எச்-1பி விசா கெடுபிடி கலைகிறதா இளைஞர்களின் அமெரிக்க கனவு?

அமெரிக்காவில் உள்ள ஐ.டி நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு இன்ஜினியர்களை சார்ந்துதான் செயல்படுகின்றன. காரணம் குறைந்த சம்பளத்துக்கு பணியாளர்கள் கிடைப்பதுதான். இதனால் அமெரிக்க இளைஞர்களின் வேலை வாய்ப்பு வெகுவாக குறைந்தது. ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் பணியாற்றிய இடத்தில், வெளிநாட்டு தொழிலாளர்கள் நிரப்பப்பட்டனர். இவர்களில் பலர் கிரீன் கார்டு பெற்று, அமெரிக்காவில் நிரந்தரமாக பணியாற்ற மைக்ரோ சாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் உதவின. எச்.1பி விசாவை அமெரிக்கா அதிகளவில் வழங்குவதுதான், தங்களின் வேலைவாய்ப்பு பறிபோவதற்கு காரணம் என அமெரிக்கர்கள் கருதினர். ஆண்டுக்கு 85 ஆயிரம் எச்-1பி விசா வழங்குகிறது அமெரிக்கா. இதில் 65 ஆயிரம் பேர் வெளிநாட்டு பணியாளர்கள், 20 ஆயிரம் பேர் அமெரிக்காவில் படித்து பட்டம் பெற்ற வெளிநாட்டினர். இந்த விசா திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என ஐ.டி. நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த ஆண்டு எச்1பி விசா கேட்டு 2 லட்சத்து 36 ஆயிரம் பேரின் விண்ணப்பம் அமெரிக்க குடியுரிமைத் துறைக்கு வந்தது. இதனால் லாட்டரி குலுக்கல் முறை பின்பற்றப்பட்டது. 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் இந்த விசா விவகாரம் முக்கிய விஷயமாக விவாதிக்கப்பட்டது. வால்ட் டிஸ்னி உட்பட சில நிறுவனங்கள் அமெரிக்க ஐ.டி தொழிலாளர்களை வேலையில் இருந்து தூக்கி எறிந்து விட்டு, மலிவு ஒப்பந்தகாரர்களிடம் அந்தப் பணியை வழங்குவதாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிகளுமே விவாதித்தன. வெளிநாட்டினருக்கு அளிக்கப்படும் விசா முறையை தேர்தல் பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். அமெரிக்க வேலைகள் எல்லாம் அவுட்சோர்சிங் முறையில் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு செல்வதை கண்டித்தார். விசா முறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் உறுதி அளித்தார். இதற்கு டிரம்ப் ஆதாரவாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் வெளிநாட்டு திறமைசாலிகளை தக்கவைத்து கொள்வதும் முக்கியம் என்றும் கூறினார். அமெரிக்காவின் 45வது அதிபராக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப் தனது அமைச்சரவைக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இவரது கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என தீர்மானிப்பது சிரமமாக உள்ளது. ஆனால் குடியுரிமை சட்ட விதிமுறைகளை கடுமையாக்குவேன் என்ற வாக்குறுதியால், அரசியலில் தொடர்பு இல்லாத டிரம்ப் அதிபராக தேர்வு செய்ய்பட்டுள்ளார். அதனால் அவரது வாக்குறுதியை அவர் நிறைவேற்றியாக வேண்டும். எனவே தனது கொள்கைகளை அறிவித்துவிட்டார். ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவி ஏற்கும் போது அவரது உத்தரவு மூலம் விசா விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்பது தெளிவாக தெரிகிறது. 

எச்1பி விசாவும் தப்பாது. அதிலும் இந்த விசா வழங்குவதில் பல முறைகேடு நடந்திருப்பதாக டிரம்ப் நினைப்பதால்தான் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடுவேன் என்று தேர்தலில் வெற்றி பெற்ற பின் தான் எடுக்கும் நடவடிக்கை குறித்து முதல் முறையாக அறிவித்துள்ளார். முதல்கட்டமாக இன்போசிஸ், ஐபிஎம், காக்னிசென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் டிரம்ப் விசாரணை வளையத்தில் சிக்கும் என்று தெரிகிறது. மேலும் விசா வழங்கியதில் முறைகேடு நடந்தால் அந்த விசா ரத்து செய்யப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாவது இந்தியாவில் உள்ள அவுட்சோர்சிங் நிறுவனங்கள்தான். பல்லாயிரக்கணக்கான ஐ.டி இன்ஜினியர்களை இந்த நிறுவனங்கள் எச்1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு அனுப்புகின்றன. டிரம்ப்பின் விசா பிடி இறுகினால், இந்திய இளைஞர்களின் அமெரிக்க வேலை கனவு மட்டுமல்ல அங்கே ஆண்டாண்டு காலம் உயர் சம்பளத்தில் பணிபுரியும் இந்திய திறமைசாலிகளின் பணியும் எளிதாக இருக்காது என்பது மட்டும் உறுதி. மேலும் இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகம் இருக்கும். அமெரிக்க நிறுவனங்களுக்காக இங்கு பணி செய்து கொடுக்கும் இந்திய ஐடி நிறுவனங்களும் முடங்கக்கூடிய வாய்ப்பு உண்டு என்கிறார்கள் வல்லுநர்கள்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.