த சிறப்பு சட்டமானது இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (என்எல்சி) தொழிற் பழகுநர் சட்டம் 1961 ஆம் விதிகளுக்குட்பட்டு கீழ்வரும் பிரிவுகளுக்கு 2017-18-ஆம் ஆண்டிற்கான 137 தொழிற் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ மற்றும் +2 முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த இடங்கள்: 137

பணி இடம்: நெய்வேலி (தமிழ்நாடு)

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Fitter - 22
2. Turner - 08
3. Mechanic (Motor Vehicle) - 37
4. Wireman - 23
பயிற்சிகாலம்: 1 ஆண்டு 
உதவித்தொகை: மாதம் ரூ.8,132 
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
 
5. Mechanic (Tractor) - 14
6. Plumber - 03
7. Carpenter - 02
பயிற்சிகாலம்: 2 ஆண்டுகள்
உதவித்தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ.7,299. இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.8,132
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

8. PASAA - 11
பயிற்சி காலம்: 1 ஆண்டு
தகுதி: ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.6,325
9. Medical Lab Technician - 17
பயிற்சி காலம்: 6 மாதங்கள்
உதவித்தொகை: மாதம் ரூ.6,325
தகுதி: உயிரியல்(தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகிய பாடங்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.04.2017 தேதியின்படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 01.03.2017 காலை 10 மணி முதல் 10.03.2017 அன்று மாலை 5 மணிக்குள் www.nlcindia.com என்ற இணையதளத்தின்
எழுத்துத் தேர்வு வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nlcindia.com/new_website/careers/advt_tat_april17_24022017.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

சென்னைதமிழகமெங்கும் உள்ள விளைநிலங்களை வீட்டுமனைகளாக பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழகமெங்கும் உள்ள விளைநிலங்கள் மிக அதிக அளவில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டுமனைகளாக பதிவு செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்ட து. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் விளைநிலங்களை வீட்டுமனைகளாக பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த மனுவில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரியிருந்தது.

அந்த வழக்கு இன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தினை கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஒருங்கிணைந்த செயல்திட்டம் எதனையும் இன்னும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த நிலையில் விதித்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பிக்க இயலாது என்று தெரிவித்து விட்டது.

அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து ஒருங்கிணைந்த செயல்திட்டத்தினை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் அவகாசம் அளித்து, வழக்கை மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

2017-ம் ஆண்டுக்கான 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெற்றது. லா லா லேண்ட் படம் 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது. இதில் 6 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அசத்தலான உடையில் கலந்துகொண்டார். இவர் விழாவில் கலந்துகொள்ள வந்தபோது அவர் புகைப்படக் கலைஞர்களால் அதிக கவனம் பெற்றார்.


லீகோ நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் மோட்டார் சைக்கிளைத் உருவாக்குவதற்கான ஆய்வுகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் தொடங்கியுள்ளது.


போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு ஹெலிகாப்டரை அடிப்படையாகக் கொண்டு பறக்கும் கார்கள் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபாடு காட்டி வருகின்றன. இந்தநிலையில், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம் பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது.


லீகோ (LEGO) நிறுவனம் வடிவமைத்துள்ள மினியேச்சர் பறக்கும் சூப்பர் பைக்குகளை அடிப்படையாகக் கொண்டு பிஎம்டபிள்யூவின் எவர்க்ரீன் மாடலான பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் (BMW R 1200 GS) பைக்குகளை பறக்கும் வகையில் வடிவமைப்பது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக லீகோ மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த பறக்கும் மோட்டார் சைக்கிள்களின் மினியேச்சர் மாடல் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் புதுக்கோட்டை மக்களுக்கு ஆதரவாக பேரணியாக சென்றவர்கள் திருச்சியில் கைது செய்யப்பட்டனர்.

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தண்ணீர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திருச்சியில‌ இருந்து பேரணியாக புறப்பட்டனர். இதைய‌றிந்த காவல்துறையினர், திருச்சி விமானநிலையம் அருகே சுங்கச் சாவடியில் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 13 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களின் 6 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். ஆனால், பேரணியின் போது முன்னதாகவே சென்ற 10க்கும் மேற்பட்டோர் நெடுவாசலை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 3,681 கிலோ தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 970 கிலோ தங்கத்தை, மத்திய அரசின் தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் ஓராண்டு காலத்துக்கு 1.25 சதவீத வட்டிக்கு பாரத ஸ்டேட் வங்கியில் திருப்பதி தேவஸ்தானம் முதலீடு செய்தது. தற்போது அந்த முதலீட்டு காலம் முடிவடைந்ததால், அதனை சனிக்கிழமை மீண்டும் 3 ஆண்டுகளுக்கு தேவஸ்தானம் நீட்டித்துள்ளது.
மேலும், தற்போது உண்டியலில் காணிக்கையாகக் கிடைத்த 1,400 கிலோ தங்கத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 1.25 சதவீதம் வட்டிக்கு தேவஸ்தானம் முதலீடு செய்துள்ளது. அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1,311 கிலோ தங்கத்தை 1.75 சதவீத வட்டிக்கு 3 ஆண்டு காலத்துக்கு 
முதலீடு செய்துள்ளது. 
இதன்மூலம், திருப்பதி தேவஸ்தானம் 3,681 கிலோ தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுத்தமான தங்கத்துக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி அளிக்கும் வட்டி அனைத்திலும் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னைகுழந்தைகளுக்கான ரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குழந்தைகளுக்கான ரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 77 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளில் ரூபெல்லா தடுப்பூசி போடப்படும்.

மருத்துவ பணியாளர்களுக்கு விடுப்பு இல்லாமல் தொடர்ந்து 15 நாட்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்படும்

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் தேர்வுக்கான கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதையடுத்து 18 பேரைப் பிடித்து தானே போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் ராணுவ ஆள் சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வு வினாத்தாள் மஹாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் முன்கூட்டியே வெளியானது. இதை அறிந்து நாக்பூர், தானே, நாசிக் மற்றும் கோவாவில் போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு இதில் தொடர்புடைய 18 பேரைப் பிடித்துள்ளனர். மேலும் அங்கிருந்த விடுதி மற்றும் ஹோட்டல்களில் நடத்திய சோதனையின் போது தேர்வுக்கு முந்தைய இரவே விடைத்தாளை எழுதி முடித்த 350 தேர்வர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. குற்றப்பிரிவு டிசிபி தலைமையில் நடக்கும் விசாரணையில் கேள்வித்தாளை வெளியிட்ட ராணுவத்தின் உயர் அதிகாரி சிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.