December 2016

அதிமுக பொதுச் செயலாளராக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வி.கே.சசிகலா இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவியேற்பதற்காக போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்ட சசிகலாவிற்கு வழிநெடுக நின்ற அதிமுக தொண்டர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு தெரிவித்தனர். தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட சசிகலா, அதிமுக தலைமை அலுவலகம் வந்தடைந்தார். அங்கு அதிமுக நிறுவனத் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். பின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா முறைப்படி கையொப்பம் இட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

புத்தாண்டான நாளை முதல் ஏடிஎம்களில் 4,500 ரூபாய் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கறுப்புப் பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் விதமாக நாடெங்கும் உள்ள பழைய 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து பணத்தை வங்கிகளில் பெறுவதற்கும், ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி தற்போது நாள் ஒன்றுக்கு 2,500 ரூபாய் மட்டுமே ஏடிஎம் மூலம் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 50 நாட்கள் கடந்துள்ள நிலையில், புதிய அறிவிப்புகள் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இருந்தனர். இந்நிலையில், ஏடிஎம்மில் கூடுதல் பணம் எடுக்கலாம் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பின் படி புத்தாண்டு தினமான நாளை முதல் ஏடிஎம்-களில் 4,500 ரூபாய் பணம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வாரம் ஒன்றுக்கு 24,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்கிற கட்டுப்பாடு நீடிக்கிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு தொடர்பான புதிய அறிவிப்புகளை இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தாண்டை வரவேற்கும் ஆவலுடன் வருடத்தின் கடைசி தருணத்தில் அனைவரும் உள்ளோம். ஆனால் 2017-ஆம் ஆண்டு வழக்கத்தை விட ஒரு நொடி தாமதமாகப் பிறக்கும் என்று கால அளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புவி சுழற்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2017-ஆம் ஆண்டானது வானியல் கடிகாரத்தின்படி ஒரு நொடி காலதாமதமாக பிறக்க உள்ளது. பூமியின் நாள் ஒன்றிற்கான சுழற்சியை கொண்டு வானியல் நேரம் கணக்கிடபடுகிறது. இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் 400 இடங்களில் உள்ள அணு கடிகாரம் மூலம் துல்லியமாக நேரம் கணக்கிடப்படுகிறது.
நிலவின் ஈர்ப்புவிசை, புவிநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புவி சுழற்சி தாமதமாகி இருக்கலாம் என சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு (IERS) அறிவித்துள்ளது. புவி சுழற்சி தாமதம் காரணமாக 500 முதல் 750 நாட்கள் வரை வானியல் நேரத்துக்கும் அணு கடிகார நேரத்துக்கும் இடையில் ஒரு விநாடி வேறுபாடு எற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை ஈடுசெய்ய உலக கடிகாரத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 11 மணி 59- வது நிமிடம், 59- வது நொடிக்குப் பிறகு செயற்கையாக ஒரு ‘லீப்’ நொடி சேர்க்கப்படும். இது, வானியல் கடிகாரத்துக்கும், உலக கடிகாரத்துக்கும் இடையே ஏற்படும் தாமதத்தை ஈடுசெய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.
லீப் விநாடி முறையானது 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. உலகில் இதுவரை 26 முறை லீப் விநாடி சேர்க்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 27-வது முறையாக இந்த வருடம் டிசம்பர் 31-ஆம் தேதி லீப் விநாடி சேர்க்கப்படவுள்ளது. எனவே எதிர்வரும் 2017 புத்தாண்டு பிறப்பதற்கு கூடுதலாக ஒரு விநாடி எடுக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

அமெரிக்காவில் ரஷ்ய தூதரகங்களில் பணியாற்றும் 35 அதிகாரிகள் வெளியேற வேண்டும் ‌என அதிபர் ஒபாமா உத்‌தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த‌ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள்‌ 72 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ரஷ்ய அரசின் தூண்டுதலின் பேரில் ட்ரம்பு‌க்கு ஆதரவாக அமெரிக்க தேர்தலில் தூதர அ‌திகாரிகள் முறைகேடு செய்ததாக‌ குற்றச்சாட்டுகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

டெல்லி : டெல்லி தலைமைச் செயலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டு நடத்தினர். சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் சிறப்பு அதிகாரியின் அலுலவலகத்தில் நடைபெற்ற இந்த ரெய்டால் அங்கு பரபரப்பு நிலவியது.

டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக மருத்துவரான நிகுஞ்ச் அகர்வால் நியமிக்கப்பட்டார். அவர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உறவினர் என அம்மாநில பா.ஜ.க தலைவர் விஜேந்தர் குப்தா குற்றம் சாட்டினார்.

அவருக்கு முறைகேடாக பதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் விஜேந்தர் குப்தா புகார் கூறினார். மேலும் அங்குள்ள நேரு மருத்துவமனையில் அவருக்கு உயர் பதவி வழங்கப்பட்டிருப்பதாவும் அவர் குற்றம்சாட்டினார்.

எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் அகர்வால் அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனையில் மூத்த அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.

இந்த விவகாரத்தை அண்மையில் பதவி விலகிய டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் கடந்த நவம்பர் மாதம் சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நிகுஞ்ச் அகர்வால் மீது சிபிஐ அதிகாரிகள் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நிகுஞ்ச் அகர்வாலின் அலுவலகத்தில் அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர். நிகுஞ்ச் அகர்வால் எந்த நேர்காணலும் இன்றி மருத்துவமனையின் மூத்த அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எந்த நேர்காணலோ அல்லது விளம்பரங்களோ கொடுக்கவில்லை.அப்படியிருக்கும் போது நிகுஞ்ச் அகர்வால் எப்படி திடீரென மூத்த அதிகாரியாக நியமிக்கப்பட முடியும் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி மாநில செய்தி தொடர்பாளர் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் எந்த விசாரணைக்கும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.

தமிழக அரசின் தலைமை செயலகத்தில் அண்மையில் வருமான வரி சோதனை நடத்தி சர்ச்சையாகி இருந்தது. இந்த நிலையில் டெல்லி தலைமைசெயலகத்துக்குள் சிபிஐ ரெய்டு நடத்தியுள்ளதும் சர்ச்சையாக வெடிக்கிறது.

இந்தியாவில் மொபைல் உலகில் புதிய மாற்றங்களை கொண்டுவந்த நோக்கியா நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் மொபைல் உலகை ஆக்கிரமிக்க வருகிறது. விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முயற்சியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நோக்கியா E1 மற்றும் நோக்கியா D1 ஆகிய பெயர்களில் புதிதாக இரு மாடல்களை வெளியிடவுள்ளது.

அதிநவீன தொழிநுட்பத்துடன் சந்தையை மிரட்ட வரும் இந்த நோக்கியா மொபைல்களின் சிறப்பம்சங்களை காண்போம்.

நோக்கியா E1 மற்றும் நோக்கியா D1

* நோக்கியா E1 மற்றும் நோக்கியா D1 மாடல்கள் 5.0 இன்ச் மற்றும் 5.7 இன்ச் QHD அல்லது ஃபுல் எச்டி தரம் கொண்ட டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

* இந்த வகை மாடல் ஸ்மார்ட்போனில் சென்சிட்டிவ் கீ பட்டன்கள், LED பிளாஷ்லைட் உடன் கூடிய டிஸ்ப்ளேவுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

* இதில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 6ஜிபி ரேம், 23 எம்பி கேமரா மற்றும் செய்ஸ் லென்ஸ் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* நோக்கியா E1 மற்றும் நோக்கியா D1-ல் எல்ஜி டிஸ்ப்ளே, சென்ச்சுரி டெக்னாலஜியுடன் வெளிவரும் என கூறப்படுகிறது.

சென்னையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து, அந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க சசிகலாவும் ஒப்புதல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா நாளை பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் என்பதால் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கட்சிக்கு தலைமை ஏற்பது மட்டுமின்றி தமிழக முதலமைச்சராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தி வரும் நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் இது குறித்தும் ஆலோசனை நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்து 50 நாட்கள் கடந்து விட்டன. 50 நாட்களில் நிலைமை சரியாகி விடும் என்றனர் பிரதமரும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும். ஆனால், நிலைமை நாளுக்கு நாள் மோசமானதே மிச்சம்.

இந்த நிலையில் சுசித்ரா விஜயன் என்ற வழக்கறிஞர், அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மத்திய அரசு எடுத்த இந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் செல்லாது என்ற நடவடிக்கை முற்றிலும் அரசியல் அமைப்புக்கு எதிரான செயல் என்பதை சட்டப் பிரிவுகளின் வழியில் ஆராய்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார்.

1. மக்களை நேரடியாகப் பாதிக்கும் எந்தவொரு கொள்கை முடிவாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னரே அமல்படுத்த வேண்டும்.

2. இந்திய அரசியலைமைப்புச் சட்ட விதி 21-ன் படி, இந்தியக் குடிமகன் தனது இயல்பான வாழ்க்கையை வாழும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விதியை மீறி இருக்கிறது அரசின் இந்த 'டீமானிட்டைசேஷன்' நடவடிக்கை. மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்திருக்கிறது. இதுவரை 'டீமானிட்டைசேஷன்' நடவடிக்கையால் 100-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர்.

3. ரிசர்வ் வங்கி சட்டப் பிரிவு 26 (1)-ன் படி, சட்டப்பூர்வ முழு உரிமை தருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் கையொப்பமிட்ட ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவருக்கு, அந்த உரிமையைப் பாதுகாப்பதாக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 26 (2)-ன் படி, மக்களிடையே புழக்கத்தில் விடப்படும் ரூபாய் நோட்டுகளில், குறிப்பிட்ட வரிசை எண் கொண்ட நோட்டுகளை மட்டும் தேவைப்பட்டால் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மத்திய அரசு முழுமையாக அனைத்து ரூபாய் நோட்டுகளையும் புழக்கத்திலிருந்து நீக்குவதற்கு ரிசர்வ் வங்கி சட்டத்தில் எந்த ஒரு பிரிவும் இடம்பெறவில்லை.

4. ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 24 (2)-ன் படி, "மத்திய அரசு, குறிப்பிட்ட மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்யவோ, புழக்கத்தில் தொடரவோ வேண்டாம் என்று உத்தரவிடலாம்".

24, 26 ஆகிய இரண்டு சட்டப் பிரிவுகளின்படி பார்க்கும்போது, தற்போது எடுக்கப்பட்டுள்ள 'டீமானிட்டைசேஷன்' நடவடிக்கையானது, பிரிவு 26-க்கு முற்றிலும் தொடர்பில்லாமல் இருக்கிறது. ஆனால் மத்திய அரசின் அரசிதழ் அறிவிப்பு 2652, சட்ட பிரிவு 26 (2)-ன் கீழ் வெளியிடப்பட்டிருக்கிறதே தவிர, பிரிவு 24 (2)-ன் கீழ் வெளியிடப்படவில்லை.

5. மேலும் அந்தப் பிரிவின் கீழ், பழைய பணத்துக்குப் புதுப் பணம் என்கிற "பணப் பரிமாற்றம்" என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை. எனவேதான், அரசு சொல்லக் கூடிய இந்த நடவடிக்கை, உண்மையில் 'டீமானிட்டைசேஷனே' அல்ல. இந்த அறிவிப்பைப் பொறுத்தவரை 'டீமானிட்டைசேஷன்' என்ற வார்த்தையே தவறு.

6. மிக முக்கியமாக அரசியலைமைப்புச் சட்டம் 300 A-ஐ அரசு மீறி இருக்கிறது. சட்டம் 300 A-ன் படி, "எந்தவொரு மனிதனின் சொத்துக்களையும், அதிகாரத்தின் பேரில், எடுத்துக்கொள்ள அனுமதியில்லை". ஒருவரிடம் உள்ள ரூபாய் நோட்டுகளும் சட்டம் 300 A-ன் படி, ஒருவருடைய சொத்தாகவே பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது, ஒருவரை இவ்வளவு ரூபாய்தான் டெபாசிட் செய்ய வேண்டும், இவ்வளவுதான் எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடு செய்வது முடியாது.

மொத்தத்தில் அரசிதழ் அறிவிப்பு 2652-ல், நவம்பர் 8-ம் தேதி அரசு வெளியிட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, முற்றிலும் அரசியலைமைப்பு விதிகளை மீறியிருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை. ஆனால் இதைப் பற்றி யாரும் பேசவோ, கேள்வி எழுப்பவோ தயாராக இல்லை. ஏன்? என்று அந்த வழக்கறிஞர் தனது மனுவில் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது கேள்வியிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று நடந்தது. இதில் அக்கட்சி பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தீர்மான நகல் சசிகலாவிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற 31-ம் தேதி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பார் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதன்படி, 31-ஆம் தேதி மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் இதற்கான விழா நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தான் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் என்று கூறுவதால் ராம்மோகனராவுக்கு தலையில் கொம்பு முளைத்துவிட்டதா? என முன்னாள் மூத்த தலைமை செயலாளர் (ஓய்வு) ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தமிழ் இந்து நாளிதழில் அவர் கூறியுள்ள கருத்து வருமாறு.. 
அதிகார மையத்தின் உச்சியில் இருப்பவர்களை ப்யூரோகிராட்டுகள் என்பார்கள் , அவர்களை பொதுவாக மக்கள் விரும்புவதில்லை , இதற்கு 'ப்யூரோக்ராட்'டுகளின் நடத்தையும், அவர்கள் மக்களை அணுகும் அகங்காரத் தோரணைகளும் பிரதான காரணமென்பதை மறுப்பதற்கில்லை.இருப்பினும், 'ப்யூரோக்ராட்'டும் ஒரு மனிதர்தான்.

இன்னொரு விளைவையும் கவனிக்க வேண்டும். எந்த ஆயுதமும் தனக்கெதிராகவே செயல்படாது. ஒரு கத்தி தன்னைத்தானே அறுக்காது; ஒரு துப்பாக்கி தன்னைத்தானே சுட்டுகொள்ளாது. காவல் துறை, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்களிடம், அந்தந்தத் துறையினரே ரெய்டுகளோ மற்ற குற்றத் தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொண்டதாகக் கேள்விப்பட்டதுண்டா?.

ராம மனோகர ராவின் ஊடகப் பேட்டிக்கு வருவோம். அவர் ஒரு 'ப்யூரோக்ராட்' அல்லது ஐ.ஏ.எஸ். என்பதாலேயே அவர் சொல்வதெல்லாம் அபத்தம் என்று எடுத்துக்கொள்வது சரியல்ல.

அதே சமயம் தான் இன்னும் தலைமைச் செயலர்தான், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டதாலேயே, தான் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தக் கூடாதவர் என்றெல்லாம் அவர் அரசுக்குச் சவால் விடுவது ஏற்கத்தக்கதல்ல.

அவரது இடத்தில் இன்னொருவரை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துவிட்ட நிலையில், அதை மதித்து நடப்பதுதான் நாகரிகம். தலைமைச் செயலராக இருந்தவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்.

விதிகளுக்கோ, நியாயத்திற்கோ அந்த ஆணை புறம்பானதென்று அவருக்குப் பட்டால், அதை நிர்வாக ஆணையத்திலோ, நீதிமன்றத்திலோ முறையிட தனக்கு இருக்கும் உரிமையை அவர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டதாலேயே தனக்குக் கொம்பு முளைத்துவிட்டது என்று நினைத்துக்கொள்வதும் சரியல்ல. ஜெயலலிதா, சில விஷயங்களில் தன்னைச் சார்ந்தவர்களைச் சரியாக எடை போடத் தெரியாதவராக இருந்தார் என்பது எனது கருத்து. இவ்வாறு கூறியுள்ளார்.

விநாடிக்கு 40 ஜிபி வேகத்தில் தரவிறக்கம் மற்றும் பதிவேற்றும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கத்தாரைச் சேர்ந்த ஒரேடோ நிறுவனத்துடன் இணைந்து இணைய இணைப்புகளின் வேகத்தை அதிகரிப்பது குறித்த ஆய்வில் நோக்கியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தோஹாவில் நடந்த முதற்கட்ட சோதனையில் 40 ஜிபிபிஎஸ் என்ற வேகத்தில் டவுன்லோட் மற்றும் அப்லோட் செய்யும் முறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. டிடபிள்யூடிஎம் - பிஓஎன் பைபர் தொழில்நுட்பம் (TWDM-PON fibre technology) என்ற அடுத்த தலைமுறை பைபர் இணைப்பு மூலம் இந்த மைல் கல்லை நோக்கியா நிறுவனம் எட்டியுள்ளது. இந்த தொழில் நுட்பத்தில் நான்குவிதமான ஒயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த ஒயர்கள் ஒவ்வொன்றும் 10 ஜிபிபிஎஸ் (GBPS) வேகத்துக்கு கியாரண்டி அளிக்கக் கூடியது. ஆசிய நாடுகளில் மிகக்குறைந்த இணைய வேகத்தைக் கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. அகாமய் நெட்வொர்க்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவின் சராசரி இணைய வேகம் 2.5 எம்பிபிஎஸ் (mbps) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சுமூகமாக ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கு அதிபர் ஒபாமா முட்டுக்கட்டை ஏற்படுத்தி வருவதாக அதிபராக வெற்றி பெற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

பால்ம் பீச் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அதிபர் தேர்தலில் தோல்வியை ஜீரணிக்க இயலாமல், சர்ச்சைக்குரிய கருத்துகளை தனக்கு எதிராக ஒபாமா கூறி வருவதாக தெ‌ரிவித்தார். ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறும் என்று நினைத்திருந்த நிலையில்,‌ அதற்கு இப்போது வழியில்லை என்று கருதுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். அதிபர் தேர்தலில் ஹிலாரி வெல்வார் என பலரும் எதிர்பார்த்த‌ நிலையில், அவரது தோல்வி அதிபர் ஒபாமாவுக்கு அதிர்ச்சி அளித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க அரசியல் சட்டப்படி ஒருவர் இரண்டுமுறை மட்டுமே அதிபராக முடியும் என்ற விதிமுறை இல்லாமல் இருந்திருந்தால்‌‌ தொடர்ந்து மூன்றாவது‌ முறையாக அதிபராக வெற்றி பெற்றிருப்பேன் என்றும் ஒபாமா கூறிய நிலையில், ட்ரம்ப் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது குடிபோதையில் வாகனங்களை ஒட்டுவோர் மீது சட்டப்படி ‌கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பொதுமக்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் கொண்டாட்டங்களை கண்டிப்பாக முடித்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வளாகத்திற்குள் வரும் வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தில் மீதோ அல்லது அருகிலோ தற்காலிக மேடைகள் அமைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈவ் டீசிங் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற நட்சத்திர ஹோட்டல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் நிர்வாகத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வதற்கும், இரண்டு பேருக்கு மேல் அமர்ந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் நீதிபதியாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்கவும் கோரி அதிமுக உறுப்பினர் ஜோசப் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஜனவரி 9ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கை விசாரித்த போது, ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்களுக்கு உள்ள சந்தேகம் தனக்கும் இருப்பதாக நீதிபதி வைத்தியநாதன் தனிப்பட்ட முறையில் கருத்துத் தெரிவித்தார்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்து அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக பொதுக்குழு கூட்டம் நடந்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பேனர் மாற்றப்பட்டு, ஜெயலலிதாவுடன் சசிகலா இருப்பது போன்ற பேனர் உடனடியாக பொருத்தப்பட்டது.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.