January 2017

இந்தியாவில் இருந்து அமெரிக்க ஐடி நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் விசாவில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர ட்ரம்ப் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஐடி நிறுவனங்கள் இந்தியர்களை பணிக்கு அமர்த்த பயன்படுத்தும் எச்1பி விசாவில் கட்டுப்பாடுகளை கொண்டு வரும் உத்தரவை ட்ரம்ப் பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க குடியேற்றக் கொள்கையில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் ட்ரம்பின் அடுத்த உத்தரவு எச்1பி மற்றும் எல்1 விசாக்களை கட்டுப்படுத்தும் வகையில் அமையும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகம் உருவாக்கியுள்ள அரசாணையின் விவரங்கள் சில இணையதளங்களில் வெளியாகியுள்ளது. ‌

இதனிடையே, எச்1பி விசா சீர்த்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் தாக்‌கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எச்1பி விசாவில் பணிக்கு வருபவர்களுக்கான ஊதியத்தை இரண்டு மடங்காக்க வகை செய்யப்ப‌ட்டுள்ளது. தற்போது குறைந்தபட்சம் ஆண்டுக்கு 60,000 டாலர் ஊதியம் பெறுபவர்களுக்கு இந்த விசா வழங்கப்படுகிறது. இது இரு மடங்காக உயர்த்தும் பட்சத்தில் அதிகப்படியான வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு வர இயலாத சூழல் ஏற்படும்.இதனால் எச்1பி விசாக்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்கர்களை பணிக்கு அமர்த்த முன்னுரிமை அளிக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் இந்திய பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

எச்1பி விசா என்பது அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு வழங்கப்படுவது.

பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் சார்பிலேயே இந்த விசா விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும். ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற சிறப்பு பணித்திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே எச்1பி விசா வழங்கப்படும். குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமே இந்த விசாவைப் பெற முடியும். இந்த விசாவைப் பெற்றவர்கள் மூன்றாண்டுகள் அமெரிக்காவில் தங்கியிருக்கலாம், தேவைப்பட்டால் 6 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் முடியும் எச்1பி விசாக்களைப் பெறுவதில் இந்திய நிறுவனங்களே முன்னணியில் இருக்கின்றன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் அதிக எண்ணிக்கையில் எச்1பி விசாக்களை வழங்குகிறது. இந்த விசா வழங்கப்படும் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு 60,000 டாலர் ஊதியம் அளிக்க வேண்டும் எனும் விதி உள்ளது. இந்த ஊதியத் தொகை தற்போது உயர்த்தப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. எச்1பி விசாக்களை வைத்திருப்போரின் குடும்பத்தினருக்கு L1 விசா வழங்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையிலான தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக கூபா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. அந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ஜல்லிக்கட்டு சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எச் ஒன் பி விசா முறைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல். இதை தொடர்ந்து இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகள்  கடும் வீழ்ச்சி.

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் சரவணபவன் உணவகக் கிளை இயங்கி வருகிறது. இங்கு திடீரென மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் உணவகம் நடத்துவற்கு பல்வேறு துறைகளில் பெற வேண்டிய உரிமங்களை பெறவில்லை என்பது கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வில், ஒரேயொரு தளத்திற்கு மட்டும் அனுமதி பெற்றுவிட்டு, கூடுதலாக மேலும் ஒரு தளத்தில் உணவகம் நடத்தியது, போதுமான இடவசதி, பார்க்கிங் வசதி இல்லாமல் உணவகம் நடத்தியது, தீத்தடுப்பு மற்றும் தீயணைப்பு கருவிகள் இல்லாததோடு தீயணைப்புத் துறையின் உரிமம் பெறாமலிருந்த போன்றவை கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் சரவணபவன் உணவகத்தை மூடி சீல்வைத்த மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் ஒட்டிச்சென்றுள்ளனர்.

ஜல்லிகட்டு போராட்டத்தில் அசம்பாவிதம் நடக்காமல் முறையாக கையாண்ட திருச்சி மாவட்ட துணை ஆணையர் மயில்வாகனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.

தமிழகத்தில் ஜல்லிகட்டு போராட்டத்தின் போது நடைபெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட 8 பேர் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு திருச்சி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் வந்திருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலவரம் ஏற்படாமல், மாணவர்கள், இளைஞர்களை முறையாக கையாண்டு அசம்பாவிதம் நடக்காமல் பார்த்து கொண்டதற்காக மயில்வாகனனை நேரில் அழைத்து விசாரணை அறையில் நீதிபதி மகாதேவன் பாராட்டு தெரிவித்தார்.

கடல் உணவு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய பட்ஜெட்டில் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என தூத்துக்குடி கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் சோதனை கூடம் இல்லாமல் இருப்பது, வங்கி கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள்,ஏ ற்றுமதிக்கான வருமான வரி போன்றவை இந்த தொழிலை பாதித்திருப்பதாக ஏற்மதியாளர்கள் கூறுகின்றனர்.

சர்வசேத தரத்தில் வசதிகளை ஏற்படுத்துவதுடன் சலுகைகளை மத்திய அரசு அளித்தால் தூத்துக்குடியில் கடல் உணவு ஏற்றுமதி பன்மடங்கு அதிகரிக்கும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ படிப்ப‌களுக்கான நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வான நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் சட்ட முன் வடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக ‘நீட்’ எனப்படும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு இல்லாமல் தமிழகத்தில் இளநிலை மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வழிவகை செய்யும் சட்ட முன் வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஏகமனதாக நிறைவேற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

நீட் தேர்வு முறை கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் தமிழக அரசு இந்த சட்ட முன்வடிவை கொண்டு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாதவரம் அடுத்துள்ள மாத்தூரில் நீதிமன்றத் தடையாணையை மீறி, அரசு அதிகாரிகள் உதவியோடு நிலத்தடி நீர் தனியார் கேன் நிறுவனங்களால் திருடப்படுவதைக் கண்டித்து, அப்பகுதிவாசிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அரசிடம் உரிய அனுமதி பெறாமல், அதிக சக்தி வாய்ந்த மின் மோட்டார்களை பயன்படுத்தி நிலத்தடி நீரை உறிஞ்சி அதை 16 தனியார் நிறுவனங்கள் கேன்களில் நிரப்பி விற்பனை செய்து வருவதாக அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையாணை பெற்றும் அதை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்ற பின்னரும், அரசு அதிகாரிகளின் துணையுடனே தொடர்ந்து நிலத்தடி நீர்த்திருட்டு நடப்பதாகக் கூறுகின்றனர். இந்தத் திருட்டு தொடர்ந்தால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தண்ணீர் பஞ்சம் ஏற்படும் எனக்கூறிய அவர்கள், அதனை தடுக்க கோரி மாத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை எண்ணூர் முதல் மெரினாவரை கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய்யை பிரித்தெடுக்கும் பணியின்போது, இரண்டாவது நாளில் இரண்டு முறை இயந்திரம் பழுதானதால், துப்புரவு பணி தற்காலிகமாக தடைபட்டுள்ளது.
கடந்த 28-ம் தேதி அதிகாலை எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு ஈரானிலிருந்து சமையல் எரிவாயு ஏற்றி வந்த கப்பலும், மும்பையில் இருந்து கச்சா எண்ணைய் ஏற்றி வந்த கப்பலும், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதில், கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டான் காஞ்சிபுரம் என்ற கப்பலில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதன் காரணமாக கடல் கருமை நிறமாக மாறியது. எண்ணெய் படலம் கடல் மேற்பரப்பை மூடியதால், கடல் நீரில் சூரிய வெளிச்சம் மற்றும் பிராண வாயு குறைந்து மீன், ஆமை உள்ளிட்ட கடல் வாழ் உயிரிணங்கள் செத்து மிதக்கின்றன.
இந்நிலையில், இந்திய கடலோர காவற்படையின் சுற்றுசூழல் பொறுப்புக்குழுவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கச்சா எண்ணெய் அதிகம் படர்ந்துள்ள எர்ணாவூர் பாரதியார் நகரில், ‘ஆயில் மாப் ஸ்கிம்மர்’ மற்றும் ‘சர்பன்ட் அப்சர்வர்’ என்ற இயந்திரங்களை பயன்படுத்தி, தண்ணீரில் இருந்து எண்ணெயை பிரித்தெடுக்கும் பணியை நேற்று தொடங்கினர். வீட்டில் உபயோகப்படுத்தப்படும் மாப் போன்ற செயல்பாடுகளைக் கொண்ட இந்த இரண்டு எந்திரங்களும் கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெயை முழுவதுமாக பிரித்தெடுக்கும் திறன் கொண்டவை. இந்நிலையில் எந்திரங்களின் கயிறு அறுந்து போனதால் நேற்று பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனிடையே, மெரினா வரை கச்சா எண்ணெய் கசிவு பரவி நிலைமை மோசமடைந்துள்ளதால், கயிறுகள் சரிசெய்யப்பட்டு இன்று மீண்டும் தூய்மை பணி தொடங்கியது. ஆனால், பணிகள் துவங்கிய சில மணி நேரத்தில் இயந்திரம் பழுதடைந்ததால், எண்ணெய்யை பிரித்தெடுத்து தூய்மைபடுத்தும் பணி, தற்காலிகமாக தடைபட்டுள்ளது.மும்பையில் இருந்து ஆழ்கடலில் மூழ்கி ஆய்வு செய்யும் குழுவினருடன் வந்த அதிகாரிகள் உடைந்த கப்பலை ஆய்வு செய்தனர். 2 கடல் மைல் தொலைவில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ள டான் காஞ்சிபுரம் கப்பல் நாளை மாலை பைலட் கப்பல் மூலம் துறைமுகத்திற்கு இழுத்து வரப்படவுள்ளது.

சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்த மருத்துவரை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ரச்சகொண்டா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் முகமது சுஜாத் அலி கான், விஸ்கி சாக்லேட்டுகளைப் போல கஞ்சா கலந்த சாக்லேட்டுகளை உருவாக்கி, அதனை சமூகவலைதளம் மூலம் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது மருத்துவமனையைச் சோதனையிட்ட போலீசார், கஞ்சா சாக்லேட்டுகளை மருத்துவர், சுஜாத் அலிகான் உருவாக்கி வருவதை உறுதி செய்தனர்.

இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா சாக்லேட்டுகளை கொரியர் மூலம் அனுப்புவதாகவும், பணத்தை இன்டர் பேங்கிங் மூலம் பெற்றுக் கொள்வதாகவும் மருத்துவர் சுஜாத் அலிகான் தெரிவித்தார். ஹைதராபாத் மட்டுமல்லாது பெங்களூரு, சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அவரிடம் சிலர் கொரியர் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை வாங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாக்லேட்டுகளை விற்பனை செய்ய கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் விளம்பரம் செய்வதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் வரலாறு காணாத போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் மிருகவதை தடுப்புச் சட்டம் -2017 (தமிழ்நாடு திருத்தம்) சட்டப்பேரவையில் கடந்த 23 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த இயலாது என பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த சட்ட முன்வடிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது. இத்தேர்தலில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சென்னையில் 200 வார்டுகளில் ஒரு இடத்தில் கூட பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இது பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கும் எதிராக இருப்பாதால் இதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்து விட்டு சுழற்சி முறையை பின்பற்றி இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 27 ஆம் தேதி நடந்த விசாரணையின் போது உள்ளாட்சி தேர்தல் குறித்து புதிய ஆணை பிறப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஏப்ரல் 30-க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறி இருந்தது.

இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதாவுக்கான சட்ட முன்வடி தாக்கல் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வாக்குப்பதிவு அலுவலர்கள் பள்ளி தேர்வுப் பணியில் ஈடுபடுவதால் ‌ஏப்ரலுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரலுக்குப் பிறகே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

90 நாட்களில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை வலுப்படுத்தி, பிறகு தடை விதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவினுள் நுழைய மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஆறு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு அகதிகளாக வருபவர்களுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். அகதிகளுடன் சேர்ந்து தீவிரவாதிகளும் ஊடுறுவி விடுவதாக ட்ரம்ப் அரசு கருதுகிறது. எனவே தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தனது அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்த ட்ரம்ப், இது இஸ்லாமியர்கள் மீதான தடை என ஊடகங்கள் தவறாக சித்தரிப்பதாக கூறினார். பெரும்பாலும் இஸ்லாமியர்களே வசிக்கும் 40 நாடுகள் இந்த உத்தரவால் பாதிக்கப்படவில்லை எனக் கூறி இருக்கும் ட்ரம்ப், இதனை மதரீதியாகப் பார்க்காமல், நாட்டின் பாதுகாப்பு என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும் என ட்ரம்ப் கூறினார். 90 நாட்களில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை வலுப்படுத்தி, பிறகு தடை விதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவினுள் நுழைய மீண்டும் அனுமதி அளிக்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அகதிகள் வருகையால் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள சூழல் அமெரிக்காவிலும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில்தான் அகதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களை சுட்டிக்காட்டியிருக்கும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் அது போன்ற ஒரு சூழல் அமெரிக்காவிலும் ஏற்பட்டு விடக் கூடாது எ‌ன்பதற்காகவே இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக கூறியுள்ளனர்.

விளை நிலங்களை வீட்டுமனைகளாக பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் கடந்த ஆண்டு, பொது நல மனு தாக்கல் செய்தார். தமிழகத்தின் விளை நிலங்கள் பல இடங்களில் அங்கீகாரமற்ற முறையிலும், விதிமுறைகளை மீறியும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவதால் விளை நிலங்கள் குறைவதாகக் கூறியதோடு, குறிப்பிட்ட நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்ய தடை கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பத்திரப் பதிவுக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வகைப்படுத்தப்பட்ட நிலங்களின் பட்டியலைத் தாக்கல் செய்ய தமிழக அரசு மேலும் கால அவகாசம் கோரியது. ரியல் எஸ்டேட் அதிபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரசு தொடர்ந்து கால தாமதம் செய்து வருவதாகவும் பட்டியலை விரைவாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தனர். இந்தப் பிரச்சனையில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதில் பொதுமக்கள் பாதிப்பு இருப்பதை நீதிமன்றம் உணர்ந்தாலும், அரசு தான் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள் அமர்வு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27-ம் தேதிக்கு தள்ளி வைத்தது. அன்றைய தினம் நிலங்களின் வகைப்படுத்தப்பட்ட பட்டியலை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, அதுவரை ஏற்கனவே விதிக்கப்பட்ட பத்திரப்பதிவுக்கான தடை உத்தரவு நீடிக்கும் எனவும் தெரிவித்தது.

உலகின் மிகப்பெரியது காஸ்பியன் ஏரி. உப்புநீர் கொண்டதால் கடலென்று சொல்லப்பட்டாலும் இது ஓர் ஏரி.

காஸ்பியன் ஏரி 3 லட்சத்து 17 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவும், 78,200 கன கி.மீ கொள்ளளவும் கொண்டது. இந்த ஏரியின் அதிக ஆழம் கொண்ட இடத்தில் 1025 மீட்டர் ஆழம் உள்ளது. இதில் உள்ள நீரானது சுமார் 1.2 சதவிகிதம் உவர்ப்புத் தன்மை கொண்டுள்ளது. இது ஆழ்கடல்களின் உவர்ப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கு. ரஷ்யா, ஈரான், துர்க்மெனிஸ்தான், அசர்பைஜான் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளைத் தனது எல்லைகளாகக் கொண்டது. இவ்வேரி முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்டதாக இது 5.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மாறியது. இந்த ஏரியில் வாழும் ஸ்ரர்ஜியோன் எனும் மீனின் சினையே கவியார் என்ற பிரபல உணவு வகையாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதிகளவு பிடிக்கப்பட்டதால் இவ்வகை மீனினம் அரிதாகி வருகிறது. ஏறத்தாழ 120 நதிகள் காஸ்ப்பியனை நோக்கி பாய்கின்றன. இதில் வோல்கா மிகப் பெரியது.

இரண்டாவது செழிப்பான, ஊறல் நதியானது வடபகுதியில் இருந்து பாய்கின்றது. மேலும், கூரா நதியானது மேற்குப் பகுதியில் இருந்து காஸ்பியன் ஏரியில் சங்கமிக்கிறது. காஸ்பியனில் பல சிறிய தீவுகள் காணப்படுகின்றன. இவை காஸ்பியனின் வட பகுதியில் நிலையாக அமையப் பெற்றுள்ளதுடன், இந்நிலப்பரப்பு ஏறத்தாழ 770 சதுரகிலோ மீட்டர் பரப்பளவைக்கொண்டுள்ளது. இந்தத்தீவுகள் ஆழமான பகுதிகளில் இல்லை. இதில் ஒகுர்ஜா அடா என்பதே பெரிய தீவு.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.