Latest Post

AK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க.

நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்லோனும்னு நெனைச்சிட்டிருந்த அந்த வரலாறை இன்னைக்குச் சொல்லுறேன் கேட்டுக்கோங்க.

அண்ணன் சீமான் அப்பத்தான் சிலம்பம் கத்துக்கிட்டு இருந்தாரு. திடீருனு அங்க இருந்து ஒரு தந்தி..

எங்க இருந்துனு கேக்கப்படாது!
ஈழத்துல இருந்துதான்.

"தம்பி சீமானை காண ஆவல் உடனடியாக வரவும்" இதுதான் சேதி.

அண்ணாச்சி சிலம்பம் கத்துக்குறேனு சொன்னதை புலிகளோட ஒற்றர்படை எப்படியோ கண்டுபிடிச்சி பிரபாகிட்ட சொல்லிட்டாங்க போல.
இதையேன்டா சொன்னாகனு கேக்கப்படாது. பின்னால சொல்லுவேன்.

சண்டை வேறு நடந்திட்டு இருக்கு. எப்புடி போறதுனு ஒரே யோசனை.樂

இராவோடு இராவாக நடந்தே போனா விடியக்காலம் போயிடலாம்னு சங்கரப்பா ஐடியா சொன்னதும் கட்டுச்சோத்தை லட்சுமி அண்ணிகிட்ட வாங்கி தோளில் போட்டுக்கிட்டார் அண்ணன்.

ராத்திரி 10 மணி இருக்கும். தனியா ராமேஸ்வரம் வந்து சுத்தி பார்த்தார்.
அப்பாடா!! இந்திய ராணுவம் தூங்கிட்டு இருக்கு. இப்புடியே நடந்து கெளம்பிட வேண்டியதுதான்.

பாதி தூரம் நடந்து போனதும் பசி கண்ணைக் கட்டிடுச்சி. ஓரமா உட்கார்ந்து கட்டுச்சோத்தை பிரிச்சி சாப்பிட்டுட்டு பாதியை பிரபா அண்ணனுக்கு வேணும்னு பாசத்தோட எடுத்து வெச்சிக்கிட்டார்.

காலங்காத்தால ஒரு 4.30 அல்லது 5 மணிக்கு ஈழத்தை நெருங்குனதும் சீமான் களைச்சிப் போயி அங்கயே படுத்து தூங்கிட்டார்.
திடீரென ஒரு கை மேல பட்டதும் விழுந்தடிச்சி எழுந்து பார்த்தா நம்ம பிரபா சிரிச்சிட்டு நிக்கிறாரு.

அண்ணன்: அண்ணே!! என்னைய தேடி இங்கையே வந்துட்டீங்களாண்ணே!!

பிரபா: அது வந்து தம்பி.. நீ வர நேரமாகும்னு நெனைச்சி உனக்காக ஆமைக்கறி விருந்து வைக்கலாம்னு வேட்டைக்கி வந்தேன்.
சரி வா சேர்ந்து போவோம்னு பிரபா கூப்பிட்டதும் துள்ளி சோம்பல் முறித்து கிளம்பினார் அண்ணன்.

அண்ணன்: அண்ணே வேட்டைக்கு எதுவுமில்லாம எப்புடினே.

பிரபா: அதுக்குத் தான் தம்பி இந்த தூண்டில்.

தூண்டில ஆமை வேட்டையாடி எனக்குப் பழக்கமில்லைனே என்று பணிவுடன் சொன்னார் நம் அண்ணன் சீமான்.

சரி விடு. உனக்குத் துப்பாக்கிலேயே ஆமை வேட்டையாட கத்துக் கொடுக்கிறேன் என்றார் பிரபா. 
சீமானுக்குப் புரியவில்லை.

"துப்பாக்கியே இல்லையே எப்புடினே" அப்பாவியாகக் கேட்டார் அண்ணன் சீமான்.

அட இதுக்கா கவலை!!
பிரபா சைகை மொழியில் ஏதோ சொன்னதும் சிங்கள ராணுவ வீரன் ஒருத்தன் துப்பாக்கியுடன் வந்து நிற்கிறான்.

"அண்ணே பயமா இருக்குனே" இது சீமான்.

பயப்படாத தம்பி! இவன் நம்ம ஆள்தான். ராணுவமே நம்மளோடதுதான் என்று இருவரும் இயல்பாக தோளில் கை போட்டு பேசிக் கொண்டே கடலை அடைகிறார்கள்.

அண்ணே இவ்ளோ வெயிட்டான துப்பாக்கியா இருக்கே இதுக்குப் பேரு என்னண்ணே என்றார் சீமான்.

இதுக்குப் பேருதான் தம்பி #AK74 இதை வெச்சிட்டு சும்மா வளைச்சி வளைச்சி சுடலாம் என்று சொன்னதும் தன்னோட முழு பலத்தையும் பயன்படுத்தி வளைத்துப் பார்த்தார் சீமான்.

ம்ஹூம்.. துப்பாக்கி கொஞ்சங்கூட வளையலே


அய்யோ தம்பி.. அப்படியல்ல என்று துப்பாக்கியை வாங்கி அதைப் பயன்படுத்துவது பற்றி சொல்லிக் கொடுத்தார் பிரபா.

அண்ணன்: ஏண்ணே இதுக்கு முன்னால வந்துட்டு போனாங்களே கோவாலு, நெடுங்காலி, நக்கீரனுக்கெல்லாம் துப்பாக்கி சுட கத்துக் கொடுத்தீங்களாண்ணே.

பிரபா: இல்லை தம்பி ஏன் கேக்குற?
அண்ணன்: "சும்மாதாண்ணே"

இந்திய ராணுவத்துல கூட இது கிடையாது தம்பி என்றார் பிரபா. அப்படியாண்ணே அப்படினா இந்தியாவுலேயே நான்தான் மொதல்ல #AK74 வெச்சி வேட்டையாட போறேனாண்ணே என்று கண்கள் விரிய ஆச்சரியத்தில் கேட்டார் சீமான்.

இல்லை தம்பி உலகத்துலயே நீதான் பர்ஸ்ட் என்று பெருமையுடன் தோளில் தட்டிக் கொடுத்தார் பிரபா.

ஒருவழியாக துப்பாக்கி சுடக் கற்றுக் கொண்டதும் ஆமைகளை வளைச்சி வளைச்சி "டுமீல் டுமீல்" என்று சுட்டுத் தள்ளினார் சீமான். பாவம் தூண்டிலைப் போட்டுக் காத்திருந்த பிரபா எதுவும் சிக்காததால் சீமானை பார்த்துக் கொண்டு பாறைமீது உட்கார்ந்திருந்தார்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு போர் வந்துவிட்டதோ என்று ஓடிவந்த கடலோர ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் சீமான் துப்பாக்கி சுடும் வேகத்தைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போயினர். இவர் ஒருத்தரைக் கொண்டே பிரபா அண்ணன் ஈழத்தை வென்றுவிடுவார் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

பிறகு ஒரு பையனை அழைத்து அந்த ஆமைகளை அள்ளி ஒரு சாக்குப் பையில் போட்டுக் கொண்டு முகாமுக்கு கிளம்பினர்.

சீமானுக்கு தன் கையாலேயே சமைத்துத் தர வேண்டுமென்ற ஆசையில் ஆமைக்கறி வறுவல், போன்லெஸ் சுக்கா, லாலிபாப் , லெக் பீஸ், ஆமைக்கறி பிரியாணி என்று பல வகையான ரெசிபி செய்து அசத்தினார் பிரபா.

உங்களுக்காக ஆசையாய் புளிச்சோறு கட்டிக் கொண்டு வந்ததை மறந்துட்டேண்ணே என்று பதட்டமடைந்தார் சீமான்.

என் தம்பி எனக்காக தமிழகத்திலிருந்து கட்டுச்சோறு கொண்டாந்திருக்கான். அந்த ஆமையெல்லாம் நீங்களே சாப்பிடுங்க என்று வீரர்களிடம் சொல்லிவிட்டு கட்டுச்சோத்தை அவிழ்த்தார் பிரபா.

அட அட அடடடா! என்னா ருசி. கட்டுச்சோத்துக்கும் ஆமைக்கறிக்கும் இப்படியொரு செம காம்பினேசன் இருக்கா தம்பி! அருமையா இருக்கு தம்பி என்று வியந்தவாறே கட்டுச் சோறு முழுவதையும் சாப்பிட்டார் பிரபா.

பிரபா சீமானுக்கு ஊட்ட, சீமான் அண்ணன் பிரபாவுக்கு ஊட்ட கண்கொள்ளா காட்சியது.

தம்பி நான் போராளியானதுக்குப் பொறவு இப்படியொரு சாப்பாடு நீ கொடுத்துத்தான் சாப்பிட்டிருக்கேன் தம்பி. நா நெம்ப மகிழ்ச்சியா இருக்கேன் தம்பி. இன்னைக்கு ஒரு நாள் முகாமுக்கு லீவு விட்டுட்டு ஆடிப்பாடி இருக்கனும் தம்பி என்று சொல்லிக் கொண்டே போராளிகளிடம் அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னார் பிரபா.

ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருக்கவா நான் இவ்ளோ தொல வந்தேன். சிலம்பம் கத்துக் கொடுண்ணே என்றார் சற்றே உரிமையுடன். அட உன்னைய எதுக்கு அழைச்சங்கிறதையே மறந்துட்டேனே தம்பி. போராளிகளே நீங்க ஆடிப்பாடி மகிழுங்கள் தம்பிக்கு பயிற்சி கொடுத்துவிட்டு உங்களோடு கலந்து கொள்கிறோம் என்றார் பிரபா.

இருபது அடியில் ஆளுக்கொரு மூங்கில் கம்புடன் களத்தில் நின்றார்கள் சீமானும், பிரபாவும். கொஞ்ச நேரத்திலேயே சீமானின் திறமையைக் கண்டுகொண்ட பிரபா "தம்பி நல்லாவே கம்பு சுத்திறீங்களே" என்று வாயார புகழ்ந்து தள்ளினார்.

தம்பி உனக்கு என்னாலே பயிற்சி கொடுக்க முடியாது. நீ வீரன் தம்பி என்றார் பிரபா.

அந்த பயிற்சியின்போதே ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டார் நம் அண்ணன். இதோ இது தான் அந்த புகைப்படம்.

                                                        @vikramathithiya டிவிட்டரிலிருந்து தொகுக்கப்பட்டது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்போட்ட பிறகு அதனை ரீ சைக்கிளிங் செய்யும் வேலையை மார்க்சிஸ்ட் கையில் எடுத்திருக்கிறது. மா.கம்யூ வாசுகி மற்றும் குழுவினரின் பாலேஸ்வரம் கருணை இல்லம் பற்றிய உண்மை அறியும் குழு அறிக்கை இன்றைய தமிழ் இந்துவில் வெளியாகியிருக்கிறது. நல்லது, என்.ஜி.ஓக்கள் மற்றும் மத நிறுவனங்களால் நடத்தப்படும் சேவை மையங்களை தொடர்ந்து கண்காணிப்பதும் அதன் நோக்கங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதும் அவசியம் செய்யப்பட வேண்டியவைதான். ஆனால் அதனை வாசுகி மற்றும் குழுவினர் செய்திருக்கும் விதம் ஒரு எலைட் என்.ஜி.ஓ பாணியில் இருக்கிறது என்பதுதான் கவலையுற வைக்கிறது. ஒருவேளை பத்ரி சேஷாத்ரி மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து அவர் இந்த அறிக்கை கொடுத்திருந்தால் அதுவே இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது.

முதல் குற்றச்சாட்டு, மனித எலும்பு விற்பனை.

மனித எலும்புக்கூடு விற்பனையும் மனித எலும்பு விற்பனையும் (மருந்து செய்யவாம்) நடக்கிறதா என குற்றச்சாட்டும் வகையிலான கேள்வியை எழுப்பியிருக்கிறார் வாசுகி. சும்மா கேட்டுவிட்டு கிளம்ப நீங்கள் என்ன எச்.ராஜாவா? மனித எலும்புக்கு என்ன சந்தை இருக்கிறது, அதனை எப்படி ஏற்றுமதி செய்ய முடியும், அதனை செய்ய ஏனைய அரசு நிறுவனங்கள் உதவி வேண்டுமே எனும் கேள்விகளோ தரவுகளோ இல்லை. ஆர்.எஸ்.எஸ் வாட்சப் தகவல்போல வாய்க்கு வந்ததை எழுதுவதற்கு உண்மை அறியும் அறிக்கை என பெயர் சூட்டமுடியாது. ஒருவேளை மனித எலும்புகளுக்கு பெரும் சந்தை இருப்பது நிஜம் என்றால் இந்தியாவில் பிணம் எரிப்பது தடை செய்யப்பட்டு சுடுகாடுகள் அத்தனையும் அதானிக்கு தானமளிக்கப்பட்டிருக்கும். ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அதற்கான அடிப்படைகளை விளக்க வேண்டாமா? பத்து ரூபாய் நாணயம் செல்லாது எனும் ஒற்றை வாட்சப் வதந்தியால் 6 மாதங்களுக்கு முன்பிருந்து இப்போதுவரைக்கும் அவற்றை செலவு செய்ய முடியவில்லை (சென்னைக்கு வெளியே). இந்த ஜமாவில் வாசுகி வகையறாக்களும் அய்க்கியமானால் எங்குபோய் முட்டிக்கொள்வது?

இரண்டாம் குற்றச்சாட்டு, கட்டாயப்படுத்தி தங்கவைக்கப்படும் முதியவர்கள்.

இதில் நிச்சயம் உண்மையிருக்கும்தான். ஆனால் அதனை அப்படியே விளங்கிக்கொள வேண்டுமா என்பதுதான் கேள்வி. வீட்டில் கோபித்துக்கொண்டுவரும் முதியவர்கள் இத்தகைய இல்லங்களுக்கு வருவார்கள். ஆனால் அதன் சூழல் அவர்களை இன்னும் சங்கடப்படுத்தும் ஆகவே பலர் வீடு திரும்ப விரும்பலாம். இன்னும் சில முதியவர்கள் வீட்டு நபர்களாலேயே துரத்தப்பட்டவர்கள். அவர்களும் வீடு திரும்ப விரும்பலாம். அவர்களை திருப்பி அனுப்புவதில் ஏன் நிர்வாகம் அலட்சியம் காட்டியது எனும் கேள்வி நியாயம்போல தோன்றலாம். ஆனால் அவர்கள் வீட்டை கண்டறிவதும் பிள்ளைகளிடம் அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. கைவிடப்பட்ட சிறார்களையே உறவினர்களிடம் ஒப்படைக்க முடியவில்லை. இதில் முதியவர்களை எப்படி வீட்டில் சேர்ப்பது? பெரும்பாலான முதியவர்களை அரசு அமைப்புக்களே அனுப்பியிருக்கின்றன. அவர்கள் போக விரும்பி வெளியேறினாலும் எங்கே போக இயலும்? அப்படி போய் வேறு ஏதேனும் நடந்தால் அப்போதும் வேறொரு வாசுகி வந்து ”ஏன் பாதுகாப்பில்லாமல் போக விட்டீர்கள்” என கேள்வியெழுப்பக்கூடும். போக விரும்பும் முதியவர்களை வலுக்கட்டாயமாக தங்க வைப்பதற்கான தேவை என எதை வாசுகி குழு கருதுகிறது?

இந்தியாவில் பணம் இல்லாத முதியவர்கள் நாயினும் கீழாகவே நடத்தப்படுகிறார்கள். அரசும் ஏனைய நிறுவனங்களும் முதியவர்களை தேவையற்ற சுமையாகவே கருதுகின்றன. முதியவர்களால் சம்பாதிக்க இயலாது, அவர்களுக்கு மருத்துவச்செலவு அதிகம். ஆனால் அவர்களுக்குத்தான் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் அதிகம். ரயில் நிலையம், பஸ் நிலையம் ஏனைய அரசு அலுவலகங்கள் என எங்குமே முதியோருக்கென சிறப்பு வசதிகள் இருக்காது. ஏற்கனவே சம்பாதித்து சேமித்த முதியவர்களுக்கு வட்டியை குறைத்து வயிற்றில் அடித்துவிட்டன வங்கிகள். ஆக அவர்களுக்கு இனி இருக்கும் வாய்ப்பு அடுத்தவரை அண்டி வாழ்வது அல்லது சாவுக்கு காத்திருப்பது. காசில்லன்னா சாவு நாயே என்பது எழுதப்படாத விதியாக உள்ள நாட்டில் முதியோர்கள் கைவிடப்படுவதும், அவர்களுக்கான (லாப நோக்கிலான) கருணை இல்லங்கள் உருவாவதும் அவைகள் தரமற்று இருப்பதும் நிகழ்ந்தே தீரும்.

நாம் இவற்றை வழக்கமாக பேசுவதில்லை. குறந்தபட்சம் பாலேஸ்வரம் சம்பவத்துக்கு பிறகாவது இதனை விரிவான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் வாசுகி அண்ட் கோ இதனை பாலேஸ்வரம் கருணை இல்லம் எனும் வளாகத்துக்குள்ளேயே செட்டில் செய்ய முனைவது ஒரு நாசூக்கான அராஜகம்.

அடுத்த குற்றச்சாட்டு, சுகாதாரமற்ற தங்குமிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது.

இது நிச்சயம் உறுதியான குற்றச்சாட்டுதான். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்காக யாரையேனும் தண்டிக்க விரும்பினால் நாம் நமது அரசை நடத்துவோரைத்தான் முதலில் தண்டிக்கவேண்டும். அரசு மருத்துவமனை பொது வார்டுகளை பார்த்திருக்கிறீர்களா? அங்கே தொற்று நோய் வந்தவர்களும் தொற்றா நோய் வந்தவர்களும் ஒன்றாக கொட்டப்பட்டிருப்பார்கள். செத்துக்கிடக்கும் நோயாளியோடு பல மணிநேரங்களை ஏனைய நோயாளிகள் இருக்க வேண்டும். குளியல் மக் கொண்டுதான் சிறுநீரை நோயாளிகள் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். புதிய நோயாளிகள் காலியாகப்போகும் படுக்கைக்கு அருகே காத்திருப்பார்கள். அனத்தலும், கசகசப்பும் நாற்றமுமே அங்கே நிரந்தரமாக குடிகொண்டிருப்பவை. செத்தால் தேவலாம் என நோயாளிகள் சிந்திக்க வேண்டும் எனுமளவுக்குத்தான் அரசு தமது மருத்துவமனை நோயாளிகளை நடத்துகிறது. இங்கே அதுதான் ஒரு ஏழை நோயாளியை, இயலாதவனை நடத்துவதற்கான அளவீடு. உனக்கெல்லாம் இதுவே ஜாஸ்தி எனும் தர்மகர்த்தா சிந்தனை அரசின் நிர்வாக மட்டத்தில் வேர்பிடித்திருக்கிறது. அவர்கள் பாலேஸ்வரம் இல்லத்தையும் அப்படித்தான் அனுகுவார்கள். காசு கொடுத்து தங்கவைக்கப்படும் முதியவர்களும், இயலாதவர்களும்கூட இப்படித்தான் பல இல்லங்களில் நடத்தப்படுகிறார்கள்.

இறுதி குற்றச்சாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது.

இதில் பிரதான குற்றவாளி அரசுதான். 5 மாதங்களுக்கு முன்னால் உரிமத்தை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பம் இல்லத்தின் சார்பாக வழங்கப்பட்டுவிட்டது. அதனை கிடப்பில் போட்டது அரசுதான். அங்கு தங்குவதற்கான ஆட்களை அரசு மருத்துவமனைகளும் போலீசுமே அனுப்பியிருக்கின்றன. இந்தியாவில் விதிமுறைகள் என்பவை தேவைப்படும்போது ஒருவனை சிக்க வைப்பதற்காகவும் லஞ்சம் வாங்கவுமே பயன்படுத்தப்படுகிறனவே அன்றி அவை ஒழுங்கான சேவை என்பதை இலக்காக கொண்டு பின்பற்றப்படுவதில்லை. பிணங்களை அடக்கம் செய்யும் தலைவலியில் இருந்து தான் தப்பித்துக்கொள்ள போலீஸ் அவர்களுக்கு அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் தடையில்லா சான்றிதழ் வழங்கியிருக்கிறது. ஆனால் அப்படி வழங்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. பாலேஸ்வரம் இல்லம் இப்போது மூடப்பட்டுவிட்டது. அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய அதிகாரம் வழங்கிய அதிகாரிக்கு என்ன தண்டனை? 5 மாதங்கள் உரிமத்தை தாமதித்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இவை குறித்து வாசுகி குழுவினரின் பரிந்துரைகள் என்னென்ன?

மேலும் சில கேள்விகள் எழுகின்றன..

அந்த இல்லத்தில் இருந்து வெளியேற விரும்பிய முதியவர்களின்பால் கரிசனம் கொண்ட வாசுகி குழு, அங்கே தங்க விரும்பிய முதியோரின் கோரிக்கை குறித்து ஏதேனும் யோசனை வைத்திருக்கிறதா?

அது ஒரு சாதாரண கருணை இல்லம். அரசின் கட்டமைப்பு பிரம்மாண்டமானது. அந்த அரசு ஒரு இல்லத்தை ஏற்று தற்காலிகமாகக்கூட நடத்த வக்கற்று நோயாளர்களை நலாப்பக்கமும் விசிறியடித்திருக்கிறது. ஆக 300 முதியவர்களைப் பராமரிக்கும் தகுதிகூட அரசுக்கு இல்லை என்பது தெளிவாகிறது. இது பற்றி மர்க்சிஸ்ட் இன்வெஸ்டிகேஷன் குழு எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

ஆயிரக்கணக்கான முதியோர் காப்பகங்களுக்கான தேவை நாட்டில் இருக்கிறது. வறியவர்கள் தமது வயதான பெற்றோரை கௌரவமாக பராமரிக்க மருத்துவ உதவியும் பொருளாதார உதவியும் தேவைப்படுகிறது. அது குறித்து மா.கம்யூ எப்போது பேசும்?

காலையில் கஞ்சி, மதியம் மற்றும் இரவில் “ரேஷன்” அரிசி சாதம் ஆகியவை மட்டுமே கிடைப்பதாகவும். இட்லியை பார்த்தே பல மாதங்கள் ஆனதாகவும் புகார்கள் வந்திருப்பதாக இக்குழு சொல்கிறது. ரேசன் அரிசி சாதம் மோசமான உணவு எனில் அந்த சோற்றைத்தான் அரசு பலகோடி மக்களுக்கு தலையெழுத்தென விதித்திருக்கிறது. நாம் என்ன செய்யலாம், ரேசன் அரிசியின் தரத்தை பற்றி கவலைப்படலாமா அல்லது ரேசன் அரிசி சோறு பாலேஸ்வரம் இல்லத்தில் இருப்பதைப் பற்றி மட்டும் கவலைப்படலாமா?

இதே அழகில்தான் இங்குள்ள ஆகப்பெரும்பாலான ஆதரவற்றோர் இல்லங்கள் சோறிடுகின்றன. அவற்றை எப்போது ஆய்வு செய்யலாம்? அவற்றுக்கான மார்க்சிஸ்ட் உ.அ.குவின் தீர்வு என்ன?

இப்போதைய பிரச்சினைக்குப் பிறகு பாலேஸ்வரம் இல்ல முதியவர்கள் பல இல்லங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த காப்பகங்கள் நிலை குறித்து மா.கம்யூ எப்போது ஆய்வு செய்யும்?

இதுவரைக்கும் பாலேஸ்வரம் இல்லத்துக்கு ஆட்களை அனுப்பியவர்கள் (போலீஸ், அரசு மருத்துவமனை) இனி எங்கே அனுப்புவார்கள். அரசின் அந்த வட்டாரங்களை எப்போது வாசுகி குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

வாசுகி குழுவினரின் நோக்கத்தையும் கண்ணோட்டத்தையும்கூட குறை சொல்ல வேண்டாம். அவை highly subjective. ஆனால் அதில் ஹீரோயிசம் மட்டுமே இருப்பதுதான் சிக்கல். இந்திய சமூக பொருளாதார அமைப்பை பீடித்திருக்கும் எண்ணற்ற நோய்களின் ஒரு அறிகுறிதான் பாலேஸ்வரம் இல்லம் மற்றும் அதன் விதிமீறல்கள். அதனை அற உணர்வோடும் குறைந்தபட்ச முழுமையோடும் மார்க்சிஸ்ட் அனுகியிருக்க வேண்டும். ஆனால் வாசுகியாரின் அறிக்கை இந்திய அரசுக் கட்டமைப்பின் ஒரு சிரங்கோடு செல்ஃபி எடுத்து போட்டுக்கொண்டது போல இருக்கிறது. ஆகவே அதனை அன்லைக் செய்ய வேண்டிய அவசியம் எழுகிறது.

                                                                                                                       வல்லவன் ராமதாஸ்.


சசிகலா குடும்பத்தில் நடந்த 5 நாள் ‘மெகா ரெய்டு’ வருமான வரித்துறை கைப்பற்றியது, கண்டுபிடித்தது என்ன?

சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான 187 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் நடத்திய ‘மெகா’ ரெய்டில் சிக்கிய விவரங்கள் தற்போது கசிந்துள்ளன.

இந்த ரெய்டில் வருமான வரித்துறையினர் வசம் ஏராளமான ஆவணங்கள், நகைகள், பணம், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் கடந்த 9-ந் தேதி முதல் 13ந்ேத தி வரை வருமானவரித்துறையினர் மெகா சோதனையில் ஈடுபட்டனர். ஏறக்குறைய 187 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 1800 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

சென்னை, மன்னார்குடியில் துவங்கி, ஐதராபாத், பெங்களூரு ,  புதுச்சேரி ஆகிய இடங்களில் சசிகலாவுக்கும், உறவினர்களுக்கும் சொந்தமான வீடுகளில் சோதனை நடந்தது.

சசி குடும்பத்தின் பிடியில் உள்ள, ஜெயா, 'டிவி' மற்றும், 'மிடாஸ்' சாராய ஆலையிலும், தினகரனின் வீடு, மன்னார்குடியில், திவாகரன் வீடு மற்றும் அவர்களது சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் ,பணியாளர்கள் வீடுகள் , ஜாஸ் சினிமாஸ் அலுவலகங்கள், கல்லூரிகள் உட்பட 187 இடங்களில் தொடர் வருமான வரி சோதனைகள் நடந்தன.

முதல்கட்டமாக அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் உறவினர் மருத்துவர் சிவகுமார், புகழேந்தி ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு இன்று ஆஜரானார்கள். பின்னர் சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் நேரில் ஆஜராக சம்மன்கள் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில் திடீர் திருப்பமாக சசிகலாவின் அண்ணன் மகனும், ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாக இயக்குனருமான விவேக் ஜெயராமனும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த 5 நாள் ரெய்டில் வருமானவரித்துறைக்கு கிடைத்துள்ள விவரங்கள், கண்டுபிடிப்புகள் குறித்து தகவல்கள் கசிந்துள்ளன.

1. ரூ. ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு
தி ஏசியன் ஏஜ் இணையதளம் வௌியிட்டுள்ள செய்தியில், “ சசிகலாவும், அவரின் குடும்பத்தினர்களும் ரூ. ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளனர். போலியாக பல நிறுவனங்களை நடத்தி, 50 வங்கிக்கணக்குகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்துள்ளனர். ஏராளமான போலி நிறுவனங்களை நடத்தி, குறைந்த முதலீட்டில் இயக்கியுள்ளனர். ஏறக்குறைய ரூ.6 கோடி ரொக்கப்பணம், 8.5 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக’’ அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

100 வங்கிக்கணக்குகள் முடக்கம்
இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன், ஜெயா தொலைக்காட்சியின் மேலான் இயக்குநராக இருந்து வருகிறார். இந்த ரெய்டில் முக்கியமானநபராக கருதப்பட்டவர் விவேக் ஜெயராமன். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், “ விவேக் ஜெயராமனுக்கு சொந்தமாக போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, 100 வங்கிக்கணக்குகள் செயல்பட்டது தெரியவந்துள்ளது. இந்த வங்கிக்கணக்குகள் அனைத்தையும் முடக்கியுள்ளனர்’’ எனத் தெரிவித்துள்ளது. 

ஆனால், விவேக் ஜெயராமன் தரப்பினர் மறுக்கின்றனர். அவர்கள் கூறுகையில், “ எந்தவிதமான வங்கிக்கணக்கையும் வருமானவரித்துறையினர் முடக்கவில்லை’’ என்று தெரிவித்தனர்.

இது குறித்து வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், “ விவேக் வீட்டில் இருந்து போலி நிறுவனங்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றி இருக்கிறோம். அவரின் சகோரி கிருஷ்ணப்பிரியாவின் வீட்டிலும், தணிக்கையாளர்  வீட்டில்  இருந்தும் ஏராளமான ஆவணங்களை எடுத்துள்ளோம். இந்த சொத்துக்கள் பினாமியுடையதுதானா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

மகளிர் விடுதியில் சிக்கிய ஆவணங்கள்..
சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடி அருகே சுந்திரக்கோட்டையில் செங்கமலத் தாயார் அறக்கட்டளை மூலம் மகளிர் கல்லூரி ஒன்று நடத்தி வருகிறார். இந்த கல்லூரியில் வருமானவரித்துறையினர் நடத்திய ஆய்வில் பலகோடிகள் மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள், மகளிர் தங்கும்விடுதியில் பயன்படுத்தப்படாத அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த அறை கல்லூரி முதல்வர் அறைக்கு அருகே இருந்தது என்று வருமானவரித்துறைனர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இப்போதுள்ள நிலையில்  கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மதிப்புகள், நகைகள், பணம் ஆகியவை குறித்து அறிக்கை ஏதும் வெளியிடக்கூடாது. இந்த ஆப்ரேஷன் மற்றும் ஆவணச்சரிபார்ப்பு முடியும் வரைஏதும் கூறக்கூடாது. ஆனால், பலகோடி மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், தங்கம், விலைமதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதனை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது’’ என்றார்.


பருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியாபாரிகள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பருத்தி நூலுக்கு 5 சதவீதமும், பாலிஸ்டர் நூலுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உற்பத்தி செய்த ஜவுளிப் பொருட்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜவுளித்துறை பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் கடைகளை அடைத்து 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 90 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பருத்தி நூலுக்கும், விசைத்தறி ஜவளித் தொழிலுக்கும் ஜி.எஸ்.டி.வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, கரூரில் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினர் 3வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்15 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.


ஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் அரசுத் தலைவர்களை வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஏசியானில், புரூனை (Brunei), கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த 10 நாடுகளின் அரசுத் தலைவர்களையும் வரும் குடியரசு தின விழாவிற்கு அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்படி அழைக்கப்பட்டால், வரும் குடியரசு தின விழா, 10 நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்துகொள்ளும் முதல் குடியரசு தின விழாவாக அமையும்.
ஆசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தென்சீனக் கடல் எல்லை தொடர்பாக வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனை ஆகிய நாடுகளுடன் சீனா சர்ச்சையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆசியான் கூட்டமைப்பு நாடுகளை குடியரசு தின விழாவுக்கு அழைக்கும் இந்தியாவின் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.


ஜி 20 உச்சி மாநாடு, முதலாளித்துவம், உலக மயமாக்கலுக்கான நடவடிக்கை என்று கூறி ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடும் எதிர்ப்புக்கு இடையே ஜி20 மாநாடு நேற்று ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் தொடங்கியது. மாநாட்டை எதிர்க்கும் மக்கள், “தலைவர்களை நரகத்திற்கு வரவேற்கிறோம்” என்ற பெயரில் போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தி வருகின்றனர். ஹேம்பர்க் நகர் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏராளமானவர்கள் போராடி வரும் நிலையில் நேற்று போராட்டக்காரர்கள் கார்களுக்கு தீ வைத்தனர். இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், கடைகள், மற்றும் சாலையில் இருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர்.
போராட்டம் தீவிரம் அடைந்ததால் சிறப்பு படையினர் அதிகளவில் வரவழைக்கப்பட்டனர். கண்ணீர் புகை குண்டு துப்பாக்கிகளுடன் வந்த அவர்கள் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை அவர்கள் கலைக்க முயன்றனர்.
போராட்டத்தின் போது காவல்துறையினர் 159 பேர் காயம் அடைந்திருப்பதாகவும், போராட்டக்காரர்களில் 45 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போராட்டம் தொடர்வதால் ஹேம்பர்க் நகர் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


ஈராக்கில் மொசூல் நகரை ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றும் போர் முடிவடைந்துள்ளது.
ஈராக் படைகள் ஒருபுறம் போரிட்டுக் கொண்டிருக்க, மறுபுறம், ஐ.எஸ் படையினர் மீது அமெரிக்க இராணுவ விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மொசூல் நகரத்தை ஈராக் அரசு கைப்பற்றியுள்ளது. இனி மொசூல் நகரை மறுகட்டமைப்பது என்பது பிரதமர் ((Haider al-Abadi)) ஹைதர் அல்-அபாதிக்கு ஒரு பெரும் சவால் என கருதப்படுகிறது. அத்துடன் ஐ.எஸ் அமைப்பினர் மீண்டும் பலம் பெற்று விடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் பிரதமருக்கு உள்ளது.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.